×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு

 

சத்தியமங்கலம், நவ.7: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதன் காரணமாக கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5678 கன அடியாக இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று மாலை 4 மணிக்கு நீர்வரத்து 1521 கன அடியாக குறைந்தது. நேற்று மாலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 67.26 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 9.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar Dam ,Sathyamangalam ,Erode ,Tirupur ,Karur ,Erode district ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது