×

சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி உறுதி

சென்னை: சனாதனம் குறித்து பேசியதிலிருந்து நான் பின் வாங்கமாட்டேன். மன்னிப்பும் கேட்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தூய்மைப்பணியாளர்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இரண்டாவது கட்ட பயனாளிகள் சேர்க்கப்பட்ட பின், தற்போது மொத்தமாக 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் பெண்கள் பயனடைகின்றனர். நிராகரிக்கப்பட்ட 7 லட்சம் பெண்கள் புதிதாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. சனாதனம் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.

இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்தித்துக் கொள்வோம். நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை. சமூக நீதி வேண்டும், அனைவரும் சமம் என்பதற்காகதான் பேசினேன். நான் ஸ்டாலினின் மகன். கலைஞரின் பேரன். பேசியது பேசியதுதான். கொள்கையைத்தான் பேசினேன். பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். எது வந்தாலும் தொண்டர்கள் நீங்கள்தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, எம்பி தயாநிதி மாறன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, பரந்தாமன், ஜோசப் சாமுவேல், திமுக செயலாளர் ராஜசேகர், முரளி, மண்டலக்குழு தலைவர் ராமுலு உள்ளிட்ட நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: அமைச்சர் உதயநிதி உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,CHENNAI ,Sanathanam ,Udhayanidhi Stalin ,Udhayanidhi ,
× RELATED ஜாதி கொடுமைகளுக்கு எதிராக...