×

ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும்: திருமாவளவன்!

சென்னை: ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க முயலுவதை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஓ.என்.ஜி.சியின் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும். தமிழர் விரோத ஃபாசிச பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த 31.10.2023 அன்று விண்ணப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி வட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டாரப் பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைத்திட ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிற, ஏற்கெனவே செயல்பட்டு வந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளால் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாயம் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. ஒ.என்.ஜி.சி., வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களின் இந்த நாசகார திட்டத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெகுமக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ளன.

இப்போராட்டங்களின் விளைவாக 2020ம் ஆண்டு அப்போதைய அரசு காவிரி டெல்டாவைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்து சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதுடன், சட்ட வரம்புக்கு உட்படாத ஒருசில மாவட்டங்களிலும் தொடர்ந்து புதிய கிணறுகளுக்கான அனுமதியைக் கோருவது, மற்றும் அவற்றுக்கான ஏல அறிவிப்புகளை மேற்கொள்வது உள்ளிட்ட எதேச்சதிகார போக்குடன் ஃபாசிச பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களுக்கு விரோதமான இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 13.06.2021 அன்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் “தமிழ் நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ் நாடு அரசு ஒருபோதும் வழங்காது” எனத் தெரிவித்திருந்தார்.

திட்டவட்டமாக ஒரு மாநில அரசின் முதல்வரே ஹைட்ரோகார்பன் கிணறுகளை அனுமதிக்க முடியாது என அறிவித்த பின்னரும் தமிழ் நாட்டில் புதிய கிணறுகளை அமைக்க முயல்வது ஜனநாயக விரோதமானதாகும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டும் வகையில் உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அனுமதி கோரும் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு மறுதலிக்க வேண்டும் எனவும் தமிழ் நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ஒன்றிய அரசு செயல்படுத்துவதை அனுமதிக்கக் கூடாதெனவும் மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். என்று பதிவிட்டுள்ளார்.

 

The post ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முயற்சிக்கும் ஓஎன்ஜிசி விண்ணப்பங்களை மறுதலிக்க வேண்டும்: திருமாவளவன்! appeared first on Dinakaran.

Tags : ONGC ,CHENNAI ,VC Thirumavalavan ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...