×

இராமாயணம் தெளிவோம்

இராமாயணம் நம் எல்லோருக்கும் தெரியும். இந்திய சமய மரபில் உள்ள இரண்டு இதிகாசங்களில் ஒன்று இராமாயணம். மொழி, பிராந்தியம் என எல்லா வேறுபாடுகளையும் கடந்து, மக்கள் மனதில் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் காவியம் ராமாயணம். இராமாயணத்தைப் பாடாத கவிஞர்கள் இல்லை. எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பேசாத உபன்யாசகர்கள் இல்லை. எனவேதான் ராமாயணத்தைப் பாரத தேசத்தில் எல்லோரும் அறிந்து இருக்கிறார்கள்.

மூல நூலான வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகி யென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் ராமாயணத்தைத் தழுவியவை ஆகும். ஆனால், ராமாயணத்தைத் தெளிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே…

விசிஷ்டாத்வைத ஆச்சாரியார் சுவாமி ராமானுஜர், ராமாயணம் முறையாகப் படிக்க வேண்டும் என்பதற்காக, திருப்பதிக்குச் சென்று அங்கு மலை அடிவாரத்தில் (அலிபிரி) ஓராண்டு காலம் பெரிய திருமலை நம்பிகளிடம் காலட்சேபமாகக் கற்றார் என்பது வரலாறு. உபன்யாசம் என்பது வேறு, சொற்பொழிவு என்பது வேறு, காலட்ஷேபம் என்பது வேறு. காலட்சேபம் என்பது ஒரு குருவிடம் இருந்து முறையாகப் கேட்பது.

நமக்கெல்லாம் தெரிந்த ராமாயணம், பிர்ம சூத்திரத்திற்கு உரைசெய்த ராமானுஜருக்குத் தெரியாமல் இருக்குமா? பத்து நாட்கள் ஒரு உபன்யாசத்தில் உட்கார்ந்தால், ராமாயணக் கதையைத் தெரிந்து கொண்டுவிடலாமே, அதற்கு, ராமானுஜரைப் போன்ற தத்துவ தரிசிகள், ஓராண்டு காலம் எதற்கு செலவழிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது அல்லவா. இந்தக் கேள்வி எழுந்தால்தான், இதற்கான விடையும் அறிய முடியும்.

ராமாயணத்தை அறிவதற்காக ராமானுஜர் போகவில்லை. ராமாயணத்தைத் தெளிவதற்காகப் போனார். “படி கொண்ட கீர்த்தி ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் ராமானுஜர்” என்று இந்த விஷயத்தை திருவரங்கத்து அமுதனார் கொண்டாடுவார். ராமாயணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். ராமாயணம்,

1. இலக்கண இலக்கிய ஆழம் மிகுந்த நூல்.
2. சமய மரபுகளை விளக்கும் நூல்.
3. ஸ்ருதி, ஸ்மிரிதி எனப்படும் வேத உபநிடத கருத்துக்களை எளிதாக விளக்கும் நூல்.
4. வாழ்வியல் உண்மைகளை உரைக்கும் நூல்.
5. உலக சகோதரத்துவத்தை (Universal brotherhood) உணர்வுபூர்வமாக விளக்கும் நூல்.
6. தத்துவ தரிசன நூல் (அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம்) என, மூன்று வகை தத்துவத்தைச் சேர்ந்தவர்களும் ராமாயணத்தை ஆராய்ந்து இருக்கிறார்கள்.
7. உபதேச மந்திர நூல் (இதில்தானே தாரக நாமமான இரண்டு எழுத்து ராம நாம மந்திரம் உள்ளது).

“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம் – சிறப்புப் பாயிரம்14)

8. மனித மனங்களில் விசித்திரங்களை விளக்கும் உளவியல் நுட்ப நூல்.
9. போர்க்கலையின் திறத்தை விளக்கும் நூல்.
10. புண்ணியக் கதைகள் அடங்கிய நூல்.
11. மனிதனின் ஒழுக்க நெறியை உணர்த்தும் நூல்.
12. தர்ம நுட்பங்களை விளக்கும் அறநூல்.

என ராமாயணத்தின் உட்கூறுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உண்மையில் இவை அத்தனையும் ராமாயணத்தில் இருக்கவே செய்கின்றன. “ராம ராஜ்ஜியம்” என்ற ஒரு அற்புதமான சொல். ராமாயணத்தை ஒட்டி புழக்கத்தில் இருக்கிற சொல். ஓர் அரசு எப்படி இயங்க வேண்டும் என்ற ராஜநீதிகள் அதில் விரிவாக இருக்கின்றன.

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லைபொய் உரைஇலாமையால்;
வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால்.
வறுமை இன்மையால் கொடைச் சிறப்புத் தெரிவ தில்லை;
போர் இன்மையால் வலிமை தெரிவதில்லை;
பொய் இன்மையின் உண்மையின் சிறப்புத் தெரிவதில்லை;
கேள்வி ஞானம் உண்மையின் அறிவின்மை இல்லை.
என்ற கவிதையால் வெண்மை

யாகிய அறியாமை அந்த நாட்டில் இல்லாமையும் அதற்குரிய காரணமும் நன்கு விளக்கப் பெற்றுள்ளன. இது ஒரு துளி. ராமராஜ்யத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒரு உயர்ந்த ஆளுமையுடன் வாழ்ந்தனர். நல்ல செயல்களைச் செய்தனர். ஸ்ரீராமர் ராஜ்யத்தில், (Lord Shri Ram Kingdom) எந்தத் துன்பமும் இல்லை. கொடூரமான மிருகங்களிலிருந்து மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஸ்ரீராமரின் ஆட்சிக்காலத்தில் திருட்டு அல்லது கொள்ளை எதுவும் இல்லை. சமத்துவம் இருந்தது. இளைஞர்கள் சுறுசுறுப்பாக இருந்தனர்.

ஸ்ரீராமரின் ஆட்சிக் காலத்தில் எந்த உயிரினத்திற்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ராமரின் இரக்கமுள்ள பார்வையுடன் அனைத்து உயிரினங்களும் வன்முறை இன்றி வாழ்ந்தனர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தசரதன் தனக்கு பிள்ளை வரம் வேண்டும் பொழுதும், வசிஷ்டர் ராமனுக்கு அரசாட்சி குறித்த சில ஆலோசனைகள் வழங்கும் போதும், ராமன் காட்டில் தன்னைத்திரும்ப அழைத்துச் செல்ல வந்த பரதனை விசாரிக்கும் பொழுதும், இந்த ராஜநீதி நுட்பங்கள் தெளிவாக இருப்பதை ராமாயணத்தை ஆழ்ந்து படிப்பவர்கள் இனம் கண்டு தெளிய முடியும்.

இறுதியாக, ராம ராஜ்ஜியம் எப்படி இருந்தது என்பதை வால்மீகி பகவான் பல பக்கங்களில் விவரிக்கிறார். ராமாயணம் ஒரு குறிப்பிட்ட சமய நூலாகவும், பக்தி நூலாகவும் மட்டும் எடுத்துக் கொள்வதால், அதன் மேன்மை பெரும் பாலும் புரிவதில்லை. நம்மாழ்வார் ராமாயணத்தின் சிறப்பு குறித்து ஒரு திருவாய்மொழி பாடியிருக்கிறார்,

`கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்றி இன்றியே
நற்பால் அயோத்தியில்வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்குள் உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே’

ஒருவர் என்னதான் பல விஷயங்களைக் கற்று இருந்தாலும், அவர் ராமாயணத்தை முறையாகக் கற்கவில்லை என்றால் (முறையாக என்ற வார்த்தை முக்கியம்). அவர் கல்வியில் நிறைவடைந்து இருப்பவராகச்சொல்ல முடியாது என்பது நம்மாழ்வாரின் கருத்து. வேதம் படித்து ராமாயணம் கற்கவில்லை என்றால், பயன் இல்லை. காரணம், வேதத்தின் பல்வேறு பகுதிகள் குழப்பி விட்டுவிடும்.

அர்த்தத்தை நிச்சயப் படுத்திக்கொள்ள முடியாது. ஆனால், ராமாயணம் முறையாகப் படித்துவிட்டால், வேதத்தினுடைய அர்த்தத்தை தெளிவாகப் புரிந்துகொண்டுவிடலாம். அதனால்தான், உபநிடத பிரம்ம சூத்திரக் கருத்துக்களையும், பிர்மத்தின் தத்துவத்தையும் ஆச்சாரிய மகனீயர்கள் விளக்கும் பொழுது ராமாயணச் சுலோகங்களை மேற்கோள்காட்டி விளக்குவார்கள். அப்படிப்பட்ட ராமாயணத்தின் அதி நுட்பமான விஷயங்களை நாம் கற்றுத் தெளியவேண்டும், தெளிவோம்.

தொகுப்பு: தேஜஸ்வி

The post இராமாயணம் தெளிவோம் appeared first on Dinakaran.

Tags : Ramayana ,Shravaram ,
× RELATED விரிஞ்சனோ? விடைவலானோ?