×

மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்?

நன்றி குங்குமம் ஆன்மிகம் பிட்ஸ்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 59 (பகவத்கீதை உரை)

ஆக, எந்தப் பலனையும் எதிர்நோக்காமல், அதாவது, தனக்குக் கிடைக்கக் கூடிய லாபம் என்ன என்பதை கணக்கிடாமல் கர்மாக்களை இயற்ற வேண்டும் என்பதுதான் கிருஷ்ணனின் அறிவுரை. பொதுவாக லாபம், ஆதாயம், நல்விளைவு, நன்மை என்று எதிர்பார்த்துதான் மனிதன் செயல்படுகிறான் என்பது யதார்த்தம். ஆனால், இப்படி நற்பலனுக்கு மாறாக துர்பலன் ஏற்பட்டாலும் அதற்காக ஒரு ஞானி வருத்தப்படமாட்டான்.

எப்படி நன்மையால் அவன் பாதிக்கப் படுவதில்லையோ, அதேபோல தீமையாலும் அவன் பாதிக்கப் படுவதில்லை என்று விளக்குகிறார் கிருஷ்ணன். இப்படிப்பட்ட ஞானமே பகவானுடன் ஐக்கியமாவதற்குச் சரியான தகுதியாகும். ஒளி, இருட்டு என்பதுபோல தர்மம், அதர்மம் இரண்டும் உலகில் நிலவிவரும், தவிர்க்கவே முடியாத அம்சங்களாகும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒளிக்கு ஓர் ஆதாரம் இருக்கிறது சூரியன், மின்னல், விளக்கு, தீபம், சுடர்… ஆனால், இருட்டுக்கு எது ஆதாரம், ஏது ஆதாரம்? இருட்டு தானாகத் தோன்றுவதில்லை என்பதுதானே உண்மை? அதாவது, ஒளி இல்லை என்றால்தான் இருட்டு. சூரியன் மறைந்தால்தான் இரவு. ஸ்விட்ச் ஆன் செய்யப்படவில்லை என்றால்தான் இருட்டு.

விளக்கு ஏற்றப்படவில்லை என்றால்தான் இருள். விளக்கின் ஒளியை எண்ணெய் இல்லாத நிலைமையோ, காற்றடிப்பதாகிய சூழலோ இருந்தால்தான் நீக்க முடியும். அதற்குப் பிறகுதான் அங்கே இருள் ஆட்சி செய்ய முடியும். ஆக, தானாகத் தோன்றுவதில்லை இருட்டு. பகவான் சூரியன் என்றால், அவரால் பூமிக்கு அனுப்பிவைக்கப்படும் மகான்கள்தான் எண்ணெய், மின்சார விளக்குகள், தீபங்கள், சுடர்கள்!

இதைப் போலதான் அதர்மமும். தர்மம் என்ற ஒளி இல்லாத இடத்தில் அதர்மம் என்ற இருள் குடியேறுகிறது. அதாவது, இருள் காத்து கொண்டிருக்கிறது, எப்போது வெளிச்சம் விலகும், தான் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்று. இருட்டுக்கு சுயம் கிடையாது. நடந்துபோகும் நமக்கு முன்னால் இருட்டான நம் நிழல் போகிறதென்றால் நமக்குப் பின்னால் ஏதோ ஒளி பிரகாசிக்கிறது என்றுதானே பொருள்? வெளிச்சத்தை மறைக்கும் நமக்கு முன்னால், நம்முடைய உருவ வரி வடிவத்திற்குள் இருள் ஒளிந்துகொள்ள முயற்சிக் கிறது. ஒளி மறைந்தால் நிழலும் காணாமல் போய்விடுகிறது!

இப்படி வெளிச்சமும், இருட்டுமான நிஜமும், நிழலுமான தோற்றங்களுக்கிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வெளிச்சத்தைப் பார்த்து உற்சாகம் பெறுகிறோம், இருளைப் பார்த்து மருள்கிறோம். ஆனால், ஒரு ஞானிக்கு இந்த இரண்டையுமே வெளிச்சம், வெளிச்சம் இன்மை என்றுதான் பாகு படுத்தத் தெரியும். ஆமாம்.. அவன் வெளிச்சம், இருட்டு என்று பாகுபடுத்துவதில்லை; அவனைப் பொறுத்தவரை வெளிச்சம், வெளிச்சமின்மை, அவ்வளவுதான்! அதனாலேயே அவனுடைய கர்மாக்களில் தொய்வு ஏற்படுவதில்லை. அதனாலேயே அவன் பலாபலன்களைப் பற்றி சிந்திப்பதும் இல்லை.

எப்படி இருட்டு தானாகத் தோன்றுவதில்லையோ அதுபோல அதர்மமும் தானாகத் தோன்றுவதில்லை. அதர்மத்தின் பின்னணியில் எதிர்பார்த்தல் இருக்கிறது. ஆனால், வெளிச்சம் தோன்றியதும் இருட்டு மறைந்து விடுவதுபோல, தர்ம ஒளி பரவும்போது, அதர்ம இருள் முற்றிலுமாக மறைந்து விடுவதில்லை; அது இடம் தேடுகிறது. துர்திருஷ்டவசமாக அது ஒளிந்துகொள்ள வசமான இடம், மனித மனமாகவே இருக்கிறது. இவ்வாறு உள்ளிருந்தபடியே, அது, அதே மனிதன் மூலமாக தர்மத்தை விரட்டியடிக்க முயற்சிக்கிறது. அவனுக்கு கர்மாக்களின் கற்பனை லாப விளைவுகளை வளர்த்து விடுகிறது.

இந்த மன இருட்டை தர்ம சிந்தனை என்ற ஒளி பாய்ச்சி ஒருவன் விரட்டவேண்டும். இப்படி விரட்டுவதில் அவன் வெற்றி பெறுவானாகில் அவன் ஞானியாகி விடுகிறான், பகவானுடன் கலக்கும் தகுதி பெறுகிறான்.ஏவம் ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபிகுரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை பூர்வதரம் க்ருதம் (4:15)‘‘முன்னாளில் இவ்வாறுதான் உன் முன்னோர்கள் கர்மாக்களை இயற்றினார்கள்.

பற்றற்று கர்மவினையாற்றினார்கள். அவர்களை நீயும் பின்பற்றுவாயாக. அவர்களைப் போலவே எந்த எதிர்பார்ப்புமின்றி கர்மம் செய்வாயாக.’’ முன்னோர்களைப் பின்பற்றுவது மிகவும் நல்ல செயல். முக்கியமாக, நல்லொழுக்கம் மிகுந்த, நடுநிலை மனம் கொண்ட, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத முன்னோர்களைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. அவர்கள் மேற்கொண்ட நல்ல குறிக்கோள்கள், செயலாற்றிய வழிமுறைகள், எதிலும் தன்முனைப்பு காட்டாத, பொதுநலம் பேணும் நற்குணம், இவற்றைப் பின்பற்றுவது நல்லது. ஏனென்றால், அவர்கள் தம் கொள்கைகள், குறிக்கோள்கள் அல்லது தாங்கள் மேற்கொண்டிருக்கும் கர்மாக்கள் ஏதேனும் பாதகத்தை விளைவிக்குமானால், அது எவ்வளவுதான் சுயலாபம் அளித்தாலும் சரி, உடனே தம்மை மாற்றிக் கொள்ளத் தயங்க மாட்டார்கள்.

விடுதலை இயக்க வேள்விக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த மகாத்மா காந்திஜி, இந்தியாவில் ஒவ்வொரு ஊருக்கும் சென்று மக்கள் அனைவருக்கும் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தார். தன் தோற்றத்தைப் போலவே வாழ்க்கை முறையிலும் மிக எளிமையானவராகவே விளங்கினார். தனக்கென்று டாம்பீகமான எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் எளிதாகக் கிடைக்கக் கூடியவற்றையே அருந்தினார்.

ஒருசமயம் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். அங்கே அவருடைய உணவு நேரம் வந்தபோது அவருடைய தொண்டர்கள் சங்கடத்துடன் நெளிந்தார்கள். பச்சை வேர்க்கடலை, ஆட்டுப்பால் என்ற எளிமையான உணவைத்தான் அந்த சமயத்துக்கு எடுத்துக் கொள்வது மகாத்மாவின் வழக்கம். அன்று சோதனையாக, அந்த கிராமத்தில் பச்சை வேர்க்கடலை கிடைக்கவில்லை. அதனால், அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட முடியாதபடி நேரம் போய்க் கொண்டிருந்தது.

அன்று காலை உணவருந்தாவிட்டால் பரவாயில்லை என்று தீர்மானித்துவிட்ட காந்திஜி, அடுத்த வேலையில் இறங்கினார். அதைக் கண்டு அவர்மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அவருடைய தொண்டர்களில் ஒருவர் ஓடோடி வந்து, ‘‘காந்திஜி, இந்த கிராமத்தில் ஆட்டுப்பால் கிடைக்கிறது, ஆனால் பச்சை வேர்க்கடலைதான் கிடைக்கவில்லை. அதைப் பெற்றுவர பக்கத்து கிராமத்துக்கு நம் தொண்டர்கள் போயிருக்கிறார்கள். சற்றுப் பொறுத்துக் கொண்டீர்களானால், அதுவும் வந்துவிடும். உங்கள் வழக்கமான உணவை முடித்துக் கொண்டு அடுத்த பணியில் தாங்கள் ஈடுபடலாம்,’’ என்றார்.

அதைக் கேட்டுத் திடுக்கிட்டார் காந்திஜி. ‘‘அடடா, என் உணவு பழக்கத்தால் உங்களுக்கெல்லாம்தான் எவ்வளவு தொந்தரவு கொடுத்துவிட்டேன்! எளிமையாக இருக்க வேண்டியதுதான், ஆனால் அதுவே பலருக்கும் துன்பமளிக்கக் கூடியது என்றால் அந்த எளிமையும் ஆடம்பரமே! என்னை மன்னித்துவிடுங்கள்,’’ என்றார் மகாத்மா. கூடவே, ‘அனைவரும் தயவுசெய்து என் கொள்கைகளைப் பின்பற்றுங்கள், ஆனால் என்னைப் பின்பற்றாதீர்கள்,’ என்று பொதுவாக அனைவருக்கும் வேண்டுகோளும் விடுத்தார் அவர்.

‘என் கடன், பலன் எதிர்பாராமல் பணி செய்து கிடப்பதே’ என்று இந்த கிருஷ்ண தத்துவத்தைப் பாடி நெகிழ்ந்திருக்கிறார் திருநாவுக்கரசர். கோயில் உழவாரப் பணிகளில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், அந்தப் பணிகளால் எளிதாகக் கோயில்களுக்குச் சென்று, உடன் வரும் பக்தர்களால் இறைச்சேவை புரிய முடியும் என்ற பலன் ஏற்பட்டிருந்தாலும், இதைக்கூட எதிர்பார்த்து அவர் அந்தத் தொண்டில் ஈடுபட்டார் என்று சொல்ல முடியாது. இறைவனிடமிருந்தும் எந்த பிரத்யேக ஆசீர்வாதத்தையும் அவர் எதிர்நோக்கவில்லை.

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக் கர கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே

– என்பது அவரது பாடல்.

‘முருகனைப் பெற்றவன், உமையொருபாகன், கடம்பைத் திருக்கோயிலுள்ளான் அவனுக்குப் பணிசெய்து கிடப்பதே என் கடன்’ என்ற அப்பர் அடிகள், அந்த இறைவனுக்கும் ஒரு கடனைப் பணித்துள்ளார். அது, ‘அடியேனைத் தாங்குதல் அவன் பணியாம்’! அதாவது, நான் பாட்டுக்கு என் பணியைத் தொடர்கிறேன், அதற்கு பங்கம் ஏற்பட்டு விடாத வகையில் தன்னைத் தாங்க வேண்டியது அவனுடைய பொறுப்பு என்கிறார் அவர். அர்ஜுனனை ஊக்கப்படுத்தும் விதமாகவும் கிருஷ்ணன் இவ்வாறு சொன்னார்: ‘கர்மாவைச் செய்யுமாறு நான் உன்னை எந்த முகாந்திரமும் இல்லாமல் வலியுறுத்தவில்லை, ஏற்கெனவே உன் மூதாதையர்கள் இப்படித் தம் கர்மாக்களை இயற்றியவர்கள்தான், அதனால், நீ தயங்க வேண்டியதில்லை. அவர்களைப் பின்பற்று,’ என்கிறார்.

தம் கூடவே இருப்பவர்கள் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை அலட்சியப்படுத்துவது என்பது சிலருடைய பண்பாக அமைகிறது. மிகவும் நெருக்கமாக அவர்கள் இருப்பதால் அவர்களுடைய சொற்களுக்கு மதிப்பளிக்க அவர்கள் தயங்குகிறார்கள். நம்மைவிட்டு வெகு தொலைவுக்கு விலகியிருக்கும் உறவினரையும், நண்பரையும் எண்ணி ஏங்கும் அளவுக்கு, நம் பகுதியிலேயே வசிக்கும் அதே போன்ற உறவுகளை நாம் நேசிக்கிறோமா? இவர்களுக்குத் தேவையான உதவி செய்யப் போவதற்குக்கூட யோசிக்கிறோம். நெருங்கியிருப்பது அலட்சிய உணர்வுக்கு வித்திடுவது என்பது, விபரீதமான மனித சுபாவம்.

இரண்டுபேர் உரத்த குரலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓரிரு அடி இடைவெளியில்தான், அருகருகேதான் இருந்தார்கள் என்றாலும், மனத்தளவில் வெகு தொலைவுக்கு விலகியிருந்தார்கள் என்பதே அந்த சண்டைக்கும், உரத்த குரலுக்கும் காரணம். பகவானாகவே விளங்கினாலும், தான் அர்ஜுனனுடன் ஒரு நண்பனாக, சகோதரனாக, மிக நெருங்கியவனாகப் பழகியதால், சராசரி மனித சுபாவத்தில், தன்னைக் குறைவாக அவன் மதிப்பீடு செய்வானோ என்றுகூட கிருஷ்ணனுக்குத் தோன்றியிருக்கலாம். அதனால், அவனிடம், நேரடியாக ‘கர்மாவை மட்டும் செய்’ என்று அறிவுறுத்தாமல், ‘தெரியுமா உனக்கு? உன் முன்னோர்களும் இப்படித்தான் கர்மா இயற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்’ என்று அவர் உதாரணம் காட்டிப் பேச வேண்டியிருந்திருக்கிறது!

ஒரு சராசரி மனிதருக்கு தன் மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்? தாத்தா – பாட்டி, கொள்ளு தாத்தா – கொள்ளு பாட்டி. அதற்கும் முன்னால்? எள்ளு தாத்தா – எள்ளுப் பாட்டியை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள்? அதேபோல பேரன் – பேத்தி, கொள்ளு பேரன் – கொள்ளு பேத்தி. அதற்குப் பிறகு எள்ளு பேரன் – எள்ளு பேத்தியை எத்தனை பேரால் பார்க்க முடியும்? வரப்போகிற உறவுகள் இருக்கட்டும், வந்துபோன உறவுகளில் எத்தனை பேருடன் நமக்கு அறிமுகம் இருக்கிறது? நம் தாத்தா, தன் தாத்தாவைப் பற்றிக் கூறினால் நமக்குத் தெரியவரலாம். சரி, அதற்கும் முன்னால்….?

நம் அறிவாற்றலும், நினைவாற்றலும் ஒரு வரம்புக்குட்பட்டது. அது நம் ஆயுளுடன் முடிந்துவிடுவது. நடந்த காலத்தையும், வருங்காலத்தையும் பார்க்கக்கூடிய காலக் கண்ணாடி நம்மிடம் இல்லை. ஆகையால் நம் கொள்ளுத் தாத்தாவுக்கு முந்தையவர் நமக்குத் தெரியாதவர்தான். ஆனால், வேடிக்கை பாருங்கள், நமக்குத் தெரியாத அந்த தந்தைவழி உறவினரின் உயிரணு (ஜீன்) நமக்குள் ஊறியிருக்கிறது! அதையும் நம்மால் உணர முடியாததுதான் விசித்திரம்! அதாவது, நம் புலன்களால் தெரிந்துகொள்ள முடியாத ஆனால், நம் உடலுடன் இணைந்திருக்கும், எத்தனையோ தலைமுறையாகத் தொடர்ந்துவரும் நம் உறவின் அணு அது!

ஆனால், பகவான் எல்லோருக்கும் முதல்வன். அவர் பார்த்து வளர்ந்த மக்களே நாம் அனைவரும். நம்முடைய முந்தையவர்களையும் அவருக்குத் தெரியும், பிந்தியவர்களையும் தெரியும். அதனால்தான் ‘முன்னோர்களைப் போல நீயும் கர்மாக்களைச் செய்,’ என்று அவரால் அர்ஜுனனுக்கு அறிவுறுத்த முடிகிறது. ‘நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் செய்திருக்கிறார்கள், நீயும் அவர்களைப் போலவே எந்த பலன்களையும் எதிர்பாராமல் கர்மாக்களைச் செய்,’ என்று சாட்சி பூர்வமாகச் சொல்லும் அறிவுரை அது!

அதைவிட, அவனால் முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாகவே கீதை உரை ஆற்றுகிறார் கிருஷ்ணன். கௌரவர்கள் என்ற அதர்மக் கூட்டத்தை அழிக்க பிற சகோதரர்களைப் போலவே தனக்கும் அதே விகிதாசாரத்தில் பொறுப்பு இருக்கிறது என்றாலும், பிறரைப் போல அல்லாமல், எதிரி களாக நிற்பவர்களைக் கொல்வதில் தயக்கம் காட்டுகிறான் அர்ஜுனன். இவனுடைய வீரம் இந்தத் தயக்கத்தால் விழுந்துவிடக் கூடாது, இவனுடைய ஆற்றல் இந்த மனப் பின்னடைவால் மழுங்கிவிடக் கூடாது, இவனுடைய பராக்கிரமம் இந்த மனச்சோர்வால் பழுதுபட்டு விடக்கூடாது. அதற்காகத்தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம், பலவாறாகப் பேசுகிறார். அதர்மத்துக்கு எதிராகத் தன் ஆதரவில் நடந்து கொண்டிருக்கும் போர் அரைகுறையாக முடிந்துவிடக் கூடாது, அது அதர்மத்துக்குதான் வலு என்ற ‘ஆதங்கத்தில்’கூட கிருஷ்ணன் அவ்வாறு வலியுறுத்திப் பேசுகிறாரோ என்றும் தோன்றுகிறது!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post மூதாதையரில் எத்தனை பேரைத் தெரியும்? appeared first on Dinakaran.

Tags : Srikrishna Amutham ,
× RELATED பகவத்கீதை உரை: சுவாசம் போன்றதுதான் கர்மா