குன்றத்துார்: பெண்களின் முன்னேற்றத்திற்கு என்றும் பக்க பலமாக இருப்பது திமுக அரசு மட்டும் தான் என, 2ம் கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகா பரணிபுத்தூரில் 2ம் கட்டமாக விடுபட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது.
இதில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இதுவரை கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போது, 2ம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 860 பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது. மேலும், தகுதி வாய்ந்த எல்லோருக்கும் இந்த உரிமை தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. முதன் முதலில் கலைஞர் ஆட்சியில் தான் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏழை, எளிய பெண்களின் முன்னேற்றத்திற்கு என்றும் பக்க பலமாக இருப்பது திமுக அரசு மட்டும் தான். பெண்கள் நலனுக்காக பாடுபடும் ஒரே கட்சி திமுக தான்’ என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், துணை தலைவர் உமாமகேஸ்வரி வந்தேமாதரம், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணி மற்றும் அரசு அதிகாரிகள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post 2ம் கட்ட மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா: பெண்களின் முன்னேற்றத்திற்கு பக்க பலமாக இருப்பது திமுக அரசு:அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.