×

பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தெளிவு பெறுஓம்

பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்?
– வி. செல்வராஜன், திருச்சி.

பதில்: தமிழ் மொழியில் மூன்று அடிப்படையான எழுத்துக்கள் இருக்கின்றன. ஒன்று உயிர் எழுத்து. இன்னொன்று மெய்யெழுத்து. மூன்றாவது இந்த இரண்டும் சேர்ந்த உயிர் மெய் எழுத்து. நம்முடைய உடம்பில் உயிரும் உண்டு. மெய் என்று சொல்லப்படுகின்ற உடலும் உண்டு. எங்கோ இருந்த உயிருக்கு ஒரு உடம்பைத் தேடிக் கொடுத்து உலவ விட்டவர்கள் என்பதால் பெற்றவர்களை அம்மா அப்பா என்று அழைக்கின்றோம். அம்மா அப்பா எனும் வார்த்தைகள், உயிரெழுத்து (அ), மெய் எழுத்து (ம்), உயிர்மெய் எழுத்து (மா) என்ற மூன்று எழுத்தின் கலவையாக இருப்பதை கவனிக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. அதை கருவறையில் வைத்து அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும் மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. அதனால்தான் நம்மை பெற்றவர்களை நாம் `அம்மா அப்பா’ என்று அழைக்கின்றோம்.

?எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பர்ஃபெக்ஷன் இருக்க வேண்டும் என்கிறார்களே?
– வினோத்பாபு, சீலக்காம்பட்டி.

பதில்: இது சாத்தியமில்லாத விஷயம். ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்யும் பொழுதுதான் மெருகு ஏறும். ஆண்டவனே ஒரு அவதாரத்தில் முடியாததால்தான் மறுபடியும் பல்வேறு அவதாரங்களை எடுக்கிறார். இந்த விஷயத்தில் எனக்கு டாக்டர் ந. சுப்புரெட்டியார் சொன்ன ஒரு சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டு போய் ஒரு பெரிய தமிழ் அறிஞரிடம் காட்டினார்.

அவர் அதை படித்துவிட்டு நீங்கள் இன்னும் நிறைய தகவல்களைச் சேகரித்து, இன்னும் நன்றாக உழைத்து, இந்தப் புத்தகத்தை எழுதி இருக்க வேண்டும் என்றார். அதற்கு ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் சொன்ன பதில் வியப்பானது. ‘‘நீங்கள் என்னை புத்தகம் எழுத வேண்டாம் என்பதைத்தான் இப்படி சொல்கிறீர்கள் போல் இருக்கிறது’’ என்று கேட்டுவிட்டுச் சொன்னார். எது ஒன்றுமே முழுமையானதாக இருக்க முடியாது.

எனக்குக் கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு இந்த புத்தகத்தை உழைத்து எழுதி இருக்கிறேன். புதிதாக தகவல் கிடைத்தால், அதை அடுத்த பதிப்பில் சேர்த்துக் கொள்கிறேன். அதை விட்டுவிட்டு எனக்கு முழுமையான தகவல்கள் கிடைக்காத வரை, ஒரு புத்தகம் எழுதக் கூடாது என்று சொன்னால், நான் புத்தகம் எழுதுகின்ற வாய்ப்பு என் வாழ்நாளில் ஏற்படாது என்று சொன்னார். மார்க் டிவைன் என்கின்ற எழுத்தாளர் மிக அழகாகச் சொல்வார்.

நாம் நம்முடைய செயல்களையும் சிந்தனைகளையும் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்து கொண்டே போக வேண்டுமே தவிர, நிறைவான நிலை வரட்டும், செய்து கொள்ளலாம் என்று காத்திருப்பது கூடாது என்பார்.

(Continuous improvement is better than delayed perfection) ?சமீபத்தில் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணம் பாடலைப் படித்தேன். அதிலே ஒரு குழந்தை தாயின் கர்ப்பத்தில் உருவாவதைப் பற்றி மிக நுணுக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ‘‘உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை’’ என்கின்ற ஒரு தொடர் வருகிறது.

பத்தாவது மாதம் என்று நேரடியாகச் சொல்லாமல் 9-ம் ஒன்றும் (9+1) என்று சொல்ல வேண்டிய தேவை என்ன?
– ஜானகி ராஜகோபால், வளசரவாக்கம்.

பதில்: இதே தலைப்பு குறித்து (காதற்ற ஊசியும் வாராது காண்) சில தினங்களுக்கு முன் பேசினேன். அதில் அவகாசம் இல்லாததால் இந்த வரியை விளக்கவில்லை. தாயின் உடலில் 10 மாதம் இருந்து குழந்தை வெளியே வருகிறது என்று சொல்லிவிட்டு அடுத்த வரிக்குச் சென்றுவிட்டேன். ஆனாலும் நம்முடைய மகான்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு காரணத்துக்காக இருப்பதே தவிர அவர்கள் இஷ்டத்துக்கு பாடல்களை எழுதி விடமாட்டார்கள் என்று மட்டும் நினைத்தேன்.

சென்ற வாரம் பிரபலமான மகப்பேறு மருத்துவர் திருமதி ஸ்வந்திரா கோவிந்தராஜன் (இவர் வாணியம்பாடியில் 40 ஆண்டுகாலம் மகப்பேறு மருத்துவராக இருந்தவர். ஆன்மிகத்தில் மிக அதிக நாட்டம் மிக்கவர்) அவர்களிடம் மகப்பேறு குறித்து சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது அவர் சாதாரணமான ஒரு வார்த்தை சொன்னார்.

பொதுவாகவே இப்பொழுது மகப்பேறு மருத்துவர்கள் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை வாரக்கணக்காக வைத்து துல்லியமாக நாளைக் குறிப்பிடுவார்கள். அவர்கள் கணக்குப்படி பத்து மாதம். பத்து மாதம் என்பது (10X4 week/month) 40 வாரங்கள். ஆனால் இந்த 40 வார நிறைவில்தான் எல்லாக் குழந்தையும் பிறக்கும் என்று கட்டாயம் இல்லை. அதற்கு முன்னதாகவும் குழந்தை பிறந்து விடலாம். முப்பத்தி ஆறு வாரங்களுக்கு பிறகு 40 வாரங்களுக்குள் எப்போது குழந்தை பிறந்தாலும் பிரச்னை இருக்காது என்று சொன்னார்.

இப்பொழுது “உயிர் வளர் மாதம் 9-ம் ஒன்றும் நிறைந்து மடந்தை” என்கின்ற வரியை, மகப்பேறு மருத்துவர் சொன்ன கருத்தோடு பொருத்திப் பாருங்கள். விஞ்ஞானத்தின் மீது ஆன்மிக வெளிச்சம் தெரியும். மகப்பேறு மருத்துவர் சொன்னது 2023. பட்டினத்தார் பாடல் எழுதியது 14-ஆம் நூற்றாண்டில். 800 வருடங்களுக்கு முன்.

?பாவம் (sin) என்பது என்ன?
– வாசவி, மேட்டுப்பாளையம்.

பதில்: பாவம் என்பது ஒரு செயலைச் செய்யாமல் தப்பித்துப் போவதால் (escapism) வருகின்ற குற்ற மனப்பான்மை. இதை சொல்லுகின்றது கீதை ஸ்லோகம்.

சுகது: கே ஸமே க்ருத்வா லாபலாபௌ ஜயஜயௌ ததோ யுத்தய யுஜ்யஸ்வ நைவன் பாபமவாப்ஸ்யஸி சுக துக்கங்களைச் சமமாகக் கருதி, லாப நஷ்டங்களையும், வெற்றி தோல்விகளையும் சமமாகக் கருதி, இதை தன் கடமையாக நினைத்துச் செயல்படுபவன் யுத்தம் செய்தாலும் பாவம் அடைய மாட்டான். கடமையை புறக்கணிப்பதைவிட ஒரு மகா பாவம் இல்லை என்பதுதான் கீதை சொல்லுகின்ற கருத்து.

?சமயத்தில் நியாய தத்துவம் என்கின்ற ஒரு கொள்கை இருக்கிறதே, இதன் பொருள் என்ன?
– சுசிபாலன், சைதாபேட்டை.

பதில்: ஒரு விஷயம் சரிதான் என்று நிரூபிப்பதற்கு வாதத் திறமை அவசியம். இந்த வாதத் திறமையின் அடிப்படையில் அமைந்த தத்துவம் நியாய தத்துவம். நியாயம் என்பது தரிசனங்கள் எனப்படும் ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று. இந்த தத்துவப் பிரிவுக்கு அடிப்படையானது கௌத மகரிஷி (அக்ஷபாதர்) என்பவரால் எழுதப்பட்ட நியாய சூத்திரம் என்ற நூல். இந்தத் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் ஏற்புடைய அறிவைப் பெறுவதன் மூலம்தான் ஒரு மனிதனுக்கு துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பார்கள். இந்த ஏற்புடைய அறிவை பெறுவதற்கான நான்கு வழிகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

ஒன்று பிரத்யட்சம் (நேரடிக் காட்சி)
இரண்டு அனுமானம் (உய்த்துணர்வு)
மூன்று உபமானம் (ஒப்பீடு)
நான்காவது சப்தம் (உரைச்சான்று)

இவர்களுக்கு தர்க சாத்திர நூல்கள் உண்டு இதை நிறுவிய கௌதம மகரிஷிக்கு, அட்சபாதர் என்று பெயர். அவர் எப்பொழுதும் ஓயாமல் சிந்தனை பண்ணிக் கொண்டே இருப்பார் என்பதால் வெளி உலகமே அவர் கண்ணுக்குத் தெரியாதாம். அவர் யோசித்துக் கொண்டே ஒரு நாள் ஒரு கிணற்றிலே தவறி விழுந்துவிட்டாராம். அப்போது பகவானே அவரை மேலே ஏற்றி அவருடைய காலிலே கண்ணை வைத்துவிட்டாராம். அவர் பாதத்திலே கண் இருப்பதால் இவருக்கு அட்சபாதர் என்று ஒரு பெயர் உண்டு.

?நடராஜர், குழலூதும் கண்ணன் படம், சிலைகளை வீட்டில் வழி படக்கூடாது என்கிறார்களே, செல்வம் போய் விடுமாம்.?
– சோபியா ரவிக்குமார், பண்ருட்டி.

பதில்: சில விஷயங்கள் யாரோ ஒருவர் சொல்லி அதை மற்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ காலம் காலமாக பின்பற்றி வருவதாகவே இருக்கின்றன. குழலூதும் கண்ணன் படம் இருந்தால் எல்லாச் செல்வங்களும் வெளியே போய்விடும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்றால், இல்லை. எனக்குத் தெரிந்து பல செல்வந்தர்கள் வீடுகளில் நடராஜர் மூர்த்தியின் படத்தையும் குழலூதும் கண்ணன் படத்தையும் பார்த்திருக்கின்றேன். இது நம்முடைய மனதைப் பொறுத்தது. பகவான் எந்த ரூபத்தில் இருந்தாலும் அவர் அருள் செய்யவே செய்வார். நம்முடைய இஷ்ட மூர்த்தி எப்படி இருந்தால் நமக்கு மன மகிழ்ச்சியைத் தருமோ அப்படி வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

?குருசேத்திர யுத்தம் எதனால் நடந்தது?
– பா. தனசேகரன், பாளையங்கோட்டை.

பதில்: சுயநலத்தினால் நடந்தது. பகவத் கீதையின் முதல் ஸ்லோகத்தில் ஒரு நுட்பமான விஷயம் ஒளிந்திருக்கிறது. திருதராஷ்டிரன் சஞ்சயனைப் பார்த்துக் கேட்கிறான். மகாபாரத யுத்த களத்தில் என்ன நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல் என்று ஆணை இடுகின்றான். அதுதான் கீதை முதல் ஸ்லோகம்.

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ​:
மாமகா​: பாண்டவாஸ்சைவ கிமகுர்வத ஸஞ்ஜய

இதில் இரண்டாவது வரியின் முதல் வார்த்தையை கவனியுங்கள். பாண்டவர்களும் கௌரவர்களும் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டியவன், ‘‘என்னுடைய பிள்ளைகளும் (மாமகா) பாண்டவர்களும் என்கின்ற வார்த்தையைப் போடுகின்றான். அப்படியானால் திருதராஷ்டிரனைப் பொறுத்தவரை, அவனுக்கு தன்னுடைய தம்பியின் பிள்ளைகளான பாண்டவர்களைவிட, (அவர்கள் எவ்வளவு தர்மவான்களாக இருந்தாலும்கூட அவர்கள் கேட்பது நியாயமாக இருந்தாலும்கூட) தன்னுடைய மக்கள் வாழ்வும் பாதுகாப்பும் அரசும் மட்டுமே முக்கியம் என்ற சுயநலம்தான் பாரதப் போருக்குக் காரணம்.

?கண்ணன் வெண்ணெய் திருடியதை `ஸ்ரீமத் பாகவதம்’ போன்ற நூல்கள் விரிவாகச் சொல்கின்றன. ஆழ்வார்களும் பாசுரம் பாடுகிறார்கள். பரமாத்மா வெண்ணெயைத் திருடலாமா?
– அபிநவ் கார்த்திக், லால்குடி.

பதில்: முதலில் எல்லா உலகங்களையும் படைத்த பகவான் வெண்ணெயை திருடுவதால் என்ன பயன் என்று கருத வேண்டும். அந்த வெண்ணெயை அவனே உருவாக்கிக் கொள்ளலாமே. அவன் ஏன் திருட வேண்டும்?

ஆக அவனுக்கு சாதாரண வெண்ணெயை திருட வேண்டிய அவசியம் இல்லை. பிறகு வெண்ணெய் திருடியதாக ஏன் ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது என்றால், வெறும் தத்துவங்களைச் சொன்னால் அது மக்களுடைய மனதில் ஏறாது என்பதற்காக, அதை கதைகளாகவும் குறியீடுகளாகவும் சொன்னார்கள். இந்த வெண்ணெய் திருடிய சம்பவத்தை திருமங்கை ஆழ்வார் மிகமிக ஓசை நயத்தோடு சந்தத்தில் அற்புதமாகப் பாடுகிறார்.

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு
நாரார் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை
போரார் வேல் கண்ட மடவாள் போந்தனையும் பொய் உறக்கம்
ஒராதவன் போல் உறங்கி அறிவுற்று
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த
மோரார் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே – வெண்ணெய் உண்டான்

– என்பது தத்துவம்.

பானை என்பது உடல். வெண்ணெய் என்பது ஆன்மா அது தூய்மையாக இருக்கிறது. கெடாததாக இருக்கிறது. மோர் என்பது சாரமில்லாத ஒரு பொருள். அதாவது சம்சாரத்தைக் குறிப்பது. பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தனக்குரிய ஆன்மாவை, தன்னுடைய உலகமான பரமபதத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார். அப்பொழுது உடல் என்கிற பானையையும் உலக வாழ்க்கை என்கிற மோரையும் பூமியில் விட்டுவிட்டுத் தான் செல்ல வேண்டும். எனவே, வெண்ணெயை எடுத்துக் கொண்ட அவன், பாறைகளை கீழே உருட்டி விட்டான் என்பதை ஒரு சுவையான சம்பவமாகச் சொன்னார்கள்.

?ராகு – கேது எதைக் குறிக்கிறது?
– ராமசந்திரமூர்த்தி, லாலாப்பேட்டை.

பதில்: ராகு பிரம்மாண்டத்தைக் குறிக்கிறது. பெரிய சிந்தனைகளைக் குறிக்கிறது. திட்டங்களைக் குறிக்கிறது. தற்காப்பைக் குறிக்கிறது. தைரியத்தோடு எதிர்ப்பதைக் குறிக்கிறது. வெற்றியைக் குறிக்கிறது. கேது ஞானத்தைக் குறிக்கிறது. அடக்கத்தைக் குறிக்கிறது. ரகசியங்களைக் குறிக்கிறது.ராகு – கேது கண்ணுக்குத் தெரியாத புள்ளிகள் (Nodes). உள் இயக்கங்கள். ஆனால், மற்ற கிரகங்களைக் கட்டுப்படுத்தும் இயக்கங்கள். இதைப் புரிந்து கொண்டால், உலகியல் வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும், மிகப்பெரிய சாதனைகளைப் புரியலாம்.

The post பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்? appeared first on Dinakaran.

Tags : V. Selvarajan ,Trichy ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து