×

45 நாட்களில் ஆரி எம்பிராய்டரி கற்றுக் கொள்ளலாம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எம்பிராய்டரி பள்ளியை இந்தாண்டு செப்டம்பர் மாசம்தான் துவங்கினோம். ஆனால் கடந்த ஒரு வருடமாக இதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றார் யுடி டிசைனர் மற்றும் பிளவுஸ் நிறுவனர் சுமதி. ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவருக்கு சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட, அவர் தேர்வு செய்ததுதான் டிசைனிங் தொழில். ஸ்டார்டப் நிறுவனமாக இரண்டு டெய்லர்களுடன் ஆரம்பித்து தற்போது பிரைடல் பிளவுஸ் என்றால் யுடி என்னும் அளவிற்கு மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தினை தக்க வைத்துள்ளார். இவரின் சிறப்பே… தனித்துவமான பிரைடல் டிசைன் பிளவுஸ்களை இரண்டே நாட்களில் டெலிவரி கொடுப்பதுதான் அப்படிப்பட்ட டிசைன்களை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் எண்ணத்தில் துவங்கப்பட்டதுதான் ‘யுடி ஸ்கூல் ஆஃப் எம்பிராய்டரி’.

‘‘பொட்டிக் கடைகள் அனைத்திலும் எம்பிராய்டரிக்காக ஒரு சிறிய குழு இயங்கிக் கொண்டு இருக்கும். எம்பிராய்டரி என்பது கடல் போன்ற கலை. இதனை சாதாரண நூலில்
மட்டுமில்லாமல் ஜரிகை நூலிலும் செய்யலாம். இதனை யாரும் பெரிய அளவில் தொழிலாக பார்ப்பதில்லை. ஆனால் இதற்கு பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளது என்பது பலருக்கு தெரியவில்லை.

நான் ஒரு முறை பிரான்ஸ் சென்றிருந்த போது அங்கு எம்பிராய்டரிக்காகவே தனிப்பட்ட பயிற்சி மையம் இயங்கிக் கொண்டு இருப்பதை தெரிந்து கொண்டேன். நம் பாரம்பரிய கை வேலைப்பாட்டிற்கு வெளிநாட்டில் மதிப்பு கொடுக்கும் போது, அதற்கு நாம் ஏன் மரியாதை செலுத்தக்கூடாது என்ற எண்ணத்தின் விதைதான் இந்த பயிற்சி மையம். என்னைப் பொறுத்தவரை ஒரு பயிற்சி மையத்தினை ஆரம்பிக்கிறோம் என்றால் அதை முறையாக சொல்லித் தரவேண்டும். நானும் பயிற்சி அளிக்கிறேன் என்று பிசினஸ் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஒரு டிசைனராக இருக்கும் நான் அந்தக் கலைக்கு மரியாதை கொடுக்க தவறிவிட்டதாக தோன்றும். எம்பிராய்டரியை ஒரு தொழிலாக மாற்ற நினைத்துதான் இந்த பயிற்சி பள்ளியை துவங்கினேன்’’ என்றவர் இங்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் பற்றி விவரித்தார்.

‘‘முதலில் நாங்க என்ன சொல்லிக் கொடுக்க போகிறோம் அதற்கான பாடங்கள் என்ன என்பதை திட்டமிட்டோம். அதன் அடிப்படையில் ஹாண்ட் எம்பிராய்டரி மற்றும் ஆரி எம்பிராய்டரியின் பேசிக் பயிற்சியினை அளிப்பதற்கான பாடத்திட்டங்களை வடிவமைத்தோம். இதனை படித்தவர்கள் அட்வான்ஸ்ட் பயிற்சியினை மேற்கொள்ளலாம். அதில் 3டி டிசைன், யுடியின் ஸ்பெஷல் எம்பிராய்டரி, டாசில் மேக்கிங் என பல விதமான பயிற்சிகள் அடங்கும். பேசிக் பயிற்சியில் ஊசியினை கையில் பிடிக்காதவர்கள் மட்டுமில்லை, ஏற்கனவே எம்பிராய்டரி குறித்த பயிற்சி எடுத்தவர்கள் கூட இணைந்து படிக்கலாம். என்ன விதமான எம்பிராய்டரி டிசைன்கள் உள்ளன.

அதனை எவ்வாறு துணியில் கொண்டு வரலாம் என்பது குறித்த பயிற்சி அடங்கும். ஆரி வேலைப்பாடு பொறுத்தவரை அதற்கு பயன்படுத்தப்படும் ஊசி மற்றும் தைக்கும் முறை இரண்டுமே மாறுபடும். அந்த ஊசியினை பயன்படுத்தி எப்படி தைக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறோம். இது 45 நாள் பியிற்சி. இந்த ஒன்றரை மாதம் அந்தக் கலையில் உள்ள நுணுக்கங்கள் அனைத்தும் நாங்க சொல்லிக் கொடுப்போம்.

எங்க பள்ளியின் மிகவும் முக்கியமான அம்சம், இங்கு பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் பயிற்சி அளிக்கிறோம். பொதுவாக எம்பிராய்டரி என்றால் பிளவுசில் மட்டும்தான் டிசைன் செய்ய முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. குர்தா, சுடிதார், ஏன் பெண்கள் அணியும் பேன்டிலும் அழகான எம்பிராய்டரி டிசைன் செய்யலாம். ஒரு கலைக்கு பலவிதமான பரிணாமங்கள் உண்டு. அதனை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது அவரவர் திறமை.

இங்கு வரும் அனைவருக்கும் ஊசிப் பிடிக்க தெரியும் என்று சொல்ல முடியாது. அதை கூட இங்கு நான்கு மணி நேர பயிற்சியில்தான் கத்துப்பாங்க. காலை, மாலை என இரண்டு பேட்சிலும் பயிற்சி அளிக்கிறோம். ஒரு பேட்சில் 25 நபர் மட்டும் தான். காரணம், அப்பதான் அனைவரும் கவனம் செலுத்த முடியும். ஊசி பிடிப்பது, துணியினை எம்பிராய்டரி சட்டத்திற்குள் வைக்கும் முறை, பேசிக் எம்பிராய்டரி இழையினை எவ்வாறு போடணும் என ஒவ்வொன்றையும் படிப்படியாகத்தான் சொல்லித் தருகிறோம். பேசிக் முடிச்சவங்க அட்வான்ஸ்ட் பயிற்சியினை மேற்கொள்ளலாம். சிலர் ஏற்கனவே எம்பிராய்டரி பயிற்சி பெற்று இருப்பார்கள்.

அப்படி இருப்பவர்களுக்கு நான் நேரடியாக அட்வான்ஸ்ட் பயிற்சிக்கு அனுமதிப்பதில்லை. காரணம், நாங்க சொல்லித் தரும் முறையில் அவங்க பயிற்சி பெற்றால்தான் அவர்களால் எங்களின் அட்வான்ஸ்ட் பயிற்சியினை மேற்கொள்ள முடியும். அதில் பல ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு தனிப்பட்ட தேர்வு வைத்து அதில் அவர்கள் தேர்ச்சி பெற்றால்தான் அட்வான்ஸ்ட் பயிற்சிக்கு அனுமதிக்கிறோம்.

மேலும் பள்ளி இயங்க ஆரம்பித்து இரண்டு மாதம்தான் ஆகிறது என்பதால், தற்போது முதல் பேட்ச் மாணவர்கள் தான் பயிற்சியினை எடுத்து வருகிறார்கள். அவர்கள் முடித்த பிறகுதான் அட்வான்ஸ்ட் பயிற்சியினை துவங்க இருக்கிறோம். எங்களின் பயிற்சி மையம் மத்திய அரசுடன் இயங்கும் ஸ்கில் இந்தியா டெவலெப்மென்ட் துறையுடன் இணைக்கப்பட்டு இருப்பதால், பயிற்சி முடித்த அனைவருக்கும் அந்த துறைசார்ந்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. எங்களின் அடுத்த கட்டம், ஆதரவற்ற பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் இந்த பயிற்சியினை அளிக்க வேண்டும். மேலும் இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு எங்களின் யுடி டிசைனிங் நிறுவனத்திலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருவது’’ என்றார் சுமதி.

தொகுப்பு: நிஷா

The post 45 நாட்களில் ஆரி எம்பிராய்டரி கற்றுக் கொள்ளலாம்! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi ,Dinakaran ,
× RELATED பிள்ளைகளின் பிடிவாதத்தை பிடிவாதத்தால் சரிசெய்வோம்!