×

மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓட, ஓட சரமாரி வெட்டு ஒருவர் கைது; 3 பேருக்கு வலை பொன்னையாற்றின் அணைக்கட்டு பகுதியில்

பொன்னை, நவ.4: பொன்னை அருகே மணல் கடத்துவதை மறைந்திருந்து வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரர் ஓட, ஓட சரமாரியாக வெட்டப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், பொன்னை அடுத்த கொக்கேரி பகுதியை சேர்ந்தவர் உமாபதி(40), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அதேபோல், கொக்கேரி அடுத்த எருக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் முனுசாமி(45), குமரேசன்(40). இந்நிலையில், முனுசாமி, குமரேசன் மற்றும் குமரேசனின் மகன்கள் சூர்யா(23), பிரகாஷ்(20) ஆகியோர் பொன்னையாற்றின் அணைக்கட்டு பகுதியில் இருந்து இரவு நேரத்தில் டிப்பர் லாரி மற்றும் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், நேற்று அதிகாலையும் இவர்கள் 4 பேரும் மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதி தனது பைக்கில் அங்கு சென்று, மறைவான இடத்தில் நின்றபடி மணல் கடத்துவதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை கவனித்த முனுசாமி, அவரது தம்பி குமரேசன் ஆகியோர், இதை ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டு உமாபதியை விரட்டியுள்ளனர். உடனே உமாபதி பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

ஆனாலும் விடாமல் துரத்தி சென்ற முனுசாமி, குமரேசன் ஆகிய இருவரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உமாபதியை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்தனர். மேலும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமாபதியை ஓட, ஓட சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த உமாபதி ரத்தம் சொட்டியபடி, அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள மேல்பாடி காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து உமாபதியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய முனுசாமி, அவரது குமரேசன், அவரது மகன்கள் சூர்யா, பிரகாஷ் ஆகியோர் மீது மணல் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, குமரேசனை நேற்று கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post மணல் கடத்தலை வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓட, ஓட சரமாரி வெட்டு ஒருவர் கைது; 3 பேருக்கு வலை பொன்னையாற்றின் அணைக்கட்டு பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Ponnaiyar ,Ponnai ,Dinakaran ,
× RELATED 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள்...