×

தெலங்கானாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி ரத்து: நிதி அமைச்சரின் பிரசாரத்தால் வந்தது சிக்கல்

திருமலை: விவசாயிகளுக்கு ரைத்து பந்து திட்டத்தின் கீழ் ரூ.7 ஆயிரம் கோடி வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால், இந்த திட்டம் பற்றி தனது பிரசாரத்தில் நிதியமைச்சர் குறிப்பிட்டதால், மீண்டும் அந்த அனுமதியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது. தெலங்கானா மாநில அரசு விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கான முதலீட்டு தொகையாக ரைத்து பந்து திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் என கடந்த 5 ஆண்டுகளாக அக்டோபர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் 2 கட்டமாக விவசாய முதலீட்டு தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நிதி அக்டோபரில் வழங்க இருந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி உதவி வழங்காவிட்டால் விவசாயம் பாதிக்கும். எனவே ரைத்து பந்து திட்டத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க அனுமதிக்க வேண்டும் என பி.ஆர்.எஸ். அரசு தேர்தல் ஆணையத்திடம் கேட்டு வந்தனர். ஆனால் தேர்தல் நேரத்தில் பணம் வழங்கினால் அது வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்குவதற்கு சமம் என்பதால் என்ன ஆகுமோ என்ற நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் தெலங்கானா மாநில அரசு ரைத்து பந்து நிதி விவசாயங்களுக்கு வழங்க அனுமதி அளித்தனர். ஆனால், இது பற்றி பிரசாரம் எதுவும் செய்யக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தெலங்கானா நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் நேற்று முன்தினம் சித்திப்பேட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் ரைத்து பந்து திட்டத்தில் அனைவருக்கும் 28ம் தேதி வங்கியில் பணம் செலுத்தப்படும் என கூறினார். இதற்காக அரசு ரூ.7 ஆயிரம் கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த இருந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து பி.ஆர்.எஸ் கட்சி ரைத்து பந்து திட்டம் கூறி பிரசாரம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து தேர்தல் ஆணையம் ரைத்து பந்து நிதி விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்துவதை நிறுத்தும்படி நேற்று மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பி.ஆர்.எஸ். கட்சியினர் இதனை வைத்து விசாயிகளை ஈர்க்க திட்டமிட்ட நிலையில் அது முடியாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post தெலங்கானாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி ரத்து: நிதி அமைச்சரின் பிரசாரத்தால் வந்தது சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Telangana ,Tirumala ,Dinakaran ,
× RELATED விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக...