×

செல்போன் பறித்தவர்களை தடுத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் அடித்து வாலிபர் படுகொலை: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

அண்ணாநகர்: கொளத்தூர், கம்பர் நகரை சேர்ந்தவர் தாஸ் (53). அதே பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மகேஷ் (21). இவர், தந்தைக்கு உதவியாக பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகையன்று மகேஷ், கொளத்தூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்த நண்பர் ஹரிகிருஷ்ணன் (21) உள்ளிட்ட சிலருடன் வெளியில் சென்றுள்ளார். பின்னர், இரவு நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் மகேஷ் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.திருமங்கலம் வி.ஆர்.மாஹால் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அவர்களது பைக் பெட்ரோல் இல்லாமல் வழியில் நின்றது. உடனே மகேஷ் செல்போனில் தனது நண்பரை தொடர்புகொண்டு, ‘‘பெட்ரோல் இல்லாமல் வழியில் பைக் நின்றுவிட்டது. எங்களிடம் பணம் இல்லை. எனவே, உன்னிடம் பணம் இருந்தால் எடுத்துக்கொண்டு வா,’’ என கூறியுள்ளார். அதன்படி, அவரது நண்பர் பணம் எடுத்துக் கொண்டு அங்கு வந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த 4 பேர், மது போதையில் மகேஷ் மற்றும் ஹரிகிருஷ்ணனிடம் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை மகேஷ் தடுத்ததால், இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது அந்த 4 பேர், இரும்பு ராடால் மகேஷை சரமாரியாக தலையில் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த மகேஷை அவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.  இதுகுறித்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், திருமங்கலம் பகுதியை சேர்ந்த காமேஷ் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள், மகேஷை தாக்கியது தெரிந்தது. அவர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, தலைமறைவாக இருந்த காமேஷ் (19) மற்றும் 3 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்….

The post செல்போன் பறித்தவர்களை தடுத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் அடித்து வாலிபர் படுகொலை: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,Das ,Kolathur, Kambar ,Mahesh ,Dinakaran ,
× RELATED போதை பொருட்களை ஒழிக்க போலீசார் கடும்...