×

உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசி போட்டதாக விளம்பரம்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசி போட்டதாக விளம்பரம் செய்கிறார் பிரதமர் மோடி என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பாதிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஒன்றிய பாஜ அரசு முழு பொறுப்பு ஏற்காமல் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகளில் பிரதமர் மோடியின் மிக பெரிய படத்தை இடம் பெற செய்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங். உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளை போட்ட முதல் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார். உண்மையில், இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்ட அதேநாள் வரை, சீனா 220 கோடி தடுப்பூசிகளை போட்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடுகிற சாதனை படைத்த சீனா, இதை ஒரு விழாவாக கொண்டாடவில்லை.  மொத்த மக்கள் தொகையில் 80 சதவீத பேருக்கு 2 தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தியாவில் 5 சதவீத பேருக்குதான் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்திய மக்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 88 கோடி மக்களுக்கு 2 டோஸ் வீதம் 188 கோடி டோஸ்கள் போட வேண்டும். இதுவரை 107 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் இலக்கின்படி டிசம்பர் 2021க்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், அடைவதற்கு வாய்ப்பே இல்லை. கோவிஷீல்ட் என்பது பிரிட்டீஷ் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடி, தொற்றை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் எடுக்காமல் ஏற்பட்ட பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதை கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். இதன் மூலமாக பாஜ அரசின் இமாலய தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்ட கொரோனா பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசி போட்டதாக விளம்பரம்: பிரதமருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : corona disaster ,KS Azlagiri ,Chennai ,KS Azhagiri ,
× RELATED மல்லை சத்யாவின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு