×

கடைசியா துரோகிட்டயே போக சொல்லிட்டாங்களே… பாஜவை நம்பி மோசம் போயிட்டோம்… டிடிவி குய்யோ…முய்யோ…

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி.தினகரன் தலைமையிலான அமமுக உள்ளது. துரோகி… துரோகியென…. யாரை சொல்லி வந்தாரோ அந்த எடப்பாடியுடன் டிடிவி கைகோர்த்தார். இது அவருடைய ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், சட்டமன்ற தேர்தலில் அமமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து டெல்லி பாஜவிடம் டிடிவி பேசி வந்தாராம். அதற்கு நீங்கள் கேட்கும் தொகுதிகளை வாங்கி தருகிறோம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என டெல்லி பாஜ கூறியதாக தெரிகிறது. அதை நம்பி தேஜ கூட்டணியில் டிடிவி இணைந்தார்.

ஆனால்… தற்போது தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவிடம், பாஜ பல கட்ட பேச்சு நடத்தியும் இதுவரை இறுதி முடிவு எட்டாமல் ஜவ்வுமிட்டாய் போல் உள்ளது. இதை உற்று நோக்கிய டிடிவி தினகரன், டெல்லி பாஜவை தொடர்பு கொண்டு நாங்கள் கேட்கும் தொகுதிகளை நீங்கள் தான் வாங்கி தர வேண்டும் என்றார். ஆனால்… பாஜவோ எடப்பாடி பழனிசாமியிடம் நீங்களே பேசி தொகுதிகளை வாங்கி கொள்ளுங்கள் என்று கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டதாம். இதனால் டிடிவி கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘பாஜவை நம்பி தான் அதிமுக தலைமையிலான கூட்டணியிலேயே டிடிவி இணைந்தார். தற்போது தொகுதி பங்கீட்டில் டிடிவியை கடைசி நேரத்தில் பாஜ கைவிட்டு விட்டது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிடிவி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தே.ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தன்னை மீறி சென்று விடக்கூடாது என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கவனமாக உள்ளார். தான் சொல்வதை கேட்கும், நான் கொடுக்கும் தொகுதிகளை வாங்கி கொண்டு கூட்டணி கட்சிகள் போட்டியிட வேண்டும் என்ற நிலையை எடப்பாடி உருவாக்கியுள்ளார். டிடிவி கேட்கும் தொகுதிகள் கண்டிப்பாக கிடைக்காது. பாஜ எப்படி அமமுகவை கைவிட்டதோ, அதுபோல் தன்னை நம்பி வந்த ஆதரவாளர்களையும் கைவிடும் நிலையில் டிடிவி தினகரன் இருக்கிறார் ’’என்றனர்.

* பாத்திரங்கள் பதுக்கி வைத்த தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் வரகூராம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள பட்டேல் அடுக்கு மாடி குடியிருப்பில், ‘ஏ’ பிளாக்கில் உள்ள யாருக்கும் ஒதுக்கப்படாத அறை எண் 15ல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக தவெக தலைவர் விஜய் மற்றும் திருச்செங்கோடு தொகுதியின் வேட்பாளராக கருதப்படும் அருண்ராஜ் படங்கள் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டிய 250 எவர்சில்வர் பாத்திரங்கள் பிடிபட்டது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இப்பாத்திரங்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 250 எவர்சில்வர் பாத்திரங்கள் கைப்பற்றப்பட்டு, புறநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் நிஷாந்த் கொடுத்த புகாரின்பேரில், தவெக இளைஞரணி செயலாளர் மாதேஸ்வரன் மீது 329(4), 173 பிஎன்எஸ் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

* முதல்ல மக்களுக்கு வேலை கொடுங்க… தமிழிசை மூக்கை உடைத்த பாட்டி தமிழிசை மூக்கை உடைத்த பாட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசுகையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக பேசிக் கொண்டிருந்தார்.அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த நெல்லை டவுனைச் சேர்ந்த மூதாட்டி தனலட்சுமி, ‘எங்க பிள்ளைகளுக்கு முதல்ல சென்ட்ரல் கவர்மென்டு வேலையை கொடுக்கச் சொல்லுங்க. நமக்கு அந்த வேலையே தர்றதில்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்ல வேலைய தரச் சொல்லுங்க. அப்புறம் பேசட்டும்’’ என ஆவேசமாக குரல் கொடுத்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் அவரை ‘எம்மா நீங்க நிழலுக்கு வாங்க’ என்று கூறி அழைத்து சமாதானப்படுத்தினர். ஆனாலும் ஆவேசம் தணியாத மூதாட்டி நம்ம பிள்ளைங்களுக்கு வேலை வாங்கித் தர வழியில்ல. ஆனா இங்க வந்து இப்படி பேச வந்துட்டாங்க என்றார். அப்போது சிலர் இதை மாநில அரசிடம்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மூதாட்டி தனலட்சுமி, கேரளாவும் தமிழ்நாடும்தான் இங்க நம்பர் ஒன்னா இருக்கு. அவங்க நமக்கு எல்லாம் ஒழுங்கா தாராங்க. இந்த சென்ட்ரல் கவர்மென்ட்டுதான் ஒன்னும் ஒழுங்கா தரல. இங்க வந்துட்டு வாய் கிழிய பேசுதாங்க’ என்றார். இதை கவனித்த தமிழிசை, ‘‘அம்மா நான் உங்களுக்கும் சேர்த்துதான் இங்கே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.’’ எனக்கூறி சமாளித்தார். பின்னர் அந்த மூதாட்டியை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

* தே.ஜ கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ‘இந்தியா கூட்டணி வாழ்க’ கோஷம்: காளியம்மாளுக்கு ஓ.எஸ்.மணியன் எதிர்ப்பு
அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி சார்பில் நாகப்பட்டினம் அவுரித்திடலில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பியபோது தேசிய ஜனநாயக கூட்டணி வாழ்க…. என கூறுவதற்கு பதிலாக இந்தியா கூட்டணி வாழ்க…. இந்தியா கூட்டணி வாழ்க…. என இருமுறை கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, அவர் எந்தவித பதிலும் கூறாமல் கொஞ்சம் விலகி ஓரமாக அவரது ஆதரவாளர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

ஆனால், நாம்தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதை பார்த்த ஓஎஸ் மணியன், அதிமுக நிர்வாகிகள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். ஏற்கனவே எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி, அதிமுகவை தரக்குறைவாக பல கூட்டங்களில் பேசிய காளியம்மாள் இன்று அதிமுக மேடையின் மீது நின்று போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்…. கட்சி கட்டுப்பாடுகளை மீறி நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கிறார்…. மாவட்ட செயலாளர் நானா…. இல்ல காளியம்மாளா?…. என நிர்வாகிகள், தொண்டர்களிடம் ஓ.எஸ்.மணியன் கடுகடுத்துவிட்டு சென்றுள்ளார்.

Tags : BJP… ,TTV ,National Democratic Alliance ,AIADMK ,Dinakaran ,AMMK ,
× RELATED என்டிஏ கூட்டணி பேனரில் நயினார் படம்...