×

வில்லிவாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம்; பிரபல ரவுடி கத்தியால் சரமாரி வெட்டி கொலை: பழிக்கு பழியா? 2 பேரிடம் விசாரணை

அம்பத்தூர்: வில்லிவாக்கத்தில் நேற்றிரவு மதுபோதையில் இருந்த பிரபல ரவுடியை 2 பைக்குகளில் வந்த மர்ம கும்பல் சரமாரி வெட்டி கொலை செய்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். சென்னை வில்லிவாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் உதயா (எ) உதயகுமார் (35). பிரபல ரவுடி. இவர் மீது வில்லிவாக்கம், ஐசிஎப் காவல் நிலையங்களில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு வில்லிவாக்கம், கம்மவார் நாயுடு தெரு அருகே தனது நண்பர்களுடன் ரவுடி உதயகுமார் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, 2 பைக்குகளில் மர்ம கும்பல் வந்தது. இதை பார்த்ததும் உதயகுமாரின் நண்பர்கள் தப்பி ஓடினர். உதயகுமாரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரி வெட்டியது. இதில் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக கத்தி வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

தகவலறிந்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வில்லிவாக்கம் உதவி ஆணையர் சிதம்பர முருகேசன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், நியூ ஆவடி சாலை அருகே கடந்த 2022ம் ஆண்டு, வில்லிவாக்கத்தை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி டபுள் ரஞ்சித் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கில் ரவுடி உதயகுமார் முதல் குற்றவாளியாக உள்ளார். தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். டபுள் ரஞ்சித்தின் கொலைக்கு பழிக்கு பழியாக மர்ம கும்பல், உதயகுமாரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து இன்று காலை 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், மர்ம கும்பலை பிடிப்பதற்கு 3 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post வில்லிவாக்கத்தில் நள்ளிரவு பயங்கரம்; பிரபல ரவுடி கத்தியால் சரமாரி வெட்டி கொலை: பழிக்கு பழியா? 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Midnight Terror ,Williwack ,Ampathur ,Villivakam ,Udaya (A ,Villivakkam, ,Ambedkar, Chennai ,Villivakkam ,Dinakaran ,
× RELATED விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் தீவிபத்து