×

வெற்றி அல்லது வெளியேற்றம்! நியூசிலாந்து – பாகிஸ்தான் நெருக்கடியுடன் பலப்பரீட்சை

பெங்களூரு: ஐசிசி உலக கோப்பையின் 35வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, பெங்களூருவில் இன்று காலை 10.30க்கு தொடங்குகிறது. நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கவனம் ஈர்த்தது. தொடர்ந்து நெதர்லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் முதல் இடத்தில் இருந்தது. அதன் பிறகு இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா என பலம் வாய்ந்த அணிகளிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததால், அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்துடன் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையுடன் மோத வேண்டும். வில்லியம்சன், பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்படுவதும் நியூசி. அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஏறக்குறைய அதே நிலையில்தான் இருக்கிறது . பாக் இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்தி இருக்கிறது.

அதே சமயம் இந்தியா, ஆஸி., தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. அரையிறுதி வாய்ப்பு ‘சந்தேகம்’ என்ற நிலையில், எஞ்சிய 2 ஆட்டங்களில் இன்று நியூசி.யையும், அடுத்து இங்கிலாந்தையும் பாக். வீழ்த்தியாக வேண்டும். அப்படி வீழ்த்தினாலும் மற்ற அணிகளின் வெற்றி/தோல்விகள், ரன் ரேட் ஆகியவை பாக். வாய்ப்பு குறித்து முடிவு செய்யும். இரு அணிகளுமே ‘கட்டாய வெற்றி’ என்ற கடும் நெருக்கடியுடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* நியூசி. – பாக். இதுவரை 115 முறை மோதியுள்ளதில் பாக். 60-51 என முன்னிலை வகிக்கிறது (ஒரு ஆட்டம் ‘டை’, 3 ஆட்டம் ரத்து).

* பொதுவான களங்களில் நடந்த 37 போட்டியில் பாக். 23-14 என முன்னிலையில் உள்ளது.

* கடைசியாக மோதிய 5 போட்டியிலும் பாக். 4-1 எனற ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

* உலக கோப்பையில் 9 முறை மோதியுள்ளதில் பாக். 7, நியூசி. 2ல் வென்றுள்ளன.

* சின்னசாமி அரங்கில் நடந்த 28 ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணி 12லும், சேஸ் செய்த அணி 13லும் வென்றுள்ளன (3 ஆட்டம் மழையால் ரத்து).

* பெங்களூருவில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து களமிறங்குகிறது.

* இங்கு நியூசி. விளையாடிய 3 ஆட்டங்களிலும் இந்தியாவிடம் தோற்றுள்ளது.

* பாக். விளையாடிய 3 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் இந்தியாவை வென்றுள்ளது. எஞ்சிய 2 ஆட்டங்களில் இந்தியா, ஆஸி அணிகளிடம் தோல்வியடைந்தது.

* நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), லாதம் (துணை கேப்டன்), கான்வே, பிலிப்ஸ், யங், சாப்மேன், டேரில் மிட்செல், நீஷம், ரச்சின், சான்ட்னர், போல்ட், பெர்குசன், ஹென்றி, சோதி, சவுத்தீ.

* பாகிஸ்தான்: பாபர் (கேப்டன்), அப்துல்லா, ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், இப்திகார், ஆஹா சல்மான், சவுத் ஷகீல், ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, முகமது வாசிம், ஷாகீன் அப்ரிடி, உஸாமா மிர்.

The post வெற்றி அல்லது வெளியேற்றம்! நியூசிலாந்து – பாகிஸ்தான் நெருக்கடியுடன் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Zealand ,Pakistan ,BENGALURU ,New Zealand ,ICC World Cup ,Dinakaran ,
× RELATED வெலிங்டன் டெஸ்ட்; நியூசிலாந்துக்கு 369 ரன் இலக்கு