×

காரிருளிலும் கைகொடுக்கும் கார்த்திகை தீபம்!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

கார்த்திகை 14 (30-11-2023) சுக்கிரன், துலாம் ராசிக்கு மாறுதல்; புதன், தனுர் ராசிக்கு மாறுதல்.
கார்த்திகை 15 (1-12-2023) புதன் வக்கிர கதி ஆரம்பம்.
கார்த்திகை 16 (2-12-2023) புதன், வக்கிர கதியில்,
விருச்சிக ராசிக்கு மாறுதல்.

உலகிற்கு உயிரூட்டும் கிரக நாயகனான சூரியன், அவரது நீச்ச ராசியான துலாம் ராசியைவிட்டு, மீண்டும் தனது வீரியத்துடன், விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தையே “கார்த்திகை” மாதம் என்றும், “விருச்சிக மாதம்” என்றும் பூஜிக்கின்றோம். விருச்சிகம் அக்னி (நெருப்பு) யின் அம்சமான செவ்வாயின் ஆட்சி வீடாகும். சூரியன் ஓர் நெருப்புக் கோளாகும்.

மற்றொரு அக்னிக் கிரகமான செவ்வாயின் ஆட்சி ராசியான விருச்சிகத்தில் வலம் வரும் இம்மாதத்தில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்து, காத்தருளும் திருக்கயிலை நாதனான எம்பெருமான் பரமேஸ்வரன் அக்னி ஸ்வரூபமாக, திருவண்ணாமலை எனும் திவ்ய திருத்தலத்தில் காட்சியளித்தருள்வதைத்தான், “கார்த்திகை தீபமாக” மலை உச்சியில் தரிசித்துப் பெறற்கரிய பேற்றினை அடைகிறோம். அந்த தன்னிகரற்ற மாலை சுப நேரத்தில், இறைவனை அக்னி வடிவாகக் காண்கிறோம்.

அறிந்தோ, அறியாமலோ சூழ்நிலை காரணமாகவோ நாம் செய்துள்ள அனைத்து தவறுகளும் (பாவங்களும்), உடனுக்குடன் நீங்கிவிடும் அண்ணாமலை தீபத்தினைத் தரிசிப்பதால் என்பதை திருமண்ணாமலை திவ்ய சரித்திரம் கூறுகிறது. முருகப் பெருமானுக்கு உகந்த மாதமும் கார்த்திகை மாதமாகும். சூரபத்மனைப் போரில், ஆட்கொண்ட மாதமும் இந்தக் கார்த்திகையில்தான்!

கற்பனைகள் அனைத்தையும் கடந்து, என்றோ, எப்பொழுதோ நடந்த அந்தத் தர்ம யுத்த நிகழ்ச்சியை இப்போது கொண்டாடும்போதுகூட அதன் தெய்வீகத்தை உணர முடிகிறது. ஆம்! சிக்கல் சிங்கார வேலவன், அன்னை அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மனைத் போரில் வீழ்த்தியவுடன், அவனது விக்கிரத்திருமேனியில் வியர்வைத் துளிகள் அரும்பும் அற்புதக் காட்சியை இன்றும் நம்மால் காண முடிகிறது! மெய்சிலிர்க்கும் அனுபவம் அது!! இதே அரிய காட்சிதான், திருச்செந்தூர் முருகப் பெருமானின் சூர சம்ஹார நிகழ்ச்சியின்போதும் நாம் காணும் அற்புதமாகும்.

தமிழ் மொழியில் திகழும் தெய்வீக சக்தி வாய்ந்த துதிகளில் தன்னிகரற்று விளங்குவது, “கந்தர் சஷ்டி கவசம்”. அதி சக்திவாய்ந்த, மந்திர செறிவூட்டப்பட்ட இப்பாடலை, தினந்்தோறும் பக்தி, சிரத்தையுடன் படித்து வருபவர்களுக்கு, பாபங்கள் நீங்கும். சோதனைகள், பிரச்னைகள் சூரியனைக் கண்ட பனிபோல், மறையும்! சந்திரனைக் கண்டு அல்லி மலர்வதைப்போல, வாழ்க்கையில் அசோகத்தைத் (சோகமில்லாத, இன்பம்)தரும், இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும்!

இனி இம்மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய தெய்வீக நிகழ்ச்சிகள் பற்றித் தெரிந்து கொள்வோமா?

கார்த்திகை 1 (17-11-2023): முடவன் முழுக்கு.

இன்று, கங்கையிற் புனிதமான காவிரியில் நீராடினால் சகல தோஷங்களும் விலகும். அங்கு சென்று நீராட இயலாதவர்கள், தாங்கள் இல்லங்களில் நீராடும்போது, கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, நர்மதை, துங்கா, கர்ணப்ரயாகை போன்ற புண்ணிய நதிகளை நினைத்து, வணங்கி நீராடினாலேயே போதும். புண்ணியத்தைத் தேடி நீங்கள் செல்ல வேண்டாம்; புண்ணியம் உங்களைத் தேடி வரும்!

கார்த்திகை 2 (18-11-2023) : கந்தர் சஷ்டி சூர சம்ஹாரம்.

சூரபத்மன் என்ற அசுரன் கடும் தவமியற்றி, அதன் பலனாக அளவற்ற பலம் பெற்று, தேவர்களையும், ரிஷிகளையும், பெரியோர்களையும் துன்புறுத்தி வந்தான். தெய்வத்தை அவமதித்தான்; தன்னைத்தானே “தெய்வம்” எனக் கூறிக்கொண்டான்! முருகப் பெருமான், அன்னை பார்வதியிடம் திவ்ய சக்தி வாய்ந்த வேல் பெற்று, போரில் அந்த அசுரனை வதம் செய்த புண்ணிய தினம்.

இந்த வைபவம், முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து ஷேத்திரங்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து, பரவசமடையும் வண்ணம் கொண்டாடப்படுகிறது. “தீயோரை அழித்து, நல்லோரை தெய்வம் காக்கும்…” என்ற ஆன்றோர், சான்றோர்களின் வாக்கினை மெய்ப்பிக்கும் இவ்வற்புத நிகழ்ச்சி குறிப்பாக, திருச்செந்தூர், சிக்கல் ஆகிய புகழ்வாய்ந்த திருத்தலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

போர்க்காட்சி முடிந்ததும், பேரழகுப் பெருமானான சிக்கல் சிங்கார வேலவனின் திருமுகத்தில் தோன்றும் வியர்வைத் துளிகள், காண்போர் உள்ளத்தைக் கவர்ந்து, கண்களில் பக்திப் பெருக்கை ஏற்படுத்துவது கண்கொள்ளாக் காட்சியாகும்! பல பிறவிகளில் மகத்தான புண்ணியம் செய்துள்ள பாக்கியசாலிகளுக்கு மட்டுமே கிடைக்கும் பெறற்கரிய பேறு, பேரழகன் சிக்கல் சிங்கார வேலவனின் தெய்வீக அழகு தரிசனமாகும். திருச்செந்தூரிலும், இத்தெய்வீக அழகினைக் கண்டு, அழகன் முருகனின் அழகைப் பருகிப் பருகித் திளைக்கலாம்.

கார்த்திகை 5 (21-11-2023): திரேதாயுகாதி பகவான் ஸ்ரீமந் நாராயணன், மனிதர்கள் அவரவரது வாழ்க்கையில் எத்தகைய சோதனைகள், துன்பங்கள் நேரிட்டாலும், நேர்மை, சத்தியம், ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து தவறக் கூடாது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கு, தானே மானிடப் பிறவி எடுத்து பல கொடிய துன்பங்களுக்கிடையேயும் தர்ம நெறிமுறையைவிட்டு விலகாமல், புருஷோத்தமனாக வாழ்ந்துகாட்டியும், மனைவிக்குக் கற்பே உண்மையான அணிகலன் என்பதை, பல துன்பங்களுக்கு இடையேயும் காட்டியருளிய சீதா தேவியும், ஊர்மிளாவும் உடன்பிறந்தோர் எவ்விதம் மூத்த சகோதரனை, பெற்ற தந்தையாகவே கருத வேண்டும் என்ற தர்மத்தைக் கடைப்பிடித்துக் காட்டவேண்டி லட்சுமணன், பரதன், சத்ருக்கணன் ஆகியோர் அவதரித்த திரேதாயுகம் ஆரம்பித்த தினமே இன்று! இன்று ஸ்ரீமத் சுந்தர காண்டம் படிப்பது, குடும்பத்திற்கு நல்வாழ்வினைப் பெற்றுத் தரும்.

கார்த்திகை 7 (23-11-2023) வியாழக்கிழமை:

கிடைத்தற்கரிய சுக்கில யஜுர் வேதத்தை, சூரிய பகவானிடமிருந்து பெற்று, நமக்கு பரம கருணையுடன் தந்தருளிய மகரிஷி யாகவல்கியர் அவதரித்ததும் இந்தத் திரேதாயுகத்தில்தான். உலகப் புகழ் பெற்ற அஹோபில மடத்தின் 45வது பட்டம் மதழகிய சிங்கர் அவதார தினம். இம்மகான்தான் திருவரங்கத்தின் தெற்கு ராஜகோபுரத்தை நிர்மாணித்துத் தந்தருளியவர்.

கார்த்திகை 8 (24-11-2023): துளசி விவாகம்.

நெல்லி மரத்திற்கும் துளசி செடிக்கும் திருமணம் செய்வித்தால், உங்கள் வீட்டில் நெடுநாட்களாக விவாகத்திற்காகக் காத்திருந்து, வரன் அமைவதில் தடங்கல் ஏற்பட்டால், அது விலகி நல்ல வரன் அமையும்.

கார்த்திகை 10 (26-11-2023): அண்ணாமலையார் தீபம்.

சர்வ ஆலய தீபமும், திருக்கையிலை நாதனாகிய சிவ பெருமான் அக்னீஸ்வரூபமானவர். மகரிஷிகளின் பிரார்த்தனைகளை ஏற்று, திருவண்ணாமலையில் அக்னி பர்வதமாக (மலையாக) தரிசனம் தந்தருளினார். அந்தத் தெய்வீக நன்னாள், கார்த்திகை மாதத்தில் நிகழ்ந்தது. அந்தத் தெய்வீக நிகழ்ச்சி ஆண்டுதோறும் அண்ணாமலை திருத்தலத்தில், கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அன்று மாலையில், மலையுச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதே தினத்தில் பெரும்பான்மையான திருக்கோயில்களிலும் வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டு, பூஜிக்கப்படுகிறது. இந்தத் தீபத்தைக் காண, இந்திராதி தேவர்களும், சப்த மகரிஷிகளும், கந்தவர்களும் திருவண்ணாமலைக்கு எழுந்தருள்வதாக, தலபுராணம் கட்டியம் கூறுகிறது.

பகவான் ஸ்ரீமந் நாராயணனை முன்னிட்டு, இந்திராதி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, தோன்றியவரும், வெண்ணெய், தயிர், பால், பனித்துளி போன்ற களங்கம் ஏதுமற்ற பளிங்கு நிறத்தை உடையவரும், சிவபெருமானின் ஜடாமகுடத்தில் அணிகலனாகப் பிரகாசிப்பவரும், வெண்மையான முயல் சின்னத்தை உடையவரும், வெள்ளி, வெண்பட்டாடை, வெண்ணிறத்தை உடையவனும், நவரத்தினங்களுக்குள் வெண்முத்துவிற்கு ஆதிபத்யம் கொண்டவரும், சாத்வீகக் குணத்திற்குச் சொந்தக்காரரும், ஒரு மனிதனின் உடலையும் மனத்தையும் ஆட்கொள்ளும் காரணகர்த்தாவாகவும் அதாவது, ஜாதகத்தில் ஜனன காலத்தை வைத்துத்தான் பலாபலன்களை எடுத்து இயம்பினாலும்கூட, சந்திர லக்கினத்தை வைத்துதான் இறுதி முடிவு எடுக்க வேண்டுமென்பது ஜோதிட சாஸ்திரம் கூறும் உண்மை.

சந்திரனை மாத்ருகாரகராகவும், மனோகாரகராகவும், சூரிய பகவானை, பித்ரு காரகராகவும் கொண்டோமேயானால், மாதா ஸ்தானத்தில் வீற்றிருப்பவரும், நாம் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும் தந்தருள்பவரும், ரசனையாகிய கலைச் சுவையும், அழகு, நறுமணம், சுகபோக வாழ்க்கையைத் தந்தருள்பவரும், ஆற்றல், அறிவு அதன்மூலம் புகழ், ஆனந்தம், விருப்பு – வெறுப்பின்றி, தராசு முட்களைப் போல நடுநிலை தவறாதவரும், எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் போல், இவ்வுலக வாழ்விற்கு, நாம் அனுபவிக்கும் சுகபோகங்களுக்கு உடலே காரணகர்த்தாவாக இருப்பினும், அதற்கெல்லாம் அஸ்திவாரமாகத் திகழ்வது மனமே! சந்திர பகவான் சுப-பலம் பெற்றிருந்தால்தான் உடல் மற்றும் மன பலத்தைப் பெறுதல் முடியும்!

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் பலவீனமடைந்திருந்தால், மனக் கிலேசத்தை ஆட்கொண்டவராகவும், ஒருவரின் ஜனன ஜாதகத்தில் நான்காம் இடத்தில் இருந்தால், அனைத்து சுகபோகங்களையும் அனுபவிப்பவராகவும், உடல் நலத்திற்கும் மனோதிடத்திற்கும் உரியவரும், பகைக் கிரகங்களற்றவரும், இவரின் சஞ்சார நிலையைக் கொண்டே, தசா இருப்பையும், திருமண நிச்சயதார்த்த முகூர்த்த நன்நாட்களை சந்திரனின் சாரத்தைக் கொண்டே நிர்ணயிக்கப்படுபவரும், சோமன் என்றழைக்கப்படுபவருமான, சந்திர பகவான் அவதரித்த புண்ணிய தினமும் இன்றுதான். திருக்கோயலுக்குச் சென்று, நவக்கிரக சந்நதியில் வீற்றிருக்கும் சந்திர பகவானுக்கு வெண்பட்டாடை சாற்றி, முல்லை, மல்லிகை, வெண்தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட, சந்திர பகவானின் தோஷம் விலகும்.

கார்த்திகை 11 (27-11-2023): சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் அவதார தினம்.

கார்த்திகை 19 (05-12-2023): கால பைரவாஷ்டமி. ருத்ராஷ்டமி. இன்று விரதமிருப்பதால், குடும்பத்தில் வறுமை நீங்கும். கடன் தொல்லைகள் அகலும். இதை அனுபவத்தில் உணர்ந்துகொள்ளலாம்.

இத்தகைய தெய்வீகப் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கார்த்திகை மாதத்தின் ராசி பலன்களை இனிதே காண்போம்! வழக்கம்போல் தேவையான ராசிகளுக்கு, எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களைக் கூறியிருக்கின்றோம். எமது வாசக அன்பர்கள் படித்து, பயனடையும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

The post காரிருளிலும் கைகொடுக்கும் கார்த்திகை தீபம்! appeared first on Dinakaran.

Tags : Bhagwat Kaingarya ,Sagara Chakravarthy AMrajagopalan Karthikai ,Venus ,Kartikai ,
× RELATED சிர்கான் (Zircon) எனப்படும் வீனஸ் ரத்தினம்