×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

555. த்ருடாய நமஹ (Dhrudaaya Namaha)

முன்னொரு சமயம் நிர்மலன் என்ற மன்னன் சோழநாட்டுப் பகுதியை ஆட்சி செய்துவந்தான். அந்த நிர்மல மன்னனுக்குத் தொழுநோய் ஏற்பட்டது. அக்கால மருத்துவ முறைகள் பலவற்றைக் கையாண்டு பார்த்த போதும், அவனது தொழுநோய் குணமாகவில்லை. இந்த நிலையில் நிர்மலன் காட்டில் ஒரு முனிவரைச் சந்தித்தான். தனது நோயைக் குணப்படுத்தி அருள வேண்டும் என்று அந்த முனிவரிடம் வேண்டினான். திருமாலைக் குறித்து வழிபாடு செய்தால் உன் நோய் குணமாகும் என்று முனிவர் அவனை அறிவுறுத்தினார்.

அதன்படி நிர்மலராஜாவும் திருமாலைக் குறித்துத் தவம் இயற்றினான். அவனிடம் அசரீரி வடிவில் பேசிய திருமால், “நிர்மல மன்னா, நீ காவிரிக்கரை வழியே சென்று கொண்டே இரு. ஓரிடத்துக்கு நீ வரும்போது உன் உடல் தங்கமயமாக மாறும். எந்த இடத்தில் உன் உடல் பொன்மயம் ஆகிறதோ, அப்போது உன் வியாதி குணமாகிவிட்டதாகப் பொருள். நான் அங்கே உனக்குக் காட்சி அளிப்பேன்’’ என்று சொன்னார்.

“திருமாலே, அடியேன் வழிதவறிச் சென்று விட்டால் என்ன செய்வது’’ என்று அச்சத்துடன் கேட்டான் நிர்மலன். “மார்கஸஹாயேசுவரர் என்ற பெயருடன் சிவபெருமானே உனக்கு வழித்துணையாக வருவார். அவர் காட்டும் வழியில் நீ தைரியமாகப் பயணிக்கலாம்’’ என்று சொன்னார் திருமால். அதன்படி நிர்மல மன்னனும் காவிரிக் கரையோரமாகத் தன் பயணத்தைக் கிழக்குநோக்கி மேற்கொண்டான். மயிலாடுதுறைக்கு மேற்கே ஓர் இடத்துக்கு வந்தபோது நிர்மலனின் உடல் பொன்மயமாக மாறியது. அதனால், மிகவும் மகிழ்ந்தான் நிர்மலன். தனக்கு அருள்புரிந்த திருமாலை அவ்விடத்திலேயே தரிசித்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டான் நிர்மலன்.

அந்த இடத்திலேயே திருமாலைக் குறித்துத் தவம்புரிந்தான் நிர்மலன். பல்லாண்டுகள் தவம்புரிந்த பின், அவனுக்குத் திருமால் அந்த இடத்தில் காட்சி அளித்தார். மிக உயரமான அத்திமரத்தால் ஆன திருமேனியுடன் தரிசனம் தந்தார் திருமால். திருமாலின் திருவடிகளைப் பணிந்தான் நிர்மலன்.திருமால் நிர்மலனைப் பார்த்து, “மன்னா, நீ பிப்பல மரத்தடியில் தவம் புரிந்தபடியால், நீ இனி `பிப்பல முனிவர்’ என்று அழைக்கப்படுவாய். நீ தவம் புரிந்த இடத்துக்கு அருகிலுள்ள பொய்கை இனி `பிப்பல தீர்த்தம்’ என்று அழைக்கப்படும். நான் வானை முட்டும் அளவு உயர்ந்த வடிவத்துடன் காட்சி தந்தபடியால், `வானமுட்டி ஸ்ரீநிவாசன்’ என்று நான் அழைக்கப்படுவேன்.

`ஹத்தி’ என்றால் பாபம், கோடி ஹத்தி செய்தாலும் இந்தத் திருத்தலம் போக்கும் என்பதால் இவ்வூர் கோடிஹத்தி என்று அழைக்கப்படும்’’ என்று சொன்னார். கோடிஹத்தி என்பதுதான் பின்னாளில் மருவி `கோழிக்குத்தி’ என்று ஆனது. இன்றும் மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் மார்க்கத்தில் 5 கி.மீ. தூரத்தில் கோழிக்குத்தி உள்ளது. அத்திவரதரைப் போலவே அத்திமரத்தால் ஆன திருமேனியோடு வானமுட்டி ஸ்ரீநிவாசன் இன்றளவும் காட்சி அளிக்கிறார்.

நிர்மல மன்னவனின் உடல்நோயைப் போக்கியதோடு மட்டும் இல்லாமல், ஆத்மாவின் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வேண்டும் என்பதற்காக இப்படித் திடமான வடிவத்தோடு வந்து காட்சி அளித்து அருள் புரிந்தார். ஆங்கிலத்தில் solid என்று சொல்லப்படும் பொருளைத் தமிழில் திடம் என்றும் வடமொழியில் த்ருடம் என்றும் சொல்வார்கள். பக்தர்கள் தன்னைக் கண்டு அனுபவிக்கும்படி solid form எனப்படும் திட வடிவத்துடன் காட்சி தருவதால், திருமால் த்ருடஹ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 555-வது திருநாமம்.

`த்ருடஹ’ என்றால் திடமான வடிவம் எடுத்து பக்தர்களுக்குக் காட்சி அளிப்பவர் என்று பொருள். “த்ருடாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திடமான ஆரோக்கியம் ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.

556. ஸங்கர்ஷணாய நமஹ (Sankarshanaaya Namaha)

திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்கள் பாடிய அழகர்மலையில் எழுந்தருளி இருக்கும் கள்ளழகரைக் குறித்துக் கூரத்தாழ்வான் என்ற மகான் “சுந்தர பாஹு ஸ்தவம்’’ என்ற அற்புதமான துதியை அருளிச் செய்துள்ளார். அதில் அழகர் மலையில் வசிக்கும் உயிரினங்கள் அத்தனையும் அழகர்மீது பக்தியுடன் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார்.

ஸுந்தரதோர் திவ்யாஜ்ஞாலம்பன
காதர வசாநுயாயினி கரிணி
ப்ரணயஜ கலஹ ஸமாதிர் யத்ர
வனாத்ரிஸ் ஸ ஏஷ ஸுந்தரதோஷ்ண:

அழகர்மலையில் இருக்கும் ஆண் யானைக்கும், பெண் யானைக்கும் இடையே ஊடல் ஏற்பட்டால், ஆண் யானை, பெண் யானையைப் பார்த்து, இது அழகரின் மலை. நாம் இணைந்து வாழ்ந்து அழகருக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பது அழகரின் ஆணை. அதை மீறி நீ என்னைப் பிரிந்து போவாயோ என்று கேட்குமாம். அழகர் மீதுள்ள பக்தியால் பிரிந்த பெண்யானை, கோபத்தை விடுத்து மீண்டும் ஆண்யானையிடம் வந்து சேர்ந்து விடுமாம்.

அவ்வாறே, அழகர் மலையில் உள்ள பறவைகள் சபதம் செய்யும் போது, பறவைகளின் தலைவரான கருடன் மீது ஆணை என்றுதான் சபதம் செய்யுமாம். பாம்புகள் சபதம் செய்தால், தங்கள் தலைவரான ஆதிசேஷன் மீது ஆணை என்றுதான் சபதம் செய்யுமாம். இப்படி விலங்குகள், பறவைகள்கூட அழகர் மீது பக்தியோடு வசிக்கும் மலை அழகர்மலை. இது மட்டுமில்லை, அழகர் மலையில் உள்ள மலை, கல் ஆகியவைகூட அழகரிடம் ஈடுபட்டிருக்குமாம். அதைக் கூரத்தாழ்வான்,

வகுள தர ஸர்ஸவதீ விஷக்த
ஸ்வரஸ பாவ யுதாஸு கிந்நரீஷு
த்ரவதி த்ருஷதபி ப்ரஸக்த கானஸ்
விஹ வனசைல தடீஷு ஸுந்தரஸ்ய
– என்ற சுலோகத்தில் தெரிவிக்கிறார்.

தேவலோகப் பெண்கள் பூமிக்கு இறங்கி வந்து, நம்மாழ்வார் அழகருக்காகப் பாடிய திருவாய்மொழிப் பாசுரங்களைப் பக்தியோடு பாடினார்களாம். இப்படி தேவமாதர் பாடும் தமிழ்வேதப் பாசுரங்களையும் அதில் உள்ள பக்தி ரசத்தையும் கேட்டதாலே, அழகர் மலையில் உள்ள கல்பாறைகள்கூட உருகி விட்டனவாம். அவ்வாறு மலை மேலே உள்ள கல் பாறைகள் எல்லாம் உருகிக் கீழ்நோக்கி வரவேதான் அழகர் மலையில் சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கை உருவானது என்று கூரத்தாழ்வான் ரசிக்கிறார்.

ஆக, தேவலோகப் பெண்கள் தொடங்கி, யானை, பறவைகள், பாம்புகள் போன்ற உயிரினங்கள், கல் பாறைகள் என அனைத்தையுமே தன் பால் ஈர்த்து விடுகிறார் கள்ளழகர். இப்படி எல்லோரையும் தன்னை நோக்கி ஈர்ப்பதாலே, திருமால் “ஸங்கர்ஷணஹ’’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 556-வது திருநாமம்.“ஸங்கர்ஷணஹ’’ என்றால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவர் என்று பொருள். “ஸங்கர்ஷணாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நம் மனமும் மற்ற விஷயங்களை நாடாமல் இறைவனிடத்தில் ஈடுபடும்படி இறைவனே அருள்புரிவார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

The post அனந்தனுக்கு 1000 நாமங்கள்! appeared first on Dinakaran.

Tags : Anantan ,Saffron ,Dhrudaaya Namaha ,Nirmalan ,Chozhanadu ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!