×

முக்கால் கொடுத்த முக்கண் தேவன்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

அடர்ந்த இருள் சூழ்ந்த காடு. இயற்கை வளத்தின் அழகு எங்கும் கொட்டிக் கிடந்தன. விலங்குகள், பறவைகள், புல், பூச்சிகள் என அத்தனையும் சந்தோஷமாக வலம் வந்தன. இறைவனை நோக்கி அருளை பெறவும் முத்தி அடையவும் முனிவர்கள், ரிஷிகள், சாதுக்கள் ஆகியோர் தவம் செய்து கொண்டுயிருந்தனர்.தொன்மையான முனிவர்களில் ஒருவரான பிருங்கி முனிவர், சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்துக் கொண்டுயிருந்தார்.

அவர் உள்ளம் முழுவதும் சிவபெருமானின் உருவத்தையும், அவரின் நாமத்தையும் இடைவிடாது உச்சரித்து தம்மை மறந்து எவ்வித இடையூறும் இன்றி சிவ நாமத்தையே ஜெபித்து உயிர் வாழ்ந்து வந்தார். அன்ன ஆகாரம் ஏதுமின்றி குடிப்பதற்கு தண்ணீர்கூட வேண்டாம் என ஆழ்ந்த நிலையில் தியானித்து இருந்தார். இதனால், அறிய பல அற்புத சக்தியைப் பெற்றார்.

கைலாயத்தில், சிவபெருமான் பார்வதி தேவியோடு ஒரு சேர்த்தியாக வீற்றிருந்த பொழுது, பூவுலகில் பிருங்கி முனிவர் தவம் செய்வதை கண்டார். அருகே அமர்ந்திருந்த பார்வதி தேவி, `ஐயனே.. இந்த முனிவர் உங்களை மட்டுமே வணங்கி வருகின்றார். தந்தை நீங்கள் என்றால், தாயானவள் நான் அல்லவா? அண்ட சராசர அத்தனைக்கும் சக்தியை கொடுப்பவள் நான் தானே. எம்மையும் சேர்த்து அல்லவா வணங்க வேண்டும்?’ என்று தம் வருத்தத்தை வெளிப்படுத்தினாள்.

சிவபெருமான், சக்தியை நோக்கி, `என்னை வணங்கினாலும், நீதான் அருள் புரிய போகிறாய். உன்னை வணங்குபவருக்கும் நானே துணை இருக்கிறேன். அவ்வாறு, இருக்க, நீ.. நான்.. என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய்?’ என்று கேட்டார். `அது எப்படி? என் பக்தர்களுக்கு நான் அல்லவா பாதுகாக்க வேண்டும். நான் தாய் அல்லவா! உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காப்பது என்னுடைய கடமை அல்லவா?’ என்று கூறினாள். சிவபெருமானுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது. அவர் லேசாக நகைத்து கொண்டு, `அவருக்குப் பிடித்ததை அவர் வணங்குகின்றார். அவரைக் காப்பது நம் கடமை’ என்றார்.

`அது எப்படி? உங்களை மட்டும் நினைக்கும் முனிவருக்கு, நான் எப்படி அருள்தர முடியும்?’ என வாதிட்டாள். `தேவி, உன்னை வணங்கவில்லை என்றாலும், என்னில் பாதி அல்லவா நீ.. அப்படி இருக்கும் பொழுது, இதில் நான் – நீ என்று பிரித்து பேதம் பார்ப்பது ஏன்?’’ என்று கேட்டார், சிவபெருமான்.அதே நேரத்தில், பிருங்கி முனிவர், தன் தவ சக்தியால் கைலாயத்தில் இருக்கும் எம்பெருமானை காண வேண்டும் என்ற எண்ணம் உதித்ததும், அக்கணமே அவர் உடல் விட்டு, உயிர் மட்டும் கைலாயம் வந்து அடைந்தது.

அங்கு சிவபெருமானும் பார்வதி தேவியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் இடத்தை நோக்கி, `‘ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…’’ என்று கூறிக் கொண்டே இருக்கும்போது, தன்னை நாடி வந்த பக்தனுக்காக அருள் புரிய சிவபெருமான் எழுந்தார். பார்வதி தேவி தடுத்து நிறுத்தி அங்கேயே அமரச் செய்தாள். சிவபெருமானை காண கைலாயம் நோக்கி வந்தவர், மானசீகமாக சிவனை எண்ணியதும் அவருடைய ஜீவன் சிவபெருமானின் அருகே கொண்டு வந்துவிட்டது.

கண்ணைத் திறந்து பார்த்தவர், தான் இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தார். சிவனின் கருணை மழையில் நனைந்து, அவரின் திருவடிகளில் மட்டும் விழுந்து வணங்கினார். இதை கண்ட உமையவள், மிகவும் சினமடைந்து, `முனிவரே! நாங்கள் இருவரும் அமர்ந்து இருக்கின்றோம். எங்கள் இருவரையும் சேர்த்து அல்லவா நீர் வணங்க வேண்டும்?’ என்று கேட்டாள்.

அதற்கு முனிவர், `உலகைக் காப்பவர், ஆலவாய் அழகர் சிவபெருமானே… ஆதலால், என் கண் கண்ட தெய்வம் அவரே.. என தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கூப்பி, `ஓம் நமசிவாய’ எனத் தியானம் செய்தார்.உமையவள், முனிவர் தன்னை அவமானப் படுத்தியதாகக் கருதி, `ஏய்.. மனிதனே! நீ என்னதான் அற்புதமான சக்தியைப் பெற்றிருந்தாலும், என்னுடைய சக்தி இல்லை என்றால், உன்னால் எந்த ஒரு விதமான பணியையும் செய்ய முடியாது’ என்று கூறினாள். அதைப் பற்றி சிறிதும் செவி சாய்க்காமல் சிவப் பெருமானை நோக்கி வணங்கினார்.

சக்தியானவள், கோபத்தின் உச்சிக்கே சென்றாள், `மானிடனே! உன் உடல் நடப்பதாலும், உன் சிந்தையில் சிவபெருமானே தியானிக்கின்றாய். உன்னுடைய சக்திகளை நான் பறிக்கிறேன் பார்…’ என்று அவருடைய உடலில் இருக்கின்ற சதையையும், ரத்த ஓட்டத்தையும் பறித்துவிடுகின்றாள். இதனால், உடம்பில் தெம்பு இல்லாமல் வழுவிழந்து, உடல் தளர்ந்து, சோர்வடைந்து கீழே விழுந்துவிடுகிறார். உடம்பில், உயிரும், எலும்பும் மட்டும்தான் இருக்கிறது. பார்ப்பதற்கே மிகவும் விகாரமான தோற்றத்தில், பிருங்கி முனிவர் காட்சியளித்தார். கண்கள் பழுதடைந்தன, கைவிரலும் அசைக்க முடியாமல், நிற்பதற்கே நாடியை இழந்து விழுந்தார்.

இதைக் கண்ட சிவபெருமான், மனம் கலங்கி, `தேவி! என் மீது கொண்ட கோபத்தால் ஒரு முனிவனை இவ்வாறு தண்டிப்பது முறையாகாது’ எனக் கூறினார். முனிவருக்கு ஊன்றி நிற்பதற்கு ஒரு கோலும், நிமிர்ந்து நிற்பதற்கு ஒரு காலும் கொடுத்தார், சிவபெருமான். சிவபெருமானுக்கு எப்படி நெற்றியிலே மூன்றுவது கண்உண்டோ.. அது போலவே, அவருடைய பக்தனான முனிவருக்கு ஒரு கால் கொடுத்தார்.

முனிவரோ, சிவபெருமானின் கருணை உள்ளத்தை எண்ணி மன மகிழ்ந்து ஊன்றுகோலும், மூன்று கால்களில் சிவபெருமானை நோக்கி `எம்பெருமானே! சுடலையில் நர்த்தனம் ஆடும் தலைவனே! நின் கருணை கடல் அன்பின் சொருரூபம் நீயல்லவா அப்பனே! நீயே.. எனக்கு எந்த துயரம் வந்தாலும் அருகே நிற்பாய்’ எனக் கூறி, முக்காலுடன்
வணங்கினர்.

இந்த காட்சிகளை எல்லாம் காணப் பொறுக்காத உமையவள், `இந்த சக்தியையும் உன்னிடமிருந்து எப்படி பறிக்கிறேன் பார்’ எனக் கூறினார். சிவபெருமான், `தேவியே… முனிவரை அதிகமாக சோதித்தால், நீதான் உன்னுடைய தாய்மை குணத்தை இழந்து நிற்க போகிறாய்’ எனத் தாய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தினார், சிவபெருமான்.மனிதன் என்றாலும், தெய்வமென்றாலும், தேவர்கள் என்றாலும் ‘‘தான்’’ என்கின்ற ஆணவம் மேலோங்கி நிற்கின்ற பொழுது, பிறர் கூறுகின்ற சொற்கள் எதுவுமே காதில் விழாது.

அதேபோல, உமையவளும் சிவன் பேச்சை செவி மடுக்கவில்லை. பெண்களுக்கே உரிய சினத்தை அவள் அடைந்தாள். முனிவரின் சக்தி அத்தனையும், மறுபடியும் பார்வதி தேவி பறித்துக் கொண்டார். சிறிதும் சலிப்பு அடையாது முனிவர், வண்டு ரூபம் எடுத்து, சிவபெருமானின் தலையை மட்டுமே சுற்றிச் சுற்றி வந்தார். பின்பு, ஒரு புழு உருவம் தாங்கி சிவபெருமானின் கால்களை மட்டுமே அடிப் பிரதட்சணம் செய்து வணங்கினார்.

இச்செயலைக் கண்டவுடன், சற்று கோபம் தனிந்த பார்வதி தேவி, சிவபெருமானை நோக்கி, `உலகிற்கு அம்மையப்பனாக விளங்கும் நாம், என்னை விடுத்து உங்களை மட்டும் வணங்கும் இந்த முனிவருக்காக உங்களில் சரி பாதியை எனக்கு தந்தருள வேண்டும்’ எனக் கேட்டாள். சிவபெருமான், இதற்காகத்தான் இத்தனை காலம் காத்திருந்தார். சிவனும் சக்தியும் சேர்ந்து `அர்த்தநாரீஸ்வரர்’ வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் எண்ணம்.

அதற்கான காலத்தையும், அதை உண்டாக்கும் கருவியாக முனிவரும் வரவேண்டும் என்பதற்காகவே காத்துக் கிடந்தார். அந்த காலமும் கனிந்தது, பார்வதி தேவியின் விருப்பப்படி தன் உடலில் இடப் பாகத்தை பார்வதிக்கு வழங்கி பெண்களை கௌரவிக்கவும், ஆணும் பெண்ணும் சரி நிகராக வாழ வேண்டும் என வாழ்க்கை தத்துவத்தை மனித குலத்திற்கு உணர்த்தவும், `அர்த்தநாரீஸ்வரர்’ என்கின்ற உருவத்தை பெற்றனர்.

இருவரும் இணைந்து ஓர் உயிராக நின்ற பொழுது, இந்த அற்புதக் காட்சியைக் கண்ட முனிவர், மெய் சிலிர்த்து திருவடியில் வணங்கி, தன் அறியாமையால், தான் செய்த தவறுகளை மன்னிக்கும் படி தேவியிடம் பணிந்தார். கருணை உள்ளத்தோடு பார்வதிதேவியும் முனிவரை மன்னித்தார். `அம்மையப்பனே..!’ என்று உள்ளம் உருகி வணங்கினார். சிவபெருமான் – பார்வதிதேவி இருவரும் இணைந்து அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் ஆசிவழங்கினர்.

பின்பு, முனிவரை பார்த்து, `நீ.. பூவுலகில் சென்று உன் பெயரில் ஒரு மலையை உண்டாக்கி அதில் தவம் செய்து, பிறகு என்னுடைய கைலாயத்தை வந்தடைவாயாக’ என்று கூறினர். அவ்வாறே, பிருங்கி முனிவரும் பூவுலகில் எழுந்தருளினார். ஒரு மலையை உண்டாக்கினார். அதில் அமர்ந்து, தன்னால் சிவனும் சக்தியும் இணைந்த `அர்த்தநாரீஸ்வரர் உருவம்’ பெற்று, அதற்கு தானே காரணமாக இருந்ததை எண்ணிஎண்ணி மகிழ்ந்தார். தவநிலையில், அர்த்தநாரீஸ்வரர் உருவத்தைக் கொண்டு தவம் செய்தார்.

முனிவருக்கு அற்புதமான மூன்று கால் களையும் கொடுத்து, இடப் பாகத்தை தேவிக்கு கொடுத்த ஒரு நிகழ்வை நிகழ்த்ததன் மூலமாக, வருங்கால சந்ததினருக்கு கூற வேண்டிய செய்தியையும் சிவபெருமான் அன்றே ஒரு நாடகமாக, திருவிளையாடலை நடத்தினார். இன்று திருமணம் ஆகும் புதிய தம்பதியினர், ஒற்றுமையாக அர்த்தநாரீஸ்வரரை போல, இருக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

மேலும் சில துளிகள்…

*பிருங்கி முனிவர் தவம் செய்த மலையை நாம், `பிருங்கிமலை’ என்று அழைக்கின்றோம்.

*திருச்சி திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில், பிருங்கி முனிவருக்கு தனி சந்நதிஉண்டு.

*விஜயநகர மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் பிருங்கி முனிவரை பற்றிய செய்திகள், பல இடங்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றது.

*திருச்செங்கோடு மலை மீது குடி கொண்டிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு திருமணம் ஆகாதவர்கள் வணங்கினால், நல்ல மணவாழ்க்கையைத் தந்தருளுவார். மனக்குழப்பத்தில் ஏற்ற தாழ்வு கொண்டு பிரிந்த தம்பதியினர், கருத்து வேறுபாடு பட்ட மனநிலையில் உள்ள தம்பதியினர், வழிபட்டால் அவர்கள் மனநிலையை நல்லபடியாக செய்து, ஒன்று சேர்த்து வாழ வைக்கும் தெய்வம். கேட்பவருக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். காலவட்டத்தில் அந்த மலைக்கு `பிருங்கிமலை’ என்று மக்கள் அழைத்தனர்.

*பரங்கிமலை, ரயில் நிலையத்தில் இருந்து மிக அருகே உள்ளது இந்த திருத்தலம். இங்கு பிருங்கி முனிவரும் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், நம்முடைய துன்பங்கள் நீங்கும் என்றும், நாம் வேண்டுவது கிடைக்கும் என்றும், திருமணத் தடை இருந்தால், இத்தளத்தில் எழுந்தருளியுள்ள கோதண்டராமனை தரிசித்தால் நிச்சயம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த மலையைதான் இப்பொழுது நாம் பரங்கிமலை என்று அழைக்கின்றோம்.

முன்னொரு காலத்தில் இந்த மலையின் பெயர் பிருங்கிமலை என்றே இருந்தது. வெள்ளையருடைய ஆட்சி காலத்தில், அங்கிருந்த கோயில்களை எல்லாம் சிதைத்தனர். அதனால், காலப்போக்கில், பரங்கிமலை என்கின்ற பெயர் மாறியது.

தொகுப்பு: பொன்முகரியன்

The post முக்கால் கொடுத்த முக்கண் தேவன் appeared first on Dinakaran.

Tags : God ,
× RELATED இதயம் காணும் இறைவன்