×

தொடர்ந்து பெய்த மழையால் பெருமாள் ஏரி நிரம்பியது

 

குறிஞ்சிப்பாடி, நவ. 27: கனமழையால் குறிஞ்சிப்பாடி அடுத்த பெருமாள் ஏரி நிரம்பியதால், 2 ஆண்டுகளாக சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் குறிஞ்சிப்பாடி அடுத்துள்ள பெருமாள் ஏரியும் ஒன்று. 16 கிலோமீட்டர் நீளம், 1 கிலோமீட்டர் அகலம் கொண்ட ஏரியின் மொத்த பரப்பளவு 3,457 ஏக்கர் ஆகும். இதன் முழு கொள்ளளவு 574 மில்லியன் கன அடியாகும். ஏரியில் உள்ள 11 மதகுகள் மூலம் குறிஞ்சிப்பாடி பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் 6,503 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதால், அப்பகுதி விவசாயிகள் மூன்று போகம் பயிர் சாகுபடி செய்து பெரிதும் பயனடைந்து வந்தனர்.

காலப்போக்கில் ஏரியில் மரங்கள், முட்புதர்கள் முளைத்து தூர்ந்து போனது. இதனால் முப்போகம் சாகுபடி செய்த விவசாயிகள் ஒரு போகம் பயிர் செய்யவே தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்திடம் ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு பரிந்துரை செய்து ஏரியை தூர்வார ரூ.112 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2022ம் ஆண்டு ஏரியில் தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்தது.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் என்எல்சியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் பெருமாள் ஏரியின் முழு கொள்ளளவு 6.5 அடியை எட்டியது. மேலும் ஏரி தூர் வாரும் பணியால் 2 ஆண்டுகளாக சாகுபடி செய்யாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது ஏரி நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்தனர். ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் உபரி நீர் பாதுகாப்பு கருதி பரவனாறு வழியாக வெளியேற்றப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், பெருமாள் ஏரியை தூர்வார வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனு அளித்ததை தொடர்ந்து, நிதி ஒதுக்கி தூர் வாரும் பணி நடைபெற்றது. இதனிடையே அமைச்சர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை கேட்பு கூட்டத்தில் குறைகளை கேட்டறிந்து ஏரியை தூர்வாரும் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் 11 மதகுகளை பலப்படுத்தி, பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும். இப்பணி முடிந்ததும் கரைகளில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுலாத்தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எங்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஏரியை தூர்வாரி பலப்படுத்தி தந்த அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

The post தொடர்ந்து பெய்த மழையால் பெருமாள் ஏரி நிரம்பியது appeared first on Dinakaran.

Tags : Perumal lake ,Kurinchipadi ,Dinakaran ,
× RELATED என்எல்சி சார்பில் கட்டப்பட்டது அரசு...