×

இந்த வார விசேஷங்கள்

திருவண்ணாமலையில் தீபம்
26.11.2023 – ஞாயிறு

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், இன்று திருக்கார்த்திகை தீபம். அந்த திருக்கார்த்திகை தீபத்தைப் பார்த்து விட்டுத்தான் அவரவர்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா அதிகாலை நான்கு மணிக்குத் தொடங்கி, கோயிலில் பரணி தீபம் (பரணி தீபத் திருவிழா) ஏற்றப்படுகிறது. பிற்பகல் சுப்பிரமணியர் பிரம்ம தீர்த்தக் குளம், தீர்த்தவாரி திருவிழா திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, ​​மாலையில் ஆறு மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் – பஞ்சமூர்த்திகள் தரிசனம், அர்த்தநாரீஸ்வரர் அலங்கார தரிசனம் மற்றும் மகாதீபம் (மகா ஜோதி தரிசனம்) ஏற்றப்படும்.

அருணாசலேஸ்வரர் மலை உச்சியில் அக்னி வடிவில் காட்சி தருவார். தீப மங்கள ஜோதி நமோ நம என்று இறைவன் ஜோதி வடிவாக இருப்பதாக ஆன்றோர்கள் கூறுகின்றார்கள். வையம் வாழ வந்த வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்றார். அந்த அருட்பெருஞ்ஜோதி தான் ஆன்மிக ஜோதியாக திருவண்ணாமலையில் ஏற்றப்படுகின்றது.

ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஜோதி ஸ்வரூபம் உடையவை. இந்த ஜீவாத்மா தன்னை அறியாமல் மாயை என்னும் இருட்டில் சிக்கித் தவிக்கிறது. பேரருள் ஜோதியான அண்ணாமலையாரின் ஜோதி பிரகாசிக்கின்ற பொழுது, இந்த ஆன்மாவும் அந்த ஜோதியில் தன் ஜோதியையும் கண்டு மகிழ்கிறது. தீபம் ஏற்றுதலும் தீபத்தின் சுடரும் ஆன்மிகத்தின் அற்புதக் குறியீடுகள். திருத்தொண்டுகளிலே திருக்கோயில்களிலே தீபம் ஏற்றும் திருத்தொண்டு மிகச் சிறப்பான தொண்டு. ஒளி என்றாலே சிவம்தான். சிவத்தின் இயல்பே ஒளிவதுதான். ஒளி வளர் விளக்கான அந்த அருட்பெரும்ஜோதியை அகல்விளக்கில் காண்கிறது ஆன்மிக மனம்.

`விளக்கினாற் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும்!
துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்!
விளக்கிட்டார் பேறுசொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!
அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே’

– என்கிறது தேவாரம்.

எனவே வீடெங்கும் விளக்கேற்றுவோம். வினைகளைப் போக்கிக் கொள்வோம்.

பாஞ்சராத்ர தீபம்
27.11.2023 – திங்கள்

இன்று சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகவானுக்கு தீபங்கள் சமர்ப்பிக்கப்படும். பௌர்ணமியுடன் கிருத்திகை இணையும் நேரத்தில் தீபங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாத்திரம் கூறுகிறது. அதுவும் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தினத்தில் ரிஷப லக்னத்தில் விளக்கு ஏற்றினால் விளைச்சல் அதிகரிக்கும்; ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் நன்மை ஏற்படும் என்றெல்லாம் விதிகள் சொல்லப்பட்டு இருக்கின்றது. கார்த்திகை தீபத்தில் பெருமாள் புறப்பாடும் உண்டு. பெருமாள் கோயிலுக்கு வெளியே வந்து நிற்க, அவர் முன்னால் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறும். இது பல சிவாலயங்களிலும் நடத்தப்படும்.

திருமங்கையாழ்வார் அவதார விழா
27.11.2023 – திங்கள்

ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் கடைசி ஆழ்வார் திருமங்கையாழ்வார். இவர் சீர்காழிக்கு பக்கத்தில், திருக்குறையலூர் என்னும் திருத்தலத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதாரம் செய்தவர். திருமங்கையாழ்வார் பாடல்களை வேதசாரம் என்பார்கள்.

`நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு
இலக்கியம் ஆரண சாரம் பல சமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன்
பனுவல்களே’

– என்று இவருடைய பாசுரங்களின் சிறப்பை கூரத்தாழ்வான் பாடுவார்.

இவருக்கு நாலு கவிப் பெருமாள் என்கின்ற விருது உண்டு. `ஆசுகவி’, `சித்திரக் கவி’, `வித்தாரக்கவி’, `மதுரகவி’, என்ற நால் வகைக் கவிகளும் பாடுவதிலும் வல்லவர். வைணவத்தின் 108 திருத்தலங்களில், வடநாடு ஆரம்பித்து தென்னாடு வரைக்கும் மிக அதிகமான திருத்தலங்களைச் சென்று சேவித்து தமிழ் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்தவர்.
திருமங்கை ஆழ்வார்.

பகவானிடம் இருந்து நேரடியாக பஞ்ச சம்ஸ்காரமும் (திருநறையூர் நம்பியிடம்) மந்திர உபதேசமும் (திருவாலி கல்யாண ரெங்கநாதரிடம்) பெற்றவர். நம்மாழ்வாரின் நான்கு வேத சாரமான பொருளை தனது ஆறு பிரபந்தங்களால் அருளிச் செய்தவர். இவர் அருளிய பிரபந்தங்கள் பெரிய திருமொழி, திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய திருமடல், திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்.

பல ஆலயங்களிலே இவர் திருப்பணிகள் செய்திருந்தாலும், திருவரங்கத்தில் வெகுகாலம் தங்கி பற்பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். இவருடைய அவதார உற்சவம் எல்லா ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டாலும், சீர்காழிக்கு அருகிலே உள்ள திருநகரியில் 10 நாட்கள் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு தெற்கு நோக்கி தனிச் சந்நதியில் திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் காட்சி அளிக்கிறார். இவருக்கு தனிக் கொடி மரமும் இந்த ஆலயத்தில் உண்டு என்பது சிறப்பு.

கணம்புல்ல நாயனார் குரு பூஜை
27.11.2023 – திங்கள்

சிவத் தொண்டுகளிலே சீரிய தொண்டு எது என்று சொன்னால், சிவாலயங்களைத் தூய்மைப்படுத்துதல் அதாவது உழவாரப் பணி செய்தல் மற்றும் சிவாலயங்களில் திருவிளக்கு ஏற்றுதல். இவர் வேளூர் என்னும் ஊரிலே பிறந்து வேளாண்மை செய்து வந்தார். அந்த ஊர் குடிமக்களின் தலைவராகவும் விளங்கினார். இவர் தன்னுடைய செல்வங்களை எல்லாம் சிவாலயங்களில் திருவிளக்கிட்டு பராமரிப்பதில் செல வழித்து வந்தார். வினை வசத்தால் இவருக்கு வறுமை வந்தது. தம்முடைய ஊரை விட்டு தில்லை திருத்தலத்தை அடைந்தார். தன்னுடைய வீடு வாசல் நிலம் முதலியவற்றை விற்று திருவிளக்கு இடும் பணியைத் தொடர்ந்தார்.

செல்வங்கள் கரைந்து போயிற்று. அதனால், அவர் காட்டிற்கு சென்று புல்லை அறுத்து, அதனை விற்று அந்தப் பணத்தில் நெய் வாங்கி விளக்கிடும் பணியைத் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் அதுவும் செய்ய இயலாமல் போகவே, அந்த புல்லையே திரியாகப் போட்டு விளக்கு எரிக்க, அது சற்று நேரம் எரிந்து அணையும் தறுவாயில் வேறு வழி இன்றி, தம்முடைய நீண்ட முடியை திருவிளக்காக ஏற்றினார். இவருடைய வைராக்கியத்தைக் கண்ட சிவபெருமான், மங்கலங்களைத் தந்து சிவபதம் தந்தார். கணம்புல்ல நாயனார் குருபூஜை இன்று.

(கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்)

`இலகுவட வெள்ளாற்றுத் தென்பால் வாழு
மிருக்குவே ளூரதிப ரெழிலார் சென்னிக்
கலைநிலவா ரடிபரவுங் கணம்புல்லர் தில்லைக்
கருதுபுலீச் சரத்தாற்குக் காதற் றீப
நிலைதரத்தா மிடமிடியா லொருநாட் புல்லா
னீடுவிளக் கிடவதுவு நேரா தாகத்
தலைமயிரி னெரிகொளுவு மளவி னாதன்
றாவாத வாழ்வருளுந் தன்மை யாரே’
– என்ற பாடல் இவர் வரலாற்றை சுருக்கமாகக் கூறும்.

திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம்
28.11.2023 – செவ்வாய்

பொதுவாக பகவானை நாம் கோயிலுக்குச் சென்று சேவிக்கிறோம். ஆனால், பகவானே ஒருவரை தம்முடைய ஆலயத்துக்கு அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார் என்றால், அந்த வரலாறு எத்தனைச் சிறப்புடையது? அப்படி அனுப்பப்பட்டவர் சாதாரணமானவர் அல்ல, நான்கு வேதங்களும் படித்து கரை கண்டவர். ஆசார சீலர். அரங்கனுக்கு அந்தரங்க கைங்கரியம் செய்யும் தலைமை அர்ச்சகர். அவருடைய திரு நாமம் லோக சாரங்க மகாமுனி.

இவரை அனுப்பி அழைத்து வரச் சொன்ன ஆழ்வார்தான் திருப்பாணாழ்வார். பாண் பெருமாள் என்று இவரை அழைப்பார்கள். இறைவனுடைய பாதாதி கேசமான, திருவடி முதல் திருமுடி வரை கண்டு அனுபவித்து 10 பாடல்களைப் பாடி ஆழ்வார் என்கின்ற சிறப்பினை அடைந்தவர். இவர் ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உறையூரில் அவதரித்தவர். பாணர்குடியில் பிறந்தவர். யாழ் மீட்டிப் பாடுவதில் வல்லவர். அரங்கனையே அனவரதமும் நினைத்தவர். இவருடைய திருஅவதார தினம் இன்று கார்த்திகை ரோகிணி.

அவருடைய அற்புதமான பாசுரம் இது;
`கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன், அணியரங்கன், என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’

இந்த நட்சத்திரம் எல்லா திருமால் ஆலயங்களிலும் மட்டுமல்லாது, திருமால் அடியார்களின் திருமாளிகையிலும் அனுசரிக்கப்படும்.

சங்கரன் கோயில் பாம்பட்டி சித்தர் குருபூஜை
29.11.2023 – புதன்

`தெளிந்து தெளிந்துதெளிந்தாடு
பாம்பே – சிவன்
சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பே
ஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே – சிவன்
அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே.
நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றே
நித்திய மென்றே பெரிய முத்தி யென்றே
பாடுபடும் போதுமாதி பாத நினைந்தே
பன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே.

மிக அற்புதமாக, ஆடு பாம்பே என முடியும் தத்துவப் பாடல்களைப் பாடியவர் பாம்பட்டி சித்தர். 18 சிறந்த சித்தர்களில் ஒருவர். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் கூறுவர். பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆடு பாம்பே என்பது யோக சாஸ்திரத்தில் குண்டலினியைக் குறிக்கிறது.

அவரது குருவான சட்டைமுனியின் ஆன்மிக வழிகாட்டுதலின் பேரில், அவர் ஐந்து உறுப்புகளை ஐந்து தலை நாகமாக மாற்ற முடியும். அவர் அஷ்டமசித்தி அல்லது எட்டு அமானுஷ்ய சக்திகளுடன் ஞானம் பெற்றவர். வெகு காலம் மருதமலையில் வசித்தார். அங்கும் இவருக்கு கோயில் உள்ளது. நிறைவாக சங்கரன்கோவிலில் (திருநெல்வேலி மாவட்டம்) சமாதி அடைந்தார். கோயிலின் மேற்குப் பகுதியில் பாம்பாட்டி சித்தரின் சமாதி உள்ளது.

சங்கட ஹர சதுர்த்தி
30.11.2023 – வியாழன்

விநாயகப் பெருமானுக்குரிய சதுர்த்தி விரதம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நமக்கு வருகின்ற சங்கடங்களை இல்லாமல் செய்யும் விரதம் இது. நினைத்த காரியத்தை நிறைவேறச் செய்யும். இந்த விரதத்தை சகலரும் அனுஷ்டிக்கலாம். காலை முதல் விரதமிருந்து மாலை அருகாமையில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அறுகம்புல் மாலையை விநாயகருக்கு சமர்ப்பிக்கலாம். இந்த விரதம் சுபகாரியத் தடைகளை நீக்கும். தொழில் மற்றும் பல்வேறு முக்கியமான காரியங்களில் உள்ள தடைகளை போக்கும்.

`திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்’
– என்ற பாடலை பாராயணம் செய்யலாம்.

(விளக்கம்: திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!)

யோகிராம்சுரத்குமார் ஜெயந்தி
1.12.2023 – வெள்ளி

மஹான்களைப் பொருத்தவரை அவர்கள் வார்த்தைகளைவிட வாழ்க்கை கவனிக்கத்தக்கது. ஒரு ஆன்மிக துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் யோகிராம்சுரத்குமார். விசிறிச்சாமியார் என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். எப்பொழுது பேசினாலும் என்னுடைய தந்தையின் கட்டளை, என்னுடைய தந்தை சொன்னதைச் சொல்லுகிறேன் என்று இறைவனை சொல்வது வழக்கம். இறைவனுக்கும், சம்சாரத்தில் உலகம் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கியவர் யோகிராம்சுரத்குமார். அவருடைய ஜெயந்தி தினம் திருவண்ணாமலையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Deepam ,Tiruvannamalai ,Tirukarthikai Deepam ,Thirukarthikai Deepam ,
× RELATED நரி தலையை வைத்து வித்தை காட்டிய...