×

நடராஜர் கோயிலில் கட்டுமான பணி நடத்த பூர்வாங்க பணி செய்யப்பட்டுள்ளதா? பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு தமிழக அரசு கடிதம்

சிதம்பரம், நவ. 9: சிதம்பரம் நடராஜர் கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயிலில் அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடைபெறுவதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு நடத்தி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் ஆய்வாளர் நரசிங்கபெருமாள், சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு பதிவு தபாலில் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், கோயிலின் தெற்கு கோபுர வாயில் அருகில் கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக பூவாங்கப் பணிகள் நடந்ததாக தெரிகிறது. இணை ஆணையரின் உத்தரவின்படி திருக்கோயிலை ஆய்வு செய்தபோது தெற்கு கோபுரம் அருகில் இடது மற்றும் வலது புறத்தில் இடம் சுத்தப்படுத்தப்பட்டு, மதில் சுவரில் மறைப்புகள் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் என்ன பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்தும், கட்டுமானங்கள் மேற்கொள்வதாக இருந்தால் நகராட்சி துறை, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை அனுமதி பெறப்பட்டிருந்தால் அது குறித்த விவரத்தையும் அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் திருக்கோயிலில் புதிய கட்டுமானங்கள் கட்டுவது குறித்து ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக இடம் சுத்தப்படுத்தப்பட்டு இருப்பது ஏற்புடையதல்ல எனவும், இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி தொல்லியல் துறை கருத்துரு பெற்று மண்டல, மாநில குழுவில் வைத்து ஒப்புதல் பெற்ற பின்னரே திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் எவ்வித அனுமதியும் பெறாமல் பணிகள் மேற்கொண்டால் துறை ரீதியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதிய கட்டுமானங்கள் குறித்து ஆய்வு நடத்தி விசாரணை நடத்த வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்களின் செயலாளருக்கு இந்து சமய அறநிலையத் துறையினர் கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நடராஜர் கோயிலில் கட்டுமான பணி நடத்த பூர்வாங்க பணி செய்யப்பட்டுள்ளதா? பொது தீட்சிதர்களின் செயலாளருக்கு தமிழக அரசு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Nataraja temple ,Tamil Nadu Government ,Secretary of Public Dikshitars ,Chidambaram ,Chidambaram Nataraja Temple ,Dikshitars ,Dinakaran ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...