×

வண்டலூர் மேம்பாலத்தில் அதிகாலை பரபரப்பு; சவுக்கு கட்டை ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கூடுவாஞ்சேரி: ஆந்திரா ஓங்கோல் பகுதியில் சவுக்கு கட்டைகள் ஏற்றிக்கொண்டு ஈரோடுக்கு புறப்பட்ட லாரி, வண்டலூர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை கவிழ்ந்ததில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (56). லாரி டிரைவரான இவர், ஆந்திரா மாநிலம் ஓங்கோல் பகுதியில் லாரியில் சவுக்கு கட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு அடுத்த பள்ளிப்பாளையத்திற்கு நேற்று இரவு புறப்பட்டார். இன்று அதிகாலை 3 மணி அளவில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்தபோது, லாரியின் ஸ்பேரிங் ஜாயின்ட் கட்டானதால் மேம்பாலம் மீது கவிழ்ந்து சவுக்கு கடைகள் அவிழ்ந்து சாலையில் விழுந்தன. இதில், டிரைவர் பன்னீர்செல்வம் லாரிக்குள் சிக்கிக்கொண்டு தவித்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், இடுபாடுகளில் சிக்கிய டிரைவரை பத்திரமாக மீட்டனர்.

லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியில் இருந்த சவுக்கு கட்டைகள் மேம்பாலத்தை ஒட்டியபடி இருந்த ரயில்வே தண்டவாளத்தில் விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்ததும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் மற்றும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயில்வே தண்டவாளத்தில் சிதறி கிடந்த சவுக்கு கட்டைகள், கவிழந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து வண்டலூர் நோக்கி வந்த வாகனங்களை மண்ணிவாக்கம் கூட்ரோடு, வண்டலூர் மேம்பாலம் வழியாக மாற்று பாதையில் போலீசார் திருப்பி அனுப்பினர். விபத்து காரணமாக வண்டலூர் மேம்பாலத்தில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் நிலவியது.

The post வண்டலூர் மேம்பாலத்தில் அதிகாலை பரபரப்பு; சவுக்கு கட்டை ஏற்றிசென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Ongole ,Andhra Pradesh ,Erode ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை