×

இரவு உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு… துரித உணவால் குறையும் மனிதர்கள் ஆயுட்காலம்: வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட உணவுகளை தேடும் இளசுகள்

சென்னை: தற்போதைய காலகட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆண்களோ, பெண்களோ வேலைக்கு செல்வதற்காக பகலில் பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் செலவழிக்கும் நேரம் என்பது வெகு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் 24 எப்போதும் வீட்டில் இருக்கும் சூழ்நிலை உள்ளது. பகல் நேரத்தில் அந்த குழந்தைகள் பெற்றோர்களுடன் நேரம் செலவழிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் இரவு நேரங்களில் உணவகத்திற்கு அழைத்து சென்று அங்கு நேரத்தை செலவழிக்கின்றனர். அப்போது இரவு நேரங்களில் குழந்தைகள், நண்பர்களுடன் சென்று ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகளை உட்கொள்வதும், சிக்கன், மட்டன் போன்ற பிரைடு உணவுகளையும் உட்கொண்டும், மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது. ஆனால் இந்த உணவுகளும், நேரம் கடந்து உண்பதும் உடலுக்கு மிகவும் தீங்கு என்பதை பெரும்பாலானோர் அறிவதில்லை. தற்போது சென்னையில் இரவு 11 மணிக்கு மேல் சென்று உணவு சாப்பிடுவதும், அதிகாலையில் சென்று உணவு சாப்பிடுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.

குறிப்பாக அண்ணாநகர் பகுதியில் பீட்சா, பிர்ரியா டகோஸ், நுாடுல்ஸ், மோமோஸ் மற்றும் போபா டீ முதல் இட்லி, தோசை, பிரியாணி, சிக்கன் ப்ரை, ஐஸ்கிரீம் வரை, பாரம்பரிய தென்னிந்திய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளும் கிடைக்கின்றன. இந்த பகுதிகளில் உள்ள உணவகம் இரவு 1 மணிக்கு மேல் திறந்து இருக்கிறது. மேலும் புளியந்தோப்பு பகுதியில் 2 மணியளவில் தொடங்கும் பிரியாணி கடைகள் இரவு 11 மணி வரையில் நீடிக்கிறது. அதேபோல ராயப்பேட்டை, வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட இடங்களில் பல வகையான உணவு கடைகள் இயங்கி வருகின்றன. இது போன்று இரவு மற்றும் விடியற்காலை சாப்பிடும் உணவால் ஆயுட்காலம் குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையின் உணவியல் மருத்துவர் காலாராணி கூறியதாவது:
பொதுவாக இரவு உணவு 8 மணிக்குள் சாப்பிட வேண்டும். 8 மணிக்கு சாப்பிடும் போது அதில் இருந்து கிடைக்கும் சக்தியை உடல் தூங்குவதற்கு முன் சரியாகப் பயன்படுத்தும். இதே இரவு 11 அல்லது 12 மணிக்கு சாப்பிட்டு உடனே தூங்கினால் அதில் இருந்து கிடைக்கும் அனைத்து சக்திகளும் கொழுப்பாக உடலில் தங்கிவிடுகிறது. இதனால் உடல் பருமன், சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும்.
மக்கள் பொதுவாக இரவு நேரங்களில் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், பீசா உள்ளிட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையான பாஸ்ட் புட் உணவை மைதா, டால்டா, ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய் என உடலுக்கு தீங்கு தரும் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கின்றனர்.

இதனால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் அந்த உணவு கொழுப்பாக உடலில் தங்கி மாரடைப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இரவு மட்டும் கிடைக்கும் உணவு, விடியற்காலையில் மட்டும் கிடைக்கும் உணவு என்று முறையாக இல்லை என்றால் அது உடலின் உள்ள உறுப்பு அமைப்பை (body system) மாற்றுகிறது. இரவு முறையாக தூங்கவில்லை என்றால் ஆயுட்காலம் குறைந்துவிடுகிறது. பகலில் ஓய்வெடுத்துவிட்டு இரவில் சுறுசுறுப்பாக இரைதேடி உண்ணும் விலங்குகளுக்கு இரவாடிகள் என்பார்கள், அந்த நிலையில் தற்போது பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. இந்த உடல் எனக்கு சொந்தம் என்று இஷ்டத்துக்கு உட்கொள்ளும் உணவு நச்சாக மாறி உடலை பாதிக்கும் போது அவர் மட்டும் பாதிக்கப்படாமல் அவரை சுற்றி இருக்கும் அனைவரையும் அது பாதிக்கும். எனவே பொறுப்புடன் இருக்க வேண்டும்.

மக்கள் அனைவரும் முடிந்த அளவிற்கு இரவு 8க்கு முன் சாப்பிட உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சிலர் 8 மணி நேரம் தூங்குகிறோம் என்று 2 அல்லது 3 மணிக்கு தூங்கி 11 அல்லது 12 மணிக்கு எழுகின்றனர். அதுவும் தவறு. காலை உணவு மிகவும் முக்கியமானது. அதனை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். கல்லூரி படிக்கும் மாணவர்கள் சிலர் காலை உணவு சாப்பிடுவதில்லை என்று பெருமையாக சொல்கிறார்கள். அதனைப் பின்பற்றி சில மாணவர்கள் இருக்கின்றனர்.

காலை உணவு சாப்பிடவில்லை என்றால் உடலில் இருக்கும் உறுப்புகள் பல்வேறு இடங்களில் இருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். அதனால் பல்வேறு வகையான உடல் அபாயம் ஏற்படும். எனவே காலை உணவு மற்றும் இரவு உணவு சரியான நேரத்தில் அளவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள பலர் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இரவு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேர வேலைக்கு செல்லும் நபர்கள் உடலும், மனதும் ஒத்துழைக்கும் விதத்தில் பழக்க வழக்கங்களிலும், உணவு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இரவு பணிக்கு செல்லும் நபர்கள் 8 மணிக்கு இரவு உணவை முடித்து பணிக்கு செல்ல வேண்டும். அதற்கு பிறகு இரவு 11 மணிக்கு பழங்கள், காய்கறி, ஜூஸ் வகைகள், தானிய வகை சாலட்டுகள் சாப்பிடலாம். அதற்கு பிறகு கோதுமை பிரட், உலர் திராட்சை, வறுத்த தானியங்கள், பாலாடை கட்டி, குறைந்த கொழுப்பு கொண்ட பால், சாண்ட்விச்சுகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். பசியை போக்குவதற்கு பாஸ்ட்ஃபுட், சமோசா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. அதிக நார்ச்சத்து உடன் இருக்கும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு பணி முடித்து வீட்டிற்கு வந்து காலை உணவு சாப்பிட்டு தூங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு தாமதாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்னைகள்
இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இரவு நேரத்தில் நாம் எளிதில் ஜீரணமாகக் கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும். இல்லையெனில், அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். தொடர்ந்து இது போன்று சாப்பிட்டால் நீரிழிவு நோய், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, பக்கவாதம், மாரடைப்பும் உள்ளிட்டவை ஏற்படும்.

இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐஸ்கிரீம், சீஸ், பொரித்த உணவு, ஒயின், ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள், காபி, டீ, அதிக இனிப்பான உணவுகள், மது ஆகியவை தவிர்க்க வேண்டியவை.

The post இரவு உணவுப் பிரியர்கள் கவனத்திற்கு… துரித உணவால் குறையும் மனிதர்கள் ஆயுட்காலம்: வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட உணவுகளை தேடும் இளசுகள் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்