×

இந்த வார விசேஷங்கள்

சக்தி நாயனார் குருபூஜை
4.11.2023 – சனி

“கழற்சத்தி வரிஞ்சையார் கோனடியார்க்கும் மடியேன்” என்பது சுந்தரர் பெருமானின் திருத்தொண்டத் தொகை. சக்தி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சக்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்ந்துரைப் பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார். சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தார். இவர் குருபூஜை ஐப்பசி பூசம்.

அம்மா மண்டபம் – மதுரகவி மோட்ச நாள்
(குருபூஜை) 6.11.2023 – திங்கள்

திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் இந்தத் திருநந்தவனமும் சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்), உள்ளது. திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப் படும் ஒரு நந்தவனமும் உண்டு. அது சாதாரண நந்தவனமல்ல.

ஒரு நெடிய இனிய வரலாறு உண்டு. அங்கே ஒரு வைணவ சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்) உள்ளது. இந்த இடம் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும், காவிரிக்கரை ஓரத்தில் உள்ளது. அது என்ன வரலாறு? 1846-ஆம் வருடம் தைப்பூசத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை – ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள். திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை
பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே.

– என்ற பெரியாழ்வாரின் பாடலில் மயங்கினார்.

கிபி 1855-ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும் போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள் அழகில் மனதை பறிகொடுத்த நிலையில் திருமாலுக்கு திருமாலை (இறைவனுக்காக மலர் மாலை தொடுத்தல்) கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதிபூண்டார். அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுசதாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கத்தானிடம் மட்டுமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை முறை கொண்ட இறை அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலை கற்றுக்கொண்டார்.

மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயதில் அவரது பெற்றோர், பெண் பார்க்கத் தொடங்கிய போது தனக்குத் திருமணம் வேண்டாம் என்றும், ஒர் ஏகாங்கியாக அரங்கன் சேவையில் என்றென்றும்தான் திளைத்திருக்கப் போவதாகவும் கூறி தன் திருமணத்திற்கு பெற்றோர் சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டார். இந்தத் தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கித் தாயாருக்கு சார்த்தி அழகுப் பார்த்தார் மதுரகவி. மீண்டும் பெற்றோரிடம் இருந்து தனக்கு வரவேண்டிய சொத்தினை பெற்றுக் கொண்டு இந்த நந்தவனத்தில் விதம் விதமான பூச்செடிகளை வளர்த்தார்.

வருடம் முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும் தாயாருக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே வருகின்றன. துளசி, விருட்சி, சம்பங்கி, மாசிப்பச்சை, நந்தியாவட்டை, துளசி, பட்டு ரோஜா, மனோரஞ்சிதம், மகிழம்பூ குருக்கத்தி, பாதிரி என்று எண்ணற்ற பூ வகைகள் நிறைந்த நந்தவனத்தில், தினமும் அதிகாலை வேளையில் சுமார் பத்து ஏகாங்கிகள், மாலை கட்டுதல், பூப்பறித்தல் என தினமும் சுமார் பதினாறு மாலைகள்.

இரு வேளைகளில் – அதாவது மொத்தம் முப்பத்திரண்டு மாலைகள் திருவரங்கம் செல்கின்றன. உற்சவ நாட்களான சித்திரை, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களில் நடக்கும் திருவிழாக் காலங் களில் (மொத்தம் 44 நட்கள்) அலங்கார மாலைகள் செல்லும். ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு, ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சந்நதி ஸ்வாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார்.

நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு வைணவ அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார். பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோயிலின் பொன் கூரையையும் புதுப்பிக்க, கி.பி 1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக, முதலில் தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் மதுரகவி.

அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி, அரங்கன் ஆணையிட, மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் விவரித்தார். அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, தன்னுடையதே முதல் உபயம் எனக்கூறி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டு துவங்கிவைத்தார், திருகுவளைக்குடி சிங்கம் ஐயங்கார்.

ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. கிபி 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைவில் கொள்க. இதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள், அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார்.

மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும், திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம் செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம்பழங்களும், தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. திருவரங்கம் கோயில் வெளியாண்டாள் சந்நதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

ஐப்பசி பூரம்
8.11.2023 – புதன்

காஞ்சி க்ஷேத்ரத்தில் காமாட்சி தேவி, பிரம்மாவின் தபஸிற்கு மகிழ்ந்து, பிலாகாசத்தில் இருந்து கரும்புவில், பஞ்ச புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நாம் பார்க்கும் அழகு வடிவமாககாட்சி தந்த நாள் இன்று. ஐப்பசி மாத பூர நட்சத்திர தினத்தன்று, காமாட்சி அம்பாள் இன்றைய கால கட்டத்திலே நாம் எந்த ரூபத்தோடு தரிசனம் செய்து வருகிறோமோ, மூலஸ்தான அம்பாளாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்திலே இருக்கக் கூடிய அந்த உருவத்துடன், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த தினமாக, ஆதி திராவிட தினமாக, பிரகடனமான தினமாக, இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

காமாட்சி அம்பாள் ஐந்து ரூபமாக தரிசனம் அளித்து, அனுகிரகம் தருகிறாள். முதலிலே விலாகாச காமாட்சி, எந்த இடத்தில் கம்பத்தில் ஓட்டை இருக்கின்றன. அந்த நிலத்தில் இருந்து
வெளிப்பட்ட இடம். அந்த விலாகாசத்திலே, வருடத்திற்கு ஒரு நாள் க்ஷீர அபிஷேகம் நடைபெறுகிறது. காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலிலே அது விசேஷமாக நடைபெறுகிறது. ஐப்பசி பூரம்.

ரமா ஏகாதசி
9.11.2023 – வியாழன்

ஐப்பசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி, ரமா ஏகாதசி என்று போற்றப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பகவான் கிருஷ்ணரே அர்ஜுனனுக்கு எடுத்துரைப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஒரு கதை உள்ளது. முன்னொரு காலத்தில் முசுகுந்தன் என்னும் மன்னன் ஆட்சிசெய்துவந்தான். அவன் ஆட்சியில் மனிதர்கள் அனைவரும் விரதமிருக்க வேண்டும் என்ற விதியிருந்தது. இதனால் அந்த நாடு, செல்வத்தோடும் சுகங்களோடும் விளங்கியது.

முசுகுந்தனுக்கு சந்திரபாகா என்று ஒரு மகள் இருந்தாள். அவளை சோபன் என்கிற மன்னனுக்குத் திருமணம் செய்துவைத்தான். சோபன் ஒரு ஏகாதசி நாளில் தன் மாமனார் வீடான முசுகுந்தனின் அரண்மனைக்கு வந்தான். அன்று அனைவரும் உபவாசமிருந்தனர். விரதம் இருந்து அனுபவமில்லாத சோமனுக்கு பசி தங்க முடியவில்லை. எங்கும் உணவு கிடைக்கவில்லை. உடல் வலுயில்லாத அவன். உபவாசம் முடியும் வேளையில் இறந்தான். எப்படியோ ஏகாதசி விரதம் மேற்கொண்டிருந்த புண்ணியத்தால், அவன் திவ்யலோகம் அடைந்து, அங்கிருந்த தேவபுரம் என்னும் அரசை ஆண்டுவந்தான்.

தேவபுரம், செல்வச் செழிப்போடு திகழ்ந்தது. முசுகுந்தனின் ராஜ்ஜியத்திலிருந்து சோமகர்மா என்னும் அந்தணர் ஒருவர் பிரயாணம் செய்து, தேவபுரம் வந்தடைந்தார். சோபனைக் கண்டதும், அவன் யார் என்பதை அறிந்து அவனுடைய முன் ஜன்மம் குறித்து எடுத்துரைத்து, ரமா ஏகாதசி விரதத்தின் பலனாலேயே அவனுக்கு அந்த வாழ்வு கிடைத்தது என்று எடுத்துக்கூறினார்.

இதைக் கேட்டதும் சோபன், ஏகாதசி விரதத்தின் மகிமையை அறிந்து, தன் வாழ்வில் எப்போதும் இந்த விரதத்தைக் கடைபிடித்து வந்தான். ஏகாதசி விரதம் அளப்பரிய நலன்களை யுகத்திலும் புறத்திலும் அளிக்கக்கூடியது.

மகா பிரதோஷம்
10.11.2023 – வெள்ளி

இன்று மஹாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை. சந்திரனுக்குரிய ஹஸ்தம் நட்சத்திரம். இந்தநாளில், மாலை சிவாலயங்களில் சிவனாருக்கும், நந்தி தேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதில் கலந்து கொள்வோர் சகல நலன்களையும் பெறுவர்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : SHAKTI NAYANAR GURUPUJA ,SATURDAY ,KHARCHATI VARINJIAR KONADIARKUM MADIANE ,SUNDARAR PERUMAN ,
× RELATED நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு