×

மழை நீர் தங்குதடையின்றி செல்ல வசதியாக அடையாறு, கூவம் உட்பட 4 முகத்துவாரங்களில் மணல் மேடுகளை அகற்றும் பணியை டிச.31 வரை மேற்கொள்ள நடவடிக்கை: ஒப்பந்த நிறுவனங்களுக்கு நீர்வளத்துறை அறிவுரை

சென்னை: அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய 4 முகத்துவாரங்களில் மணல் மேடுகளை அகற்றும் பணி டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ளலாம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 6ம் இரவு முதல் 11ம் தேதி வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியது. இந்த, ஏரிகள், குளங்களின் உபரி நீரும், வடிகால்கள் மூலம் கால்வாய்கள் வழியாக மழை நீர் அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயில் தான் திருப்பி விடப்பட்டன. அவ்வாறு திருப்பி விடப்படும் வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, படிப்படியாக தண்ணீர் வடிய தொடங்கும். எனவே, அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரத்தில், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் மேடுகளை உடனுக்குடன் அகற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், தற்போது ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் காலை, மாலை, இரவு நேரங்களிலும் மணல் மேடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கூடுதல் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, முகத்துவாரங்களில் மணல் மேடுகள் அகற்றப்பட்டு எளிதாக தண்ணீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, மணல் திட்டுகள் ஏற்படாத வண்ணம் அடிக்கடி தூர்வாரப்படுகிறது. இப்பணிகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை மேற்கொள்ளவும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளை தினமும் புகைப்படம் எடுத்து காலை, மாலை நடந்து வரும் பணிகள் குறித்து தேதி, நேரம் வாரியாக விவரங்களை குறிப்பிட்டு, அனுப்பி வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய் முகத்துவாரங்களில் மணல் மேடாக இருந்தால் தண்ணீர் கடலில் சென்று கலப்பதில் சிக்கல் ஏற்படும். கடந்த 2015ல் அடையாற்றில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் தான், ரிவர்ஸ் ஆகி சென்று குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தாலும் தண்ணீர் எளிதாக வழிந்தோடும் வகையில் முகத்துவாரம் தூர்வாரப்பட்டுள்ளது. இதே போன்று மற்ற முகத்துவாரங்களிலும் மழை நீர் தங்கு தடையின்றி செல்ல முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை இரவு பகலாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கண்காணிக்க உதவி பொறியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்களிடம் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்பணிகள் தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது’ என்றார். 2015ல் அடையாற்றில் தண்ணீர் செல்ல வழியில்லாததால் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது….

The post மழை நீர் தங்குதடையின்றி செல்ல வசதியாக அடையாறு, கூவம் உட்பட 4 முகத்துவாரங்களில் மணல் மேடுகளை அகற்றும் பணியை டிச.31 வரை மேற்கொள்ள நடவடிக்கை: ஒப்பந்த நிறுவனங்களுக்கு நீர்வளத்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Adyar ,Koovam ,Water Resources Department ,Chennai ,Kosasthalaiyar ,Buckingham Canal ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...