×

காதலியை நன்றாக பார்த்து கொள்வார் என உறுதிமொழி பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்து போட மறுத்த தாய்மாமனுக்கு அரிவாள் வெட்டு

*கோபி அருகே 2 வாலிபர்கள் கைது

கோபி : ஜாமீன் கையெழுத்து போட மறுத்த தாய்மாமனை தங்கை மகன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் மாரசாமி (50). கூலி தொழிலாளியான இவரது தங்கை மகன் சஞ்சய்குமார் (19) என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சஞ்சய்குமாரும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் காதலியின் வீட்டிற்கு சஞ்சய்குமார் தாய்மாமனான மாரசாமியை அழைத்து சென்றார். அங்கு காதலியை திருமணம் செய்து கொடுக்குமாறு காதலியின் பெற்றோரிடம் கேட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, காதல் திருமணம் என்பதால், சஞ்சய்குமார் மகளை கண் கலங்காமல் பார்த்து கொள்வாரா? என சந்தேகப்பட்ட காதலியின் தந்தை, திருமணத்திற்கு பிறகு மகளை சஞ்சய்குமார் நன்றாக பார்த்து கொள்வார் என உறுதிமொழி பத்திரத்தில் எழுதி ஜாமீன் கையெழுத்து போடுமாறு மாரசாமியிடம் கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாரசாமி, திருமணம் செய்து வைக்க மட்டுமே துணை நிற்பதாகவும், திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்து ஜாமீன் கையெழுத்து போடமுடியாது எனவும் கூறி உள்ளார்.

இதனால், சஞ்சய்குமாருக்கு திருமணம் செய்து வைக்க காதலியின் தந்தை மறுத்துவிட்டார். திருமண வாழ்க்கைக்கு தாய்மாமனே உத்தரவாதம் அளிக்கவில்லையே என சஞ்சய்குமார் ஆத்திரம் அடைந்தார். தொடர்ந்து காதலியுடன் திருமணம் நடக்காததால் சஞ்சய்குமாருக்கு, தாய்மாமன் மாரசாமி மீது மேலும் ஆத்திரம் அதிகரித்தது.

இது குறித்து தனது நண்பரான டி.என்.பாளையம் குமரன் கோயில் வீதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சம்பத் குமாரிடம் (30) கூறி உள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் மாரசாமியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து உள்ளனர். இதில் இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த சஞ்சய்குமாரும், சம்பத்குமாரும் அரிவாளால் மாரசாமியின் தலையில் வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரசாமி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்ததால், சஞ்சய்குமாரும், சம்பத்குமாரும் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினர்.

அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த மாரசாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சஞ்சய்குமார் மற்றும் சம்பத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலியை நன்றாக பார்த்து கொள்வார் என உறுதிமொழி பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்து போட மறுத்த தாய்மாமனுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Gobi Gobi ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...