×

கள்ளக்குறிச்சி எம்.பி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

சென்னை, நவ. 25: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், இந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிஸ்னஸ் கவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகை எண்ணிடப்பட்டு, கோப்புக்கு எடுத்த முதன்மை அமர்வு நீதிபதி, இந்த வழக்கை 12வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை நீதிபதி டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post கள்ளக்குறிச்சி எம்.பி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Kallakurichi MP Special Court ,Chennai ,Tamil Nadu ,Higher Education ,Minister ,Ponmudi ,Tamil Nadu government ,
× RELATED சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட...