×

பிரதோஷ வேளை என்றால் என்ன?

இரவும், பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு உஷத் காலம் என்பது பெயர். உஷத் காலத்தைப் பகற்பொழுதின் முகம் என்பர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா என்பவள். அவள் பெயராலேயே இது உஷத் காலம் என அழைக்கப்படுகின்றது. இதற்கு நேர் எதிராகப் பகலும், இரவும் சந்திக்கும் நேரம் “ப்ரத்யுஷக் காலம்’’ எனப்படும்.

சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதையாதலின் அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் என்று அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் பிரதோஷ காலம் என வழங்குகிறது என்பர். பிரதோஷ வேளையை ரஜ்னி முகவேளை எனவும் அழைப்பர். இதற்கு இரவின் முகம் என்று பொருள். நிகண்டுகள் பிரதோஷ காலத்தை, இரவின் முகம் என்றே குறிப்பிடுகின்றன. இந்தப் பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு சாயா என்பது ஒரு பெயராகும்.

இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகின்ற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் சாயரட்சை எனவும் அழைக்கப்படுகிறது என்பர். ‘‘தோஷம்’’ என்றால் குற்றமுடையது என்பது பொருள். பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது. எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்று பிரதோஷ வேளைக்குப் பண்டிதர்கள் விளக்கம் கூறுவர்.

பிரதோஷ ரிஷப வாகனம்

சிவபெருமான் பிரதோஷ காலங்களில் உலா வருவதற்காகச் சிறிய அளவில் அமைந்த ரிஷப வாகனமே பிரதோஷ ரிஷபம் எனப்படும். இது மரத்தால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டதாகும். மயிலாப்பூர் முதலிய பல தலங்களில் வெள்ளியால் அமைந்த பிரதோஷ ரிஷப வாகனங்களைக் காணலாம். சென்னை சிவா விஷ்ணு ஆலயத்தில் பித்தளையால் ஆன பிரதோஷ ரிஷபம் உள்ளது. பிரதோஷ காலத்தில் வலம் வரும் இந்த நந்தியைச் சுற்றி வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர் சிற்பங்களையும் அமைக்கின்றனர். திருவக்கரை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தில் இடபத்திற்குப் பதிலாக அதிகார நந்தியில் பிரதோஷ நாயகரை அமர்த்தி உலாவரச் செய்யும் வழக்கம் உள்ளது.

விஷாபஹரண மூர்த்தி

நீலகண்ட பரமேஸ்வரரின் விஷமருந்திய திருவடிவைச் சிவாகமங்கள் விஷாபஹரண மூர்த்தி என்று குறிக்கின்றன. அபகரணம் என்பதற்கு ஏற்றுக்கொள்ளுதல் என்பது பொருள். எனவே விஷத்தை விரும்பி ஏற்று அருந்திய பெருமானை விஷாபஹரணர் என்று அழைக்கின்றனர். இம்மூர்த்தியின் வடிவை இரண்டு நிலையில் சிற்ப நூல்கள் குறிக்கின்றன.

முதல் வகையில் காரணமாகமம் இம்மூர்த்தியைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம். இவர் ஜடாமகுடம் தரித்து மூன்று கண்களும் நான்கு கரங்களும் கொண்டவராக விளங்குகின்றார். மேற் கரங்களில், மானும், மழுவும் கொண்ட வராய் முன்கரங்களில் இடது கையைத் தேவர்களுக்கு அபயமளிக்கும் பாவனையிலும் வலக் கரத்தில் விஷம் நிறைந்த பாத்திரத்தையும் கொண்டவராகவும் விளங்குகின்றார்.

அவர் விஷம் அருந்த முற்படுபவராகவும், அருகிலுள்ள பார்வதிதேவி சிவபெருமானைத் தழுவிக் கொண்டு வலக் கரத்தால் அவருடைய கழுத்தைப்பற்றி அவ்விஷத்தை அவருடைய கண்டத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் முகத்தில் வேதனையும், குழப்பமும் கொண்டவளாக விளங்குகின்றாள்.

மற்றோர் வகையில் அம்மூர்த்தியைத் தழல் முடிகொண்டவராக விழித்த பார்வையும், கோரைப்பல் துலங்க புலித்தோலாடை அணிந்து சிறுமணிகளால் ஆன மாலையையும் தேள்களால் கோர்க்கப்பட்ட மாலையையும், பாம்பணிகளையும் அணிந்தவராகச் சித்தரிக்கின்றனர். இவர் முன் வலக்கரத்தில் விஷப்பாத்திரத்தையும் முன் இடக்கரத்தில் அஞ்சி நிற்கும் தேவியை அணைத்து அச்சம் நீக்குபவராகவும், பின் வலக்கரத்தில் திரிசூலத்தையும் பின் இடக்கரத்தில் மணியையும் (சிலர் கபாலம் எனவும் எழுதுவர்) ஏந்தியவராகக் காட்சியளிக்கின்றார்.

இருவரும் இடப வாகனத்தில் வீற்றிருக்கின்றனர். சிதம்பரம், மதுரை முதலான திருத்தலங்களில் விஷம்பஹரண மூர்த்தியை ஓவியமாகவும் சிற்பமாகவும் அமைத்துள்ளனர். ஆனால், இவை யாவும் ஆகமம் கூறும் வகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பல நூல்களில் விஷாபஹரண மூர்த்தியைப் பள்ளி கொண்டிருப்பவராகவும் அவருக்குப் பார்வதிதேவி பணிவிடை புரிபவளாகவும் சித்தரித்திருக்கின்றனர்.

பிரதோஷ நாயகர்

பிரதோஷ காலங்களில் கோயிற் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தியாவார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கு உட்பட்டதாகவே இவர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போலவே தோற்றமுடையவர்.

பன்னிரு கரங்களில் மான், மழுவும்; முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார். தலையில் ஜடாமகுடம் விளங்க, அதில் வெண்பறை, கங்கை, ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கறுத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.

அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி, இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பொதுவாக இருவரையும் தனித்தனியே ஒரே பீடத்தில் நின்றவாறே அமைப்பது தான் வழக்கம் என்றாலும் காலப்போக்கில் கலைஞர்கள் சில மாறுதல்களை ஆகம அடிப்படையில் செய்யத் தொடங்கினர்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post பிரதோஷ வேளை என்றால் என்ன? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!