×

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் 2024 ஜனவரிக்குள் பணிகளை முடிக்க இலக்கு: 9,519 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்த ரூ.3,981 கோடி ஒதுக்கீடு, மாவட்ட அளவில் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு


கிராம மக்கள், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு தேவையான வசதிகளான கல்வி, சுகாதாரம், சந்தைப்படுத்தல் போன்ற வசதிகளை அடைய, கிராம சாலைகள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன. பரந்த ஊரகச்சாலைகள் தொகுப்பினை பயன்படுத்த தக்க வகையில், ஏற்கனவே உள்ள சாலைகளை பராமரிக்கவும் புதிய சாலைகள் அமைக்கவும், உகந்த அளவில் நிதியை வழங்குவதும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  இந்நிலையில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டமானது 2021-22 பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கிலோ மீட்டர் இருவழித்தட சாலைகளை 4 வழித்தட சாலைகளாகவும், 6,700 கி.மீ. நீளமுள்ள ஒரு வழித்தட மற்றும் இடை வழித்தட சாலைகளை இருவழி சாலைகளாகவும் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்கிறது. போக்குவரத்து செறிவு மற்றும் மேம்பாடுகளின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் சாலைகளைத் தேர்வு செய்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஊரக சாலைகளின் மொத்த நீளம் 1,55,351 கி.மீ., நீளம் ஆகும். இவற்றில் 1.02 லட்சம் கி.மீ., சாலை தார் சாலையாகும்.

மொத்த தார் சாலையில் 43,214 கி.மீ., நீளமுள்ள சாலைகள் 5 ஆண்டுகளுக்கு உட்பட்டவையாகவும், 58,875 கி.மீ., நீளமுள்ள சாலைகள் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாகவும் உள்ளன. இதனிடையே 2 ஆண்டுகளில் ரூ.4000 கோடி ஒதுக்கீட்டில் 10,000 கி.மீ., சாலைகளை மேம்படுத்துவதே, இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இவற்றில் 5 ஆண்டுக்கான தொடர் பராமரிப்பும் அடங்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டின்படி 9,519 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட பணிகள் ஆகும். இதில் கடந்த மாதம் வரை 1,455 கி.மீ. நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஸ்கள் செல்லும் சாலைகள், குக்கிராமங்களை இணைக்கும் ஒற்றை இணைப்பு சாலைகள், பின்தங்கிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டத்தின் முக்கிய சாலைகள் மற்றும் புறவழிச்சாலைகளை இணைக்கும் சாலைகள், பள்ளிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சந்தைகளை இணைக்கும் சாலைகள் மேம்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3,981 கோடிக்கு 9,519 கி.மீ. நீளத்துக்கு 7,351 சாலைப்பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே எடுக்கப்பட்ட 9,519 கி.மீ., நீளத்தில் கடந்த மாதம் வரை 1,455 கி.மீ. நீளம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணி 5 சதவீத நிதி ஒதுக்கீட்டில் 14 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. 2 நிதியாண்டில் மட்டும் 7351 சாலை மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட பணிகளில் 1041 பணிகள் முடிவடைந்துள்ளன. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட பணிகளின் எண்ணிக்கையில் 95 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் 1041 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது பணிகள் எவ்வளவு விரைவாக நடக்கிறது என்பதை காட்டுகிறது.

மேலும், மேம்பாட்டிற்காக எடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் பணிகளின் முன்னேற்றம் சற்று தொய்வாக உள்ளது. குறிப்பாக சிறு பாலங்கள், தடுப்புச் சுவர் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் முடிக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு நிலுவையில் உள்ள பணிகளை துரிதப்படுத்தப்பட்டு இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அதேபோல், அனைத்து சாலைகளும் 2024 ஜனவரி மாதத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் 2024 ஜனவரிக்குள் பணிகளை முடிக்க இலக்கு: 9,519 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்த ரூ.3,981 கோடி ஒதுக்கீடு, மாவட்ட அளவில் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!