×

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இறைத்தன்மையை அடைய முடியுமா?

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இறைத்தன்மையை அடைய முடியுமா?
– டி.கே. கலா, பெரம்பலூர்.

எழுதப் படிக்கத் தெரிவதற்கும் இறைவனை உணர்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அறிவில் குறைந்த ஆயர் குலத்தினர், கற்றறியாத குகன், சபரி, கண்ணப்ப நாயனார், நந்தனார், திருப்பாணாழ்வார் போன்ற எத்தனையோ பக்தர்களால் இறைவனைக் காண முடிந்துள்ளது. ஞானசம்பந்தர், குமரகுருபரர், சுந்தரர், ரமண மகிரிஷி போன்ற எத்தனையோ மகான்கள் இயற்றிய பாமாலைகள், நன்கு கற்ற அறிஞர்களாலும் போற்றப்படுகின்றன. தன்னையடைய வேண்டும் என்ற உண்மையான ஏக்கம் இருக்கிறதா என்பதை மட்டும்தான் இறைவன் பார்க்கிறார். அவன் படித்தவனா, மூடனா என்று பார்ப்பதில்லை.

ஹிந்துமதத்தில் பசு கடவுளாகவே போற்றப்படுகிறதே!
ராமானுஜம், ஸ்ரீரங்கம்.

பசு ஹிந்துக் கலாசாரத்தின் புனித சின்னமாகும். செல்வத்தைத் தரும் மகாலட்சுமியும் மற்றும் அனைத்து தேவதைகளும் பசுவின் உடலில் வசிப்பதாகக் கருதப்படுகின்றது. வேதத்தில் பசு, மிகவும் புகழ்ந்து பேசப்படுகின்றது. மேலும் நமது முன்னோர், தன்னை ஈன்றெடுத்தவள் மட்டும் அல்ல, அவளையொத்த மற்ற பெண்களை மட்டும் அல்ல-தனக்கும் பால் கொடுத்து, தனது தாய்க்கும் பால் கொடுத்து, தாய்ப்பால் இல்லாதபோது, அதற்கு நிகரான தன் பாலைக் கொடுக்கின்ற பசுவையும் தாயாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்தனர். இதனால்தான் நாம் பசுவைப் புனிதமாகக் கருதி வழிபட்டுவருகிறோம்.

அடங்காப் பிடாரி என்று சிலரைச் சொல்கிறோம். பிடாரி அம்மன் என்ற தேவியையும் வழிபடுகிறோம். அதற்கு என்ன பொருள்?
– ஹரிணி, குன்னூர்.

உலக அன்னையான அம்பிகைக்கு பீடாபஹாரி என்றும் ஒரு பெயர். பீடாபஹாரி என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு நம் பீடைகளை நீக்குபவள் என்று அர்த்தம். பீடாபஹாரி அம்மன் என்ற பெயரே பேச்சு வழக்கில் மருவி, பிடாரி அம்மன் என சிலரால் அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் கோபத்தால் வையும்
போதும் ஆசிர்வாதமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். பிடாரி என்பதால் அந்த அம்மன் அருள் உனக்குக் கிட்டட்டும் என்று திட்டல் ஆசிர்வாதமாகக் கூடக் கொள்ளலாம். ‘நீ நாசமத்துப் போக’ என்றும் ஒரு வசவு உண்டு. அதாவது நாசமற்றுப் போக என்று பொருள். கோபத்தை வெளிப்படுத்துவதிலும் எத்தனை நல்லெண்ணம் பாருங்கள்!

அன்பே வடிவானவள் தாய். அன்னையாகிய காளி கோரரூபம் கொண்டிருப்பது ஏன்? கையில் ஆயுதம் ஏந்தித் தண்டிக்கும் நிலையில் இருப்பது ஏன்?
– கார்த்திக் குணாளன், கூடுவாஞ்சேரி.

குழந்தையை வளர்க்கும் அன்னை, அன்புடன் கொஞ்சிச் சீராட்டவும் செய்வாள்; தவறான வழியில் செல்லும்போது திட்டியும் அடித்தும் திருத்தவும் முற்படுவாள். ஆனால் இரண்டும் குழந்தையின் நன்மைக்காகச் செய்யப்படுபவைதான். பாலும் தேனும் கொடுப்பது போல நோயைத் தடுக்கவும் விலக்கவும் மருந்தும் தேனும் அவசியம். இறைவனைத் திருமாலின் வடிவில் காக்கும் கடவுளாக வேதங்கள் குறிப்பிடுகின்றன. கோபம் வந்து நெற்றிக்கண்ணைத் திறந்து எரிக்கும் சிவபெருமானாகவும் குறிப்பிடுகின்றன. ஒன்று அறக்கருணை; மற்றது மறக்கருணை. இரண்டுமே நமது நன்மைக்குத்தான். அதுபோல் அன்பே வடிவமாய் அம்பிகை இருந்தாலும் நம்மிடையே உள்ள தீயதை அழிக்க, கோரரூபம் கொண்டுள்ளாள்.

ராஜகோபுரம் கட்டுவதன் தத்துவம் என்ன? அப்படி ராஜகோபுரம் அமையாத ஆலயங்களுக்கு மகிமை இல்லை என்று சொல்லலாமா? அதன்மீது ஏறி இறங்குவது சரியா?
– ஷெண்பகம், காட்டுமன்னார்குடி.

ஒரு ஆலயத்திற்கு ராஜகோபுரம் கட்டுவது பகவானை நினைவுபடுத்துவதற்காகத்தான். திருச்சிக்குத் தொலைவில் இருக்கும்போதே ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் ஒருவனுடைய கண்களுக்குப் படுகிறது. அது என்ன தெரியுமா? என்று கேட்டால் ரங்கநாதர் ஆலய ராஜகோபுரம் என்று சொல்கிறான். அவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகக்கூட இருக்கலாம். ஆனால் ரங்கநாதனின் திருநாமத்தை ராஜகோபுரம் சொல்ல வைக்கிறதல்லவா? கோயிலுக்கு வரமுடியாதவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ராஜகோபுரத்தை தரிசனம் செய்தாவது ரங்கநாதரை மனதார எண்ணித் திருப்தி அடைவார்கள். ஆனால் ராஜகோபுரத்தைத் தரிசனம் செய்வதுதான் விசேஷம். அதன்மீது கால் படும்படி ஏறி இறங்குவது சரியல்ல.

தொகுப்பு: அருள்ஜோதி

The post எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இறைத்தன்மையை அடைய முடியுமா? appeared first on Dinakaran.

Tags : D. K. Kala ,Perambalur ,God ,Dinakaran ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை