×

செல்வம் பெருக்கும் குபேரலிங்கம்

திருச்சிக்கு அருகிலிருக்கும் ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலின் கிழக்கு கோபுரவாசலில் நுழைந்ததும் எதிரே குபேரலிங்க கோயிலை காணலாம். இந்த லிங்கத்தை மகாலட்சுமியிடமிருந்து குபேரன் பெற்றதாக புராணம் கூறும். தன்னிடமிருக்கும் சங்கநிதி, பதுமநிதி ஆகிய பொக்கிஷங்கள் தன்னைவிட்டு நீங்காதிருக்க சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தான் குபேரன். அவன்முன் தோன்றிய ஈசன், ‘‘குபேரா, உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும். எனவே, நீ மகாலட்சுமியை நோக்கி தவம் செய். அன்னையிடம் சுயம்புலிங்கங்கள் உள்ளன. அவள் விரும்பினால் அவற்றில் ஒரு லிங்கம் உனக்குக் கிட்டும்’’ என்று அருளினார்.

ஆனால், தன்னிடம் அனைத்துச் செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டும்; மகாவிஷ்ணுவின் மார்பில்தான் நிரந்தரமாக உறைந்திருக்க வேண்டும் என்று அந்த மகாலட்சுமி, ஏற்கெனவே சிவபிரானிடம் பிரார்த்தனை புரிந்தாள். அவள் வழிபட ஏதுவாக சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி அருள்புரிந்தார். அவ்வாறு ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அவள் கோரியதன் பேரில் அவர் சுயம்புவாக எழுந்தருளிய லிங்கங்கள் பல மகாலட்சுமியிடம் இருந்தன.

சிவபெருமான் அறிவுறுத்தியதுபோல் குபேரன், மகாலட்சுமியை நோக்கி தவம் மேற்கொண்டான். அவன் தவத்தினை போற்றிய மகாலட்சுமி, அவன் விரும்பியபடி ஒரு சுயம்புலிங்கத்தை அளித்தாள். அதனை பூலோகத்தில் தகுந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் அவனுடைய நிதிகள் அவனிடமே நிலைத்து நிற்கும் என்று அருளினாள். எங்கு பிரதிஷ்டை செய்வது என்று குபேரன் குழம்பிக் கொண்டிருக்கையில், அதற்கான வழியும் சொன்னாள் மகாலட்சுமி. `பூலோகத்தில் இரண்டு பக்கமும் நீர் சூழ்ந்த ஒரு திருத்தலத்தில் அன்னை பார்வதி, இறைவனை நீரினால் உருவாக்கி வழிபட்ட லிங்கம் உள்ளது. அதுவே இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யத் தகுந்த திருத்தலம்’ என்று தெரிவித்தாள். அதன்படி, அந்த அற்புத சுயம்பு மூர்த்தியை, நீர்த்தலமான திருவானைக்காவில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, பேறுகள் பெற்றான் குபேரன்.

திருவானைக்கா திருத்தலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரியும் குபேரலிங்கத்தினை வெள்ளி மற்றும் பௌர்ணமி நாட்களில், சுக்கிர ஹோரையில், புனித நீரால் அபிஷேகம் செய்து, வெண்பட்டாடை சமர்ப்பித்து, வெண்பொங்கல் நிவேதனம் செய்து, மணமிக்க வெள்ளை மலர்கள் சூடி வழிபட்டபின், அந்த பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு தானமாக அளித்து வந்தால் வறுமை நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தீபாவளித் திருநாள் குபேர லிங்கத்தினை வழிபட தகுந்த நாளாக கருதப்படுகிறது.

The post செல்வம் பெருக்கும் குபேரலிங்கம் appeared first on Dinakaran.

Tags : Kuberalingam ,Jambukeswarar ,Akilandeswari ,Trichy ,Kuberalinga ,
× RELATED திருச்சியில் திருவானைக்காவல் கோயில் தேரோட்டம் பாதியில் நிறுத்தம்..!!