×

எல்லை தெய்வ வழிபாடு தொடங்கியது காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பவனி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை, நவ.15: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் எல்லை தெய்வ வழிபாடுடன் விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி, காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் அண்ணாமலையார் கோயிலில் நாளை மறுதினம்(17ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து, தீபவிழா உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். விழாவின் 6ம் நாளன்று வெள்ளித்தேரோட்டமும், 7ம் நாளன்று மகாரதம் பவனியும் நடைபெறும். நிறைவாக விழாவின் 10ம் நாளான 26ம்தேதி மகா தீபபெருவிழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் நடைபெறும் எல்லை காவல் தெய்வ வழிபாடு நேற்று விமரிசையாக தொடங்கியது. தீபத்திருவிழா எந்த தடையும் இல்லாமல் சிறப்பாக நடைபெறவும், தீபத்தை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு அருளவும் வேண்டி துர்க்கையம்மன், பிடாரியம்மன், விநாயகர் வழிபாடு நடத்தப்படுகிறது.

அதன்படி, துர்க்கையம்மன் உற்சவம் நேற்றிரவு விமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு சின்னக்கடை வீதியில் பவழக்குன்று அருகே உள்ள துர்க்கையம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடந்தது. அதையொட்டி, வண்ண விளக்குகளால் ேகாயில் அலங்கரிக்கப்பட்டது. எல்லை தெய்வ வழிபாட்டின் தொடக்கமாக நேற்றிரவு 8 மணி அளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லேசான மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர். எல்லை தெய்வ வழிபாட்டின் 2ம் நாளான இன்று பிடாரியம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. இன்றிரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வருகிறார். அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்து உள்ள பிடாரியம்மன் சன்னதியில் பிரமாண்டமான உணவு படையல் இன்றிரவு நடைபெறும். எல்லை தெய்வ வழிபாட்டின் நிறைவாக விநாயகர் உற்சவம் நாளை நடைபெற உள்ளது.

The post எல்லை தெய்வ வழிபாடு தொடங்கியது காமதேனு வாகனத்தில் துர்க்கையம்மன் பவனி திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kamathenu ,Durgaiyamman Bhavani ,Thiruvannamalai Karthikai Deepatri festival ,Thiruvannamalai ,Tiruvannamalai Karthikai Deepatri Festival ,Durgaiyamman ,Bhavani ,
× RELATED வாகன ஓட்டிகள் கடும் அவதி ஜீயபுரம்...