×

தோஷங்களை போக்கும் குடந்தை அத்திவரதர்!

12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணத்தில் 1.03.2026 அன்று (இன்று) அத்திவரதர் பக்தர்களுக்காக அருள்பாலிக்க இருக்கிறார். அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும் முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2019-ஆம் ஆண்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு, 48 நாட்கள் பக்தர்களுக்கு சயன மற்றும் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் முதல் 24 நாட்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் தரிசனம் தந்தார்.

இதேபோல், கும்பகோணத்தில் வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோயிலிலும் அத்திவரதர் தரிசனம் நிகழ்வு நடக்க இருக்கிறது. பிரம்மன் கோயில் தெரு பகுதியில் உள்ள இந்த கோயில், கடந்த 1739-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 1800 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் ஆகியோர் தனித் தனி சந்நதிகளில் எழுந்தருளுகின்றனர். இந்த கோயிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தால், சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும் நீங்கும். நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.இந்த கோயிலில், கடந்த 1915-ஆம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டுஅத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில் 12 ஆண்டு களுக்கு பிறகு வருகிற 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பாதாள அறையில் இருந்து அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். ஆகம விதிகளின் படி, காலை 8:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களை தரிசனம் செய்ய ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். பக்தர்கள் மாசிமக உற்சவத்திலும் கலந்து கொண்டுஅத்திவரதரையும் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

குடந்தை நடேசன்

Tags : Kudanthai ,Athi Varadhar ,Kumbakonam ,Kanchipuram Varadaraja Perumal Temple ,
× RELATED சமயத்தில் வந்தருள்வாள் சமயபுரத்தாள்