×

தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 383 பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ : அரசாணை வெளியீடு

சென்னை : மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ. 57.51 கோடி செலவில் தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 380-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன் அடிப்படையில், தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் ATS எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிஐஜி, 4 எஸ்பி, 5 ஏஎஸ்பி, 13 டிஎஸ்பி, 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 383 பேர் இந்த பிரிவில் செயல்பட உள்ளனர். புதிய பிரிவை உருவாக்க 28 கோடியே 92 லட்சத்து 41,000 ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யும் காவல் நிலைய அதிகாரம் புதிய பிரிவிற்கு தரப்பட்டுள்ளது. முன்னதாக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சில சிறப்பு பிரிவு மட்டுமே தீவிரமாக விசாரிக்கும் சூழல் இருந்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை மட்டுமே விசாரிக்கும் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அளவிலேயே பிரிவை உருவாக்கி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழக காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் 383 பணியாளர்களைக் கொண்ட ‘தீவிரவாத தடுப்புப் பிரிவு’ : அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Police Intelligence Unit ,Radical Prevention Division ,Chennai ,Tamil Nadu government ,Tamil Police Intelligence Unit ,Prevention ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...