×

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர்

தருமபுரி: சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்பட 11 பேர் ஆஜராகினர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கே.பி.அன்பழகன். இவர் தற்போது தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இவர் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு 5 முறை எம்எல்ஏவாகவும் 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்தநிலையில், பாப்பிரெட்டிப்பட்டி மோளையனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் ஒன்றை கொடுத்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காரிமங்கலத்தில் உள்ள கே.பி.அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 58இடங்களில் சோதனை நடத்தினர். கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதியிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கே.பி.அன்பழகனிடம் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தர்மபுரி சிறப்பு நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை தாக்கல் செய்தனர். அதில், வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் ரூ.45.20 கோடி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த வழக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து முதல் விசாரணை நவ.6ம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மணிமொழி நவ.22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜரானார். முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், தனபால் உள்பட 11 பேர் ஆஜராகினர்.

The post சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former ,AIADMK ,minister ,KP Anpahagan ,Dharmapuri ,court ,Former minister ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு மக்கள் மனதில் பாஜகவுக்கு...