×

வரதராஜர் தரிசனம்

அரியலூர், கல்லங்குறிச்சியில் கலியுகவரதராஜராகப் பெருமாள் தரிசனம் தருகிறார். கருவறையில் 12 அடி உயர கம்பத்தை அனுமன் தாங்கிக் கொண்டிருக்கும் திருவுருவே உள்ளது.

கடலூர், நல்லாத்தூரில் வரதராஜப் பெருமாள் திருவருள் புரிகிறார். இவருக்கு எதிரே உள்ள கருடாழ்வாரின் உடலில் எட்டு நாகங்கள் உள்ளன. சுவாதி நட்சத்திர தினத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து 8 முறை வலம் வந்தால் கல்வி, செல்வம் விருத்தியாகும் என்பது ஐதீகம்.

சிதம்பரம், எண்ணா நகரம் போஸ்ட், கீரப்பாளையம் வழியே உள்ள கண்ணங்குடியில் வரம் தரும் ராஜர் திருக்கோயில் கொண்டுள்ளார். வேண்டும் வரங்களைத் தருவதால் இவருக்கு இந்தப் பெயர். இத்தல அனுமன், கையில் ஜபமாலை ஏந்தியிருக்கிறார். ஹஸ்த நட்சத்திரக்காரர்களின் பரிகாரத் தலம் இது.

சூளகிரியில், அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த ஆலயத்தில் எல்லாமே ஏழு மயம் & ஏழுமலை, ஏழுகோட்டை, ஏழு மகாதுவாரங்கள், ஏழடி உயர வரதராஜப் பெருமாள்!

கோவை உக்கடத்தில் கரிவரதராஜப் பெருமாளாக திருமால் அருள்கிறார். இத்தலத்தில் உத்திராயணம், தட்சிணாயணம் என இரட்டை நுழை வாயில்கள் உள்ளது சிறப்பு. இத்தல ஹயக்ரீவர் கல்வி வரம் அருள்பவராக வணங்கப்படுகிறார்.

கோவை கொழுமத்தில் கல்யாண வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார், வேதவல்லிக்கு வில்வதளங்களாலேயே அர்ச்சனை நடைபெறுகிறது.

சென்னை பூந்தமல்லியில் புஷ்பவல்லி தாயாருடன் வரதராஜரை கண்டு மகிழலாம். இவர் தலையின் பின்னே சூரியனுடன் உள்ளதால், இத்தலம் சூரியதோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மாசி விழாவின் போது திருக்கச்சி நம்பிகள், தேவராஜ அஷ்டகம் பாடி இத்தல பெருமாளை துதிக்கும் வைபவம் புகழ்பெற்றது.

கல்யாண வரதராஜரை தரிசிக்க சென்னை காலடிப்பேட்டைக்குச் செல்லவேண்டும். தாமரை வடிவ பீடத்தில் நவகிரகங்கள் அருள்வதும், உற்சவர், பவளவண்ணர் கையில் தண்டம் ஏந்தி அருள்வதும், தனிச் சிறப்புகள்.

சேலம், ஆறகழூரிலும் கரிவரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். இத்தல தாயார் கமலவல்லி 64 கலைகளும் சித்திரமாக தீட்டப்பட்ட அலங்கார மஞ்சத்தில் அமர்ந்து அருள்கிறார். இத்தல தசாவதார சுதைச் சிற்பங்களில் புத்தரும் இடம்பெற்றுள்ளார்.

பாபநாசம், அய்யம்பேட்டை, பசுபதிகோயிலில் வைணவ ஆச்சாரியரான பெரிய நம்பிக்கு அவர் இழந்த பார்வையை மீட்டுத் தந்த வரதராஜப் பெருமாளை தரிசிக்கலாம். கேட்டை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலம். மருதாணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை சேர்த்த எண்ணெயில் தீபமேற்றி பிரார்த்தித்து கண்ணொளி பெறுவது இத்தல வழக்கம்.

திருநெல்வேலி, அத்தாளநல்லூரில் யானையைக் காத்த கஜேந்திரவரதரைத் தரிசிக்கலாம். இந்தப் பெருமாளுக்கு சுத்தான்னம் நிவேதிக்கப்படுகிறது.

நெல்லையில் உள்ளது வரதராஜப் பெருமாள் திருக்கோயில். கிருஷ்ணபரமராஜன் எனும் அரசனான தன் பக்தனை எதிரியிடமிருந்து காக்க அந்த அரசனைப்போலவே வேடம் தாங்கி போரிட்டு காத்த பெருமாள் இவர். நீலநிறக்கல்லினாலான மூர்த்தி.

திருநெல்வேலி சங்காணியில் அருள்கிறார் சங்காணி வரதராஜப் பெருமாள். பெருமாளின் வலக்கரத்தின் தன ஆகர்ஷணரேகை உள்ளதால் பொன் பொருளை இவர் கரத்தில் வைத்து பக்தர்கள் நேர்ந்து கொள்கின்றனர்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அபீஷ்ட வரதராஜரை தரிசிக்கலாம். இத்தல விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயருக்கு மட்டைத் தேங்காய் கட்டி பிரார்த்தனை செய்தால் ஒரு வருடத்திற்குள் அந்த பிரார்த்தனை நிறைவேறிவிடுகிறது.

– ப.ஜெயலட்சுமி

The post வரதராஜர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Varadaraja ,Perumal ,Kaliugavaradaraja ,Ariyalur, Kallangurichi ,Hanuman ,
× RELATED கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள்...