×

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: இறுதிகட்ட பிரசாரத்தில் ராகுல், பிரியங்கா உறுதி

திருமலை: தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று ஒரே வாகனத்தில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி உறுதி அளித்தனர். தெலங்கானா மாநிலத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஜஹீராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

தெலங்கானாவில் உள்ள முதல்வர் சந்திரசேகரராவுக்கு பை பை சொல்ல வேண்டும். மாற்றத்திற்கு காங்கிரஸ் வர வேண்டும். சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்திற்கு 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்குவோம். அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம். மத்தியில் பாஜகவும், தெலங்கானாவில் பிஆர்எஸ் 2 கட்சிகளும் வசதி படைத்தவர்களுக்கான கட்சி. இந்த 10 ஆண்டில் ஊழல் செய்து சம்பாதித்து விட்டார்கள். பிஆர்எஸ் மீது அனைத்து தரப்பு மக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

மோடி அவரது நண்பர்களான அதானி, அம்பானி போன்றவர்கள் வாங்கிய கடனை ரத்து செய்வார்கள். ஆனால், விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலை இல்லை. காங்கிரஸ் மட்டுமே ஏழ்மையை போக்கும். எனவே, காங்கிரசுக்கு ஒருமுறை வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஐதராபாத்தில் ஜூப்லிஹில்ஸ், நாம்பள்ளியில் பிரசாரம் செய்தார்.

முன்னதாக மாநகராட்சி ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டெலிவரி பாய்ஸ் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்து அவர்களின் பிரச்னைகள் மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அவர் பேசுகையில், ‘தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், உங்கள் குறைகள் மீது கவனம் செலுத்தப்படும். ராஜஸ்தானில் செய்ததுபோல் உங்கள் நலம் காக்க நடவடிக்கைகளை எடுப்போம். காங்கிரஸ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும்’ என்றார். பிரசாரத்தின் இறுதியாக மல்காஜ்கிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்து தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

The post தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்: இறுதிகட்ட பிரசாரத்தில் ராகுல், பிரியங்கா உறுதி appeared first on Dinakaran.

Tags : Assembly elections ,Telangana ,Congress ,Rahul ,Priyanka ,Tirumala ,Assembly ,
× RELATED தெலுங்கானா பெண் எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழப்பு