பகுதி – 2
சென்ற இதழின் தொடர்ச்சி…
கூடவே, சென்னை மணலி முத்துகிருஷ்ண முதலியாருக்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதி, அதைக் கவிராயரிடம் தந்தனுப்பினார். கடிதத்துடன் சென்னைக்கு வந்த கவிராயர், அத்துடன் தானும் ஒரு சீட்டுக்கவி எழுதி, இரண்டையும் மணலி முத்து கிருஷ்ண முதலியாருக்கு அனுப்பினார். அப்போது கவிராயர் எழுதிய சீட்டுக்கவி:
“சித்திதரு கிறவல்லி பத்திதரு கிறவல்லி
தேவர்கள் வணங்கும் வல்லி
தில்லைநா யகவல்லி சிவகாம வல்லிஇரு
திருவிழிக் கருணையாலே
சத்தியவா சகன்என்று பூமண்ட லாதிபர்கள்
தாம்எங்க ணும்துதிக்கும்
சகலபா ஷாநிபுண மணலிமுத் துகிருஷ்ண
சதுரநீ வாழிகண்டாய்
நத்துமலர் குவளைநாண மதியம்நீ செஞ்சாலி
நான்கருவி மழைமேகம்நீ
நளினம்நான் பரிதிநீ பிள்ளைநான் அன்னைநீ
நான்கவிஞன் வழுதிநீகாண்
சுத்தமுள ராமாய ணந்தனைக் கொண்டுனது
சுகமுமது பெறவருகின்றேன்
சொற்பொருள் அறிந்தளவு சொல்லுவேன்
கேட்கவே துணை ஆகவேணும்நீயே’’
கவிராயரால் அனுப்பப்பட்ட கடிதங்களைக் கண்ட மணலி வள்ளல் மனம் நெகிழ்ந்தார்; கவிராயரை உடனே தம் திருமாளிகைக்கு வரவழைத்து, தகுந்த மரியாதைகளுடன் நன்கு வரவேற்றார். வரவேற்ற வள்ளலிடம், ‘‘ஐயா! கம்பர் இயற்றிய ராமாயணத்தை அனுசரித்து, ஸ்ரீராம சரிதத்தை கீர்த்தனைகளாக அடியேன் எழு தியிருக்கிறேன்.
தாங்கள் அதை மனமுவந்து கேட்க வேண்டும்’’ என்றார்.அதைக்கேட்ட மணலி வள்ளல், ‘‘ஐயா! கவிராயரே! சில நாட்களுக்கு முன்னால், பிராமணர்கள் இருவர் ராமநாடகம் ஒன்றைக் கொண்டு வந்து, இங்க பாடிப் பிரசங்கம் செய்தார்கள். அதுவாக இருக்கலாமோ இது?’’ என்று கேட்டார். கவிராயர் முகம் மலர்ந்தார்; ‘‘அதுவும் நான் பாடியதே! அது ராமாயணத்தின் ஒரு பகுதி, சுருக்கமே! அதையே இப்போது விரிவாகப் பாடியிருக்கிறேன்’’ என்றார்.
‘‘தாங்களே அதைப்பாடிப் பிரசங்கம் செய்யுங்கள்!’’ என்ற மணலி வள்ளல், அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ் அறிஞர்களும் அடியார்களும் கூடிய சபையில், கவிராயர் கீர்த்தனைகளைப்
பாடிப் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். நாள் தோறும் பிரசங்கம் நடந்து வரும் காலத்தில், ஒரு நாள் மணலி வள்ளல், ‘‘கவிராயரே! தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் பெரும் பாண்டித்தியம் பெற்ற பூம்பாவைக்குழந்தை முதலியார் என்பவர், இன்று இங்கே வருகிறார். ஆகையால், இன்று தங்கள் பிரசங்கத்தை நிறுத்தி வைத்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.
கவிராயரோ, மகிழ்ச்சியில் குரல் எழுப்பினார்; ‘‘ஆகா! ஆகா! அப்படிப்பட்ட பெரும் வித்வான் வரும்போது, அவர் முன்பாகப் பிரசங்கம் செய்வதல்லவா உயர்ந்தது; உகந்தது. அந்தப்பண்டிதர் முன், நான் பிரசங்கம் செய்துதான் ஆக வேண்டும்’’ என்று கூறி விட்டார். அப்படியே ஏற்பாடானது. அன்று கவிராயர், சுந்தர காண்டத்தில் ‘பொழிலிருத்த படலம்’ எனும் தலைப்பில் பிரசங்கம் நிகழ்த்தினார். அசோக மரத்தைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் அப்படியே,
ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. அத்தகவல்களை அறியலாம் வாருங்கள்!அசோக மரம், நெருக்கமாக பசுமையான இலைகளை உடையது. அதன் காரணமாகவே மிகவும் குளிர்ச்சியைக் கொடுக்கிறது அது. அசோக மரத்தின் நிழலில் இருந்தால், இருப்பவர்களின் சோகம் போய்விடும். அதானாலேயே அது, ‘அ சோகம்’ எனப்பட்டது. மன்மத பாணங்களில் ஒன்று அசோகமலர்; காமம் கொண்டவர்களின் கண்களில் மன்மதன் அசோகமலரைப் பிரயோகிப்பான்; அது காமவசப்பட்டவர்களுக்கு வெப்பம் உண்டாக்கும்.
அசோகமலரின் நிறம் அக்கினியைப் போல இருக்கும். அதன் தளிர், காய், கனி ஆகியவற்றின் குணம் இவையிவை. அசோகமரம் இக்காலத்தில் இல்லை. அசோகம் என்று வேறு ஒரு மரத்தைப் பெயரிட்டு வழங்குகின்றார்கள். ராவணன் ஒரு தீவில் இருந்து அசோகமரக் கன்றுகளைக் கொணர்ந்து, இலங்கையில் நட்டு வளர்த்தான். அந்த வனத்தில் தான் சீதை சிறையிருந்தாள்.
நீளநெடுக இவ்வாறு அசோகமரத்தைப் பற்றிக் கவிராயர், விரிவாகப் பிரசங்கம் செய்ததைக் கேட்ட, புகழ்பெற்ற பண்டிதர் குழந்தை முதலியார், ‘‘இதுநாள் வரையில் நான் இப்படிப்பட்ட பிரசங்கத்தைக் கேட்டதேயில்லை’’ என்று ஆச்சரியப் பட்டுப் பேசினார். ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகம் சொல்லிப் பிரசங்கத்தை நிறைவு செய்தார் கவிராயர். அவருக்குப் பரிசுகளை அள்ளி வழங்கி, மனம் மகிழச்செய்தார் மணலி வள்ளல். அதையும் ஒரு பாடலாக எழுதி, தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார் கவிராயர்.
“கனம்தந்தான் கனகாபி ஷேகந் தந்தான்
களங்கம்இல்லாக் கருப்பொருளை அழைத்துத் தந்தான்
மனம் தந்தான் முடிசூட்டு மாலை தந்தான்
வாணிசிங்கா தனத்திருத்தி வரிசை தந்தான்
இனம் தந்தான் ராமகதை எவர்க்கும் தந்தான்
எனைராமா யணக்கவிஞன் எனப்பேர் தந்தான்
அனம்தந்தான் மணலி முத்து கிருஷ்ண பூபன்
அகம் தந்தான் இருமையிலும் சுகந்தந்தானே’’
மணலி வள்ளல் தன்னை கௌரவப்படுத்தியதோடு, கனகாபிஷேகமே் செய்தார் எனக் கவிராயர் கூறுவது, வள்ளல் தன்மையை வெளிப்படுத்துவதோடு, நன்றிக் கடனையும் வெளிப்படுத்தும். இதன்பின் சிலகாலம் கழித்து, மதார்மல்க் தானிஷாவும் துளசி மகாராஜாவும் சமாதானமாக ஆனார்கள். ஆகையால் கவிராயர் தாம் ஏற்கனவே தீர்மானித்தபடி, துளசி மகாராஜா, ஆனந்த ரங்கம்பிள்ளை, உடையார்பாளையத் துரை ஆகிய பலரைக்கண்டு, ராமநாடகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரசங்கம் செய்து, பரிசுகள் பலவற்றோடு சீகாழி திரும்பினார்.
தலையில் ருத்திராட்ச மாலை, இடையில் வெள்ளை ஆடை, மேனியில் திருநீற்றுப் பூச்சு முதலானவைகளோடு, சிவப்பழமாக விளங்கினார்கவிராயர். திருமணத்திற்குப்பிறகு தில்லையாடியில் பன்னிரண்டு வருடகாலம் வசித்த கவிராயர், அதன்பின் சீகாழியில் இருபத்தைந்து வருடங்கள் வசித்தார்.
விகாரி வருடம் – ஆனி மாதம் இறைவனடி சேர்ந்த கவிராயருக்கு, அப்போது அறுபத்தேழு வயது. கவிராயர் ராம நாடகக் கீர்த்தனைகளைப் பாடிய போது, அவருக்கு வயது அறுபது.
ராமநாடகக் கீர்த்தனையுடன், அசோமுகி நாடகம் – அனுமார் பிள்ளைத்தமிழ் – காழியந்தாதி – காழிக்கலம்பகம் – காழிக்கோவை – தியாகேசர் வண்ணம் – சம்பந்த சுவாமிகள் பிள்ளைத்தமிழ் – சீகாழித் தல புராணம் எனும் பற்பல நூல்களையும் கவிராயர் எழுதியிருக்கிறார். இவருடைய பாடல்கள் பாடுபவர்களை மட்டுமல்லாமல், கேட்பவர்களையும் ஆனந்தத்தில் ஆழ்த்தும்.
பி.என்.பரசுராமன்
