×

கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனம்: திருவண்ணாமலையில் கோலாகலமாக நடந்தது

திருவண்ணாமலை, நவ.19: கார்த்திகை தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது. தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.

தரிசனத்துக்காக அதிகாலையில் இருந்தே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனத்துக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தது. மேலும், இம்மாத இறுதிவரை சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபத்திருவிழாவின் 2ம் நாள் உற்சவம் காலை 11 மணி அளவில் தொடங்கியது. அதையொட்டி, ராஜகோபுரம் எதிரில் இருந்து மங்கள இசையும், சங்கொலியும் முழங்க, மூஷிக வாகனத்தில் விநாயகரும், தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, பக்திப் பாடல்களை பாடியபடி சிவனடியார்கள் சென்றனர்.

சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளும் காட்சி திதிக் கோலமாகும். சூரியன், சந்திரன் இயக்கத்தால், உலகம் நிலைத்துள்ளது என்பதை உணர்த்துவது திருவீதியுலா வாகனத்தின் தத்துவம். அனைத்து உயிர்களையும், அண்ட சராசரங்களையும் காக்கும் இறைவனாகிய பரம்பொருள், சூரிய, சந்திர கோள்களுக்கு இடையே ஞானம்பெறும் தீச்சுடராக விளங்குவதால் இரவும், பகலும், தட்ப வெட்பமும் உண்டாகிறது என்பதே திதி கோலத்தின் உட்பொருளாகும். அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழா இரவு உற்சவம் இரவு 10 மணியளவில் விமரிசையாக நடந்தது.

அதையொட்டி. திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து அலங்கார ரூபத்தில் புறப்பட்ட விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், 3ம் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ராஜகோபுரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்திப் பெருக்குடன் முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, அதிர்வேட்டுகள் முழங்க மாட வீதியில் பவனிவந்து அருள்பாலித்தனர். சுவாமி திருவீதியுலாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் நள்ளிரவு வரை திண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கார்த்திகை தீபத்திருவிழா 2ம் நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி நள்ளிரவு வரை பக்தர்கள் தரிசனம்: திருவண்ணாமலையில் கோலாகலமாக நடந்தது appeared first on Dinakaran.

Tags : Karthika Deepatri festival ,Tiruvannamalai ,Thiruvannamalai ,day ,Chandrasekhar ,Golden Sun ,Vehicle ,Kartika Deepatri Festival 2nd Day Festival Panchamurthy Bhavani Devotees ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 730 பள்ளி வாகனங்களின் தரம் தணிக்கை