×

அமெரிக்க நகரங்களை போன்று தெருக்களில் வசிப்பவர்களால் குற்றங்கள் அதிகரிப்பு: இந்திய வம்சாவளி இங்கிலாந்து அமைச்சர் சர்ச்சை கருத்து

லண்டன்: அமெரிக்க நகரங்களை போன்று இங்கிலாந்து தெருக்களில் வசிப்பர்களால் குற்றங்கள் அதிகரிப்பதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து அமைச்சர் கூறிய கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் தனது சமூக வலைதள பதிவில், ‘இங்கிலாந்து மக்கள் மிகவும் அன்பானவர்கள். உண்மையில் வீடு இல்லாதவர்களுக்கு எங்களது அரசு உதவும்.

ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் பலர், இங்கிலாந்தின் நகர தெருக்களில் வரிசையாக கூடாரங்களை அமைத்து வாழ்கின்றனர். அவ்வாறு அவர்கள் கூடாரங்களை வைத்து ஆக்கிரமிப்பதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு தெருக்களில் வாழ்வது அவர்களின் விருப்பமாக உள்ளது. தெருக்களை ஆக்கிரமித்து கூடாரங்களில் வசிக்கும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போல இங்கிலாந்து நகரங்கள் மாறுவதை அனுமதிக்க முடியாது. அமெரிக்காவின் இரண்டு நகரங்களிலும் தெருக்களில் வசிப்பவர்களால் தான் அதிக குற்றங்கள் நடப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

மேலும் அமெரிக்க அரசின் பலவீனமான கொள்கைகளால் அதிக குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு, நகர தூய்மையின்மை அதிகரித்துள்ளது. மது மற்றும் போதைப் பழக்கத்தால் தெருக்களில் வாழும் மக்களுக்கு உதவ இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடாரம் போட்டு, மக்களிடம் வலுக்கட்டாயமாக பிச்சை எடுப்பது, திருடுவது, போதைப்பொருள் பயன்படுத்துவது, அசுத்தத்தை பரப்புவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுக்கு வாக்களித்த பெரும்பாலான மக்களும் அதையே விரும்புகிறார்கள்’ என்றார். உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனின் இந்த கருத்து குறித்து, அவரது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை மேற்கோள் காட்டி, அவர் கூறியதாக வெளியான செய்தியில், ‘நகரங்களின் தெருக்களில் யாரும் தூங்குவதை நான் விரும்பவில்லை. வீடற்றவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post அமெரிக்க நகரங்களை போன்று தெருக்களில் வசிப்பவர்களால் குற்றங்கள் அதிகரிப்பு: இந்திய வம்சாவளி இங்கிலாந்து அமைச்சர் சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.

Tags : US ,UK ,minister ,London ,England ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...