×

நினைவுகளை அழகாக்கும் சாக்லெட் பெட்டி!

நன்றி குங்குமம் தோழி

பண்டிகை, பிறந்தநாள் விழா என்றாலே நமக்கு பிடித்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதுதான். அதையும் சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். அவ்வாறு கொடுக்கும் பரிசுகள் அவர்களின் அந்த சந்தோஷமான நாளினை அவர்கள் காலம் முழுக்க நினைக்கும் நாளாக மாற்ற வேண்டும் என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். அவ்வாறு என்றும் நீங்காத சர்ப்ரைஸ் கிஃப்டுதான் சாக்லெட் பெட்டி.

பார்க்க கேக் போல இருந்தாலும், அதில் பலவிதமான சாக்லெட்டுகள் அடுக்கப்பட்டு, அந்த பெட்டியினை திறக்கும் போது அழகாக பூப்போல் சாக்லெட்கள் எல்லாம் விரியும். பார்க்கவே அழகாக இருக்கும் இந்த கிஃப்டுகள் இப்போது இளம் ஜோடிகளுக்கு மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த கிஃப்ட் பெட்டிகளை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப உள்ளே சாக்லெட்டுகளை அழகாக அடுக்கி வைத்து தருகிறார் நிவேதா. இவர் இதனை தொழிலாகவே செய்து வருகிறார்.

‘‘நான் தொலைதூரக் கல்வி மூலமா சார்டெட் அக்கவுன்ட்ஸ் படிச்சிட்டு இருந்தேன். படிக்கும் நேரம் போக வீட்டில் சும்மா இருக்கும் நேரம், என் நண்பர்களின் பிறந்த நாள் விழாவின் போது அவர்களுக்கு சின்னதா ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும்னு நினைச்சேன். அவர்களின் புகைப்படங்களை பிரின்ட் எடுத்து கத்தரித்து புது வடிவங்களில் அவர்களுக்கு பரிசாக கொடுப்பேன். இப்படி ஒவ்வொரு நண்பர்களுக்கும் தனித்தன்மையாக ஏதாவது ஒரு பரிசுகள் கொடுத்து வந்தேன்.

அவர்களை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் நிறைய மெனக்கெடுவேன். அப்படி நான் என்னுடைய நண்பருக்கு பரிசு கொடுப்பதற்கு தேடிக் கொண்டிருக்கும் போதுதான் கேக் போன்ற வடிவத்தில் இருக்கும் சாக்லெட் நிரம்பிய பரிசுப் பெட்டியை பார்த்தேன். இது வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். அடுக்கடுக்காக இருக்கும் இந்த பெட்டிகளின் ஓரங்களில் எல்லாம் சிறிதும் பெரிதும் என நிறைய சாக்லெட்டுகள் வைத்திருப்பார்கள்.

அதை ஒன்றாக சேர்த்து கட்டி மேலே ஒரு மூடி போட்டு வைத்திடுவார்கள். பிறந்தநாளின் போது மேலே இருக்கிற மூடியை திறந்து பார்த்தால் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் சாக்லெட்டுகள் எல்லாம் அழகாக தாமரை போல விரியும். பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும். இந்த சர்ப்ரைஸ் கிஃப்டுகள் பலருக்கும் தனிப்பட்ட முறையில் சுவாரஸ்யமாகவும் நல்ல ஒரு நினைவாகவும் இருக்கும் என்று என் மனதில் தோன்றியது. அதனால் அதை நான் என் நண்பர்களுக்கு எப்படி பரிசாக கொடுக்கலாம்னு யோசித்தேன்’’ என்றவர் இதனையே தன்னுடைய முழு நேர பணியாக மாற்றி அமைத்துள்ளார்.

‘‘பொதுவாக பிறந்தநாள் என்றாலே எல்லோருக்கும் சாக்லெட்டுகளை கொடுப்பது வழக்கம். அதையே கொஞ்சம் மாற்றி பெட்டி போல் வடிவமைத்துக் கொடுத்தால் பார்க்க அழகாக இருக்கும் என்பதுதான் இந்த சாக்லெட் பெட்டியின் அடிப்படை. நான் முதலில் என் கல்லூரி நண்பர்களுக்காக சின்ன அளவில் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்றுதான் இந்தப் பெட்டியை தயாரித்தேன். சார்ட் அட்டைகளை வட்ட வடிவமாக கத்தரித்து, அதன் ஓரங்களில் சாக்லெட்டுகளை ஒட்டினேன்.

இப்படி இரண்டு மூன்று அடுக்குகளாக பெரிதும் சிறிதும் என சாக்லெட்டுகள் ஒட்டி மடித்து மேலே மூடி போட்டு மூடினேன். மூடியை திறந்து பார்த்தால் உள்ளே அழகாக பூ போல இந்த பெட்டி திறக்கும். இதற்குள்ளேயே நான் அவர்களுடைய நினைவுகளை கொண்டு வரும் புகைப்படங்கள் மற்றும் பொருட்களை கொண்டு அழகுபடுத்துவேன். இதனை மேலும் அழகாக்க பெட்டிக்குள் பட்டாம்பூச்சிகள், பூக்கள் கொண்டு டிசைன் செய்வேன்.

பெட்டியை திறக்கும் போது பட்டாம்பூச்சிகள் மற்றும் பூக்கள் பறந்து செல்வது போல் இருக்கும். இதை நான் முதலில் என் நண்பருக்காக செய்ததைப் பார்த்து மற்ற நண்பர்களும் இதே போல செய்து கொடுக்க சொல்லி கேட்டார்கள். அவர்களுக்காக சின்னச் சின்ன விஷயங்களை அந்த கிஃப்ட்டிலும் செய்து கொடுக்க ஆரம்பித்தேன். அப்படியே நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என பலரும் ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள்.

மேலும் நான் இதனை என் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தேன். அதைப் பார்த்தும் பலர் ஆர்டர் செய்தார்கள். அப்படித்தான் இது என்னுடைய முழு நேர தொழிலாக மாறியது. தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளது. முதலில் நான் மட்டுமேதான் இந்த வேலையை செய்து வந்தேன். ஆர்டர்கள் நிறைய வரவும் என் பெற்றோரும் எனக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்கள்.

இது சாக்லெட் பாக்ஸ் என்றாலும், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சர்ப்ரைஸ் வேண்டும் என்று கேட்பார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நான் இதனை வடிவமைத்து தருகிறேன். சிலர் பெட்டிக்குள் அவர்களின் புகைப்படங்களை வைக்க சொல்வார்கள். மேலும் அவர்கள் பெட்டியினை திறக்கும் போது அந்த புகைப்படங்கள் மேலே எழும்பி வரவேண்டும் என்று கேட்பார்கள். அதற்கு புகைப்படத்தினை ஸ்ப்ரிங் கொண்டு இணைந்து மூடிவிடுவேன்.

பெட்டியை திறக்கும் போது அந்த புகைப்படம் சர்ப்ரைஸாக வெளியே பவுன்ஸ் செய்யும். இது போல் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப தான் நான் இந்தப் பெட்டியை அமைத்து தருகிறேன். ஒவ்வொரு கிஃப்ட்டும் தயார் செய்ய ஆறு முதல் பத்து நாட்கள் வரை தேவைப்படும். நல்ல நினைவுகளை கொடுக்க விரும்புபவர்களுக்கான பெஸ்ட் கிஃப்ட் இந்த சாக்லெட் பெட்டி’’ என்கிறார் நிவேதா.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post நினைவுகளை அழகாக்கும் சாக்லெட் பெட்டி! appeared first on Dinakaran.

Tags : kumkum doshi festival ,Dinakaran ,
× RELATED தடிப்புச்சொறி தவிர்ப்போம்!