×

காங்கயத்தில் அரசு பள்ளிகளில் சுகாதார பணிகளுக்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

 

காங்கயம், நவ.8: காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் மற்றும் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு 4 மாத கால ஊதியம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் தலைமை வசித்தார். துணை தலைவர் ஜீவிதா ஜவகர் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ் குமார் கூறியதாவது:

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட 57 பள்ளிகளின் கழிப்பறைகள், வகுப்பறைகள், பள்ளி வளாகங்கள் சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு செய்தல் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத் தொகையான ரூ.3 லட்சத்து 73 ஆயிரம் பள்ளிகளின் கிராம கல்விக்குழு கணக்கு மூலம் வழங்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, 2023 அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியத்தை ஒன்றிய பொது நிதியிலிருந்து வழங்கிடவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் 31 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ஹரிஹரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post காங்கயத்தில் அரசு பள்ளிகளில் சுகாதார பணிகளுக்கு ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு: ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Panchayat Union Committee ,Kangayam panchayat union ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது பெண்கள் புகார்