×

இதயம் காணும் இறைவன்

பி.ஏ. முடித்த பட்டதாரி ஒருவன், சர்க்கஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான். அவன் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கவில்லை என்பதால், கிடைத்த வேலையே போதும் என கருதி சேர்ந்துவிட்டான். அந்த கம்பெனியில் கரடியொன்று இறந்துவிட்டதால், கரடி வேஷம் போடுவதுதான் இவனுக்கு கொடுக்கப்பட்ட வேலை. வேலைக்கு சென்ற முதல் நாள் அன்றே வேஷம் போட ஆரம்பித்தான். கரடியின் தோலை போர்த்திக் கொண்டு, சைக்கிள் ஓட்டி வித்தைகளை செய்து மக்களை மகிழ்வித்தான். மக்களும் சந்தோஷமாக ஆரவாரித்தார்கள்.

ஒருநாள் அவன் தன் வேலையை முடித்துவிட்டு கூண்டுக்குள் ஓய்வெடுக்க சென்றான். அங்குசென்று தன் தலைப்பாகையைகூட கழட்டவில்லை. அதற்குள் ஒரு கருங்குரங்கு கூண்டுக்குள் குதித்தது. இவனுக்கு மரண பயம் வந்துவிட்டது. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே உயிரை விடுவதா என்று சொல்லி கத்திக் கொண்டே அங்கும் இங்கும் கூண்டுக்குள் ஓடினான். கருங்குரங்கு இவனது கையை பிடித்து ‘பயப்படாதே’ என்றது. குரங்கு பேசுவதை பார்த்து இவனுக்கு ஒரே ஆச்சரியம். கருங்குரங்கு இவனது காதின் அருகில் வந்து, ‘நீ… பி.ஏ. படிச்சிட்டு கரடி வேஷம் போட்டிருக்கே. நான் எம்.ஏ. படிச்சிட்டு குரங்கு வேஷம் போட்டிருக்கேன்’ என்றதாம்.

இறைமக்களே, நம்மில் சிலர் தங்கள் சுய ரூபத்தை மறைத்து போலியாக வாழ்வதை காண்கிறோம். தேவன் தம் திருவாய் மலர்ந்து சாமுவேல் என்ற தீர்கனிடம் இப்படியாக கூறுகிறார். ‘மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்’. (1 சாமு.16:7) என்றார். உடல் கட்டமைப்பையும், முகத்தோற்றத்தையும், வசீகரமான வார்த்தைகளையும் உறுதியாக நம்புவதோ. முகத்தைப் பார்த்து தீர்ப்பிடுவதோ இறுதியில் நம்மை ஏமாற்றமடையச் செய்யும். ‘வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்’ (சங்.39:6) என கூறி இறைவேதம் நம்மை எச்சரிக்கிறது. தேவன் முகத்தைப் பார்த்து அல்ல, நம் இருதயத்தைப் பார்த்து அன்பு கூறுகிறார். வெளியே தெரியாத காயங்கள். மனதின் வியாகுலங்கள் இவைகளும் அவருக்கு மறைவானவைகள் அல்ல. ஆகவே, நாமும் பிறரின் முகத்தை அல்ல, மனதை காண முயற்ச்சிப்போம். அது நமது ஏமாற்றத்தை மட்டுமல்ல, போலியான உறவுகளையும் தொடர்புகளையும் தடுக்கவும், உண்மையான நபர்களை இனம் காணவும் உதவும்.

– அருள்முனைவர்.பெவிஸ்டன்.

The post இதயம் காணும் இறைவன் appeared first on Dinakaran.

Tags : God ,B.A. ,
× RELATED இயற்கை வடித்த லிங்கம்