×

கந்தனை வளர்த்த கார்த்திகை பெண்கள்

சிவனின் நெற்றிக்கண்ணில் ஆறு குழந்தைகளாகத் தோன்றிய முருகப் பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய இந்த ஆறு பேரும், அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகையான அரிய சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அந்த அரிய சக்திகளைப் பெறும் எண்ணத்துடன், அவர்கள் 6 பேரும் கயிலாய மலைக்குச் சென்றனர். கார்த்திகைப் பெண்கள், எந்த தவத்தையும் செய்யாமல், அஷ்டமா சித்திகளை வேண்டி நின்றது சிவபெருமானுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும், அவர்கள் 6 பேரும் முருகப்பெருமானை வளர்த்தவர்கள் என்பதால் அமைதியாக இருந்தார்.

சிவபெருமானின் அமைதியைக் கண்ட பார்வதிதேவி, ‘சுவாமி! நம் குழந்தை முருகனை வளர்த்த இந்தக் கார்த்திகைப் பெண்களுக்கு அந்த சக்திகளைக் கிடைக்க வழி செய்யுங்கள்’ என்றார். இதையடுத்து கார்த்திகைப் பெண்களைத் தனக்கு முன்பாக அமரச் செய்து, அஷ்டமாசித்திகள் பற்றிச் சொல்லத் தொடங்கினார் சிவபெருமான். சிறிது நேரம் அவர் சொல்வதைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள், பின்னர் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னை அவமதித்துவிட்டீர்கள். கற்றலில் கவனமில்லாத நீங்கள், கற்பாறைகளாக மாறி கவனிப்பாரில்லாமல் பூமியில் பயனற்றுப் புதைந்து போங்கள்’ என்று சாபம் கொடுத்தார். அதன் பின்னர், நானே வந்து உங்களுக்குச் சாப விமோசனம் அளிப்பேன்’ என்றார். இதைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள் முதலில் வேதனையுற்றனர். பின்னர் சிவபெருமானே வந்து சாப விமோசனம் அளிப்பேன் என்றதால் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் 6 பேரும் பூமியில் விழுந்து கற்பாறைகளாக
மாறிப்போனார்கள்.

பூமியில் கற்பாறைகளாகக் கிடந்த இடத்தில் ஒரு ஆலமரம் இருந்தது. அதிலிருந்து விழுந்த பழங்கள், அந்தக் கற்பாறைகளை முழுவதுமாக மூடிக்கொண்டன. இப்படியே சில ஆண்டுகள் கடந்த பிறகு ஒருநாள், அந்தக் கற்பாறைகளின் மேல் மூடியிருந்த பழங்கள், தானாக கீழே விழுந்தன. அப்போது பாறைகளின் எதிரில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றினார். ஈசன் பாறைகளாக கிடந்த கார்த்திகைப் பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் ஈசன், அங்கிருந்த ஆலமரத்தின் கீழ், குரு தட்சிணாமூர்த்தியாக தோன்றினார்.

‘பெண்களே! அஷ்டமாசித்திகள் எனும் அரிய சக்திகள் உங்களுக்குத் தேவையிருக்காது. அதன் பெருமைகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் அதைத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றபடி, சிவபெருமான் அவற்றிற்கான விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினார். அந்த விளக்கங்களைக் கேட்ட கார்த்திகைப் பெண்கள், இறைவனை வணங்கி சிவயோகினிகளாக மாறித் தேவலோகம் சென்றனர்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post கந்தனை வளர்த்த கார்த்திகை பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Kandan ,Lord Muruga ,Shiva ,Nitharthani ,Aparakendi ,Mekendi ,Vardayenti ,Amba ,
× RELATED சமயத்தில் வந்தருள்வாள் சமயபுரத்தாள்