×

தேசிகருக்கு காட்சி கொடுத்த தேவநாத சுவாமி

வேதாந்த தேசிகன் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 1268ம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், திருவோணம் நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் என்னும் இடத்தில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். பின்னாளில் நிகமாந்த தேசிகன், உபயவேதாந்தாசாரியர், வேதாந்த தேசிகன் என்னும் பெயர்களால் அழைக்கப்பெற்றார்.

ஏழு வயதில் கிடாம்பி அப்புள்ளாரினால் உபநயனம் செய்விக்கப்பட்டதோடு, கல்வியும் கற்றவர், தன் இருபத்தோரு வயதில் திருமங்கை (கனகவல்லி என்றும் அழைக்கப்படும்) எனும் நங்கையை மணம் புரிந்தார். தன்னுடைய இருபத்தேழு வயதில் வைணவ குரு எனும் நிலையை அடைந்தார். பின்னர் தன்னுடைய குருவான கிடாம்பி அப்புள்ளாரின் ஆணைப்படி திருவஹீந்தரபுரம் வந்தார். திருவஹீந்திரபுரம் தலத்தில் வழிபடப்பட்டவர், ஹயக்ரீவர்.

தேவநாதன் கோயிலுக்கு வலது பக்கம் ஒரு மலைமீது கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பரிமுகன். ஹயக்ரீவரின் மந்திரத்தை, கருட பகவான் தேசிகருக்கு உபதேசித்தார். எப்போதும் அந்த மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த இவருக்கு ஹயக்ரீவர் காட்சி தந்ததோடு, அனைத்து வேத சாஸ்திரங்களையும் கற்பித்தார்.

இவரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவ மூர்த்தியை இன்றும் தேவநாதன் கோயிலில் தனி சந்நதியில் காணலாம். ஒருமுறை, ஹயக்ரீவரை தரிசனம் செய்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கிய தேசிகர், கீழே மூலவரான தேவநாதனை வழிபடாமல் பெண்ணை ஆற்றங்கரை நோக்கிச் சென்றார். அப்போது, தன்னை அவர் தரிசிக்காவிட்டாலும் தான் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்று திருவுளங்கொண்ட தேவநாதன் இவருக்கு முன் போய் நின்று காட்சி கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்குத் தன் கடமையில் பேரார்வம் கொண்டிருந்தவர் தேசிகர்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளன்று தேசிகனை, ஹயக்ரீவர் சந்நதிக்கு எழுந்தருளச் செய்து சிறப்பிக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் பத்துநாட்களிலும் தேசிகருக்கும், பெருமாளைப் போலவே விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவருடைய உற்சவ விக்கிரகத்துக்கு ரத்னாங்கி அணிவித்து அழகு சேர்த்து மகிழ்கிறார்கள்.

தேவநாதன் கோயிலில் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன், அனுமனுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கிறார். லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியைத் தன் வலது பாகத்தில் ஏந்தியபடி தரிசனம் தருகிறார். இவர்கள் தவிர, ராஜகோபாலன், வேணுகோபாலன், ரங்கநாதர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார்,
ஆழ்வார்கள் ஆகியோரும் தனித்தனி சந்நதியில் அருட் பாலிக்கின்றனர்.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடமிருந்து ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட போதிலும் முக்தியாகிய பேரின்பத்தை அடைய, இத்தலத்தின் அருகேயுள்ள சௌகந்திக வனத்தில் தவம் மேற்கொள்ள வந்தார். அப்போது வனத்தில் மூன்று வயதுப் பெண் குழந்தையை அவர் கண்டார். அந்தக் குழந்தை, அருகிலிருந்த கடல் அலைகளை பார்த்து மகிழ்ந்ததால், அதற்கு தரங்காநந்தினி (தரங்கம் என்றால் அலை.

ஆனந்தினி என்றால் மகிழக் கூடியவள்) என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அவள் திருமணப் பருவத்தை எட்டியபோது, தன் மகளை பெருமாள் ஏற்க வேண்டும் என்றும் இந்தத் தலத்திலேயே அவர் நிலை கொண்டு அருட்பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் மார்க்கண்டேயர். உடனே ஆதிசேஷன், பெருமாள் தங்குவதற்கு வசதியாக இங்கே ஒரு நகரத்தையே சிருஷ்டித்தார் என்கிறது புராணம். இந்த நகரை பெருமாளுக்கு அர்ப்பணித்ததால் இது திருவஹீந்திரபுரம் என்று அழைக்கப்பட்டது.

தேவநாதன் கோயில் அருகே உள்ள மலை மீது இந்த மலையை 74 படிகளை ஏறிச் சென்றால் ஹயக்ரீவரை தரிசிக்கலாம். அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு, போரில் மூர்ச்சித்திருந்த லட்சுமணனைக் காப்பதற்காக வந்தபோது, அந்த மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த மலை என்கிறது புராணம். இந்தப் பரிமுகன், கல்வியும் ஞானமும் அருளவல்லவர். கடலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவஹீந்திரபுரம்.

தொகுப்பு: மகி

The post தேசிகருக்கு காட்சி கொடுத்த தேவநாத சுவாமி appeared first on Dinakaran.

Tags : Devanatha Swami ,Desikar ,Vedanta Desikan ,Tiruvonam ,
× RELATED சிவ பூஜை மாநாடு