×

செங்கல்பட்டு வெண்பாக்கத்தில் ரூ.97 கோடியில் அமைகிறது 14 ஏக்கரில் பணிமனையுடன் கூடிய புதிய பேருந்து நிலைய பணி மும்முரம்: 18 மாதங்களில் முடிக்க திட்டம்; வாகன நெரிசலுக்கு விரைவில் தீர்வு

* சிறப்பு செய்தி
செங்கல்பட்டு வெண்பாக்கத்தில் 14 ஏக்கரில் பணிமனையுடன் பல்வேறு வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சென்னையை போல் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி செங்கல்பட்டு. பணிகள் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக சென்னைக்கு வர ரயில்கள் மற்றும் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். மாவட்ட தலைநகரான செங்கல்பட்டில் அண்ணா பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. அரை ஏக்கருக்கும் குறைவான இடத்தில் உள்ள இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருப்போரூர், தாம்பரம், கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பேருந்து நிலையம் அருகில், ரயில் நிலைய நுழைவாயில், மின்வாரிய அலுவலகம், அரசு போக்குவரத்து கழக பணிமனை போன்றவை அமைந்துள்ளன.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தற்போது உள்ள பேருந்து நிலையம் அருகருகே உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பேருந்து நிலைய பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் சிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் பாதிப்படைகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. அதன்படி, செங்கல்பட்டில் ரூ.97 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைகிறது. நீண்ட நாள் கோரிக்கையான இந்த பிரச்னைகளை தீர்க்கும் பொருட்டு, புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி, சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருத்தில் கொண்டு பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகர திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நில வகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.97 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளதற்கு கடந்த 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, சிஎம்டிஏ சார்பில், புதிய நவீன பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைவதற்கான இடத்தை அண்மையில் அமைச்சர்கள், தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தனர். இந்த புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கம் பகுதியில் 14 ஏக்கரில் சுமார் ரூ.40 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ரூ.97 கோடி மதிப்பீட்டில் சுமார் 40,274 சதுர மீட்டரில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்க உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் புதிய பேருந்து நிலையம் எவ்வாறு அமைய போகிறது என்பதற்கான உத்தேச வரைபடம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணி ஒப்பந்ததாரர் தேர்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிவடைந்ததால் 15 நாட்களில் பணி ஆணை வழங்கப்படும். பணி ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களில் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 டிசம்பரில் முடிக்கப்பட வேண்டும். 7,046 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் மற்றும் 2ம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

* என்னென்ன வசதிகள்?
வெண்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகள், டிப்போவில் 61 பேருந்துகள் நிறுத்தப்படும். 1,120 சதுர மீட்டர் பரப்பளவில் பணிமனையும், 630 சதுர மீட்டர் பரப்பளவில் பணிமனை அலுவலக பகுதியையும் கொண்டிருக்கும். 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் 67 கார்கள் மற்றும் 782 இரு சக்கர வாகனங்களை நிறுத்தலாம். மேலும் 30 கடைகள் கட்டப்பட உள்ளன என சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* வெண்பாக்கத்தில் ரூ.97 கோடியில் சுமார் 40,274 சதுர மீட்டரில் பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைகிறது.
* புதிய பேருந்து நிலையத்தில் 61 பேருந்துகள் நிறுத்தம், 44 நடைமேடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
* புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிக்கு டெண்டர் முடிவடைந்ததால் 15 நாட்களில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
* 7,046 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளமுடன் கூடிய முனைய கட்டிடம் கட்டப்படுகிறது.
* கட்டிடப்பணிகளை 2024 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* 30 ஆண்டு கனவு
புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வெண்பாக்கத்தில் 14 ஏக்கரில் அமைய உள்ளது. இது, செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதி மக்களின் 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் உள்ளதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

The post செங்கல்பட்டு வெண்பாக்கத்தில் ரூ.97 கோடியில் அமைகிறது 14 ஏக்கரில் பணிமனையுடன் கூடிய புதிய பேருந்து நிலைய பணி மும்முரம்: 18 மாதங்களில் முடிக்க திட்டம்; வாகன நெரிசலுக்கு விரைவில் தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,CHENGALPATU VENPAKKA ,Chennai ,New Bus Station ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை