×

தீராத நோய்கள் தீர்க்கும் தில்லைக்காளியம்மன்

சிதம்பரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள முக்கியமான திருத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில். அந்த நடராஜர் கோயிலை காட்டிலும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுவது தில்லை காளியம்மன் கோயிலாகும். தில்லையம்மன் என்ற பெயரிலும் அம்மன் அழைக்கப்படுகிறார். நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி அம்மன் பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதிக்கு அடுத்ததாக வீணை வித்தியாம்பிகை அம்மனும், தட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் கடம்பவன தட்சிணா ரூபிணியாகவும் காட்சியளிக்கின்றார்.

கோப சக்தியாக விளங்கும்போது காளியாகவும், போர்சக்தியாக விளங்கும்போது துர்கையாகவும் அருள்பாலிக்கிறார் தில்லை காளியம்மன். ஒரு சன்னதியில் உக்ர காளியாக, ஆயுதங்களுடன், எட்டுக் கைகளைக் கொண்ட தில்லை காளியாகவும், மற்றொரு சன்னதியில் சாந்தமான நான்குமுக பிரம்ம சாமுண்டேஸ்வரி அம்மனாகவும் காட்சியளிக்கிறார். இங்குள்ள உக்ர காளியை வணங்குவதன் மூலம் பில்லி சூனியம், பகை, தீராத நோய்கள் போன்றவை நீங்கும். சாந்தமான சாமுண்டேஸ்வரி அம்மனை வணங்கினால் கல்வி, செல்வம் பெருகும்.

நான்கு முகங்களுடன் அவதாரம்

சிவனுக்கும், பார்வதிக்கும் இடையே தங்களில் யார் அதிக சக்தி கொண்டவர்கள் என விவாதம் ஏற்பட்டது. பார்வதிதேவி, சக்திதான் என வாதிட்டாள். சிவனும், சக்தியும் ஒன்று என உணர்த்த பார்வதியை உக்கிர காளியாக மாற சிவன் சபித்துவிட்டார். இதனால் வருந்திய பார்வதி சிவனிடம் சாப விமோசனம் வேண்டினாள். சிவபெருமானோ, சிதம்பரத்தில் உள்ள தில்லையில் காளியாக தவமிருந்து தன்னை அடைய அருளினார். அவ்வாறே பார்வதி அம்மையார் தில்லை நடராஜரை வேண்டியபடியே அமர்ந்து உக்கிர காளியாக அவதரித்தார்.

ஒரு சமயம் சிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த நடனப் போட்டியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்னும் பெயரில் உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன் காலை தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறு காளியால் செய்ய முடியுமா என சவாலிட, பெண்மைக்குரிய நாணத்தால் காளியால் அந்த நடனத்தை ஆட முடியவில்லை. இதனால் காளி அதிக கோபம் கொண்டாள். அவளது கோபத்தை போக்கும் வகையில் பிரம்மா, வேதநாயகி என புகழ்பாடி நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அவ்வாறே இத்தல காளி, பிரம்மனை போல நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார்.

தீராத நோய்கள் தீரும்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து, அம்மனுக்குப் புடவை சாற்றி, அர்ச்சனை செய்து, மாவிளக்கேற்றி வழிபட்டால், தீராத நோயும் தீரும். திருமணத் தடை விலகும், தொட்டில் கட்டி பிரார்த்தித்தால் பிள்ளை வரமும் கிடைக்கும் என்று வழிபடுகின்றனர். காளிதேவி சாபவிமோசனம் பெற்ற இத்தலத்தில் சாப விமோசனம் வேண்டுவோரும், எதிரிகளால் சிரமத்திற்கு உள்ளானவர்களும் வழிபட்டுச் செல்லலாம்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் காளியம்மன் மகம் நட்சத்திரத்தில் அதிதேவதையாக உள்ளார். அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வேண்டுதலை இத்தல அம்மனிடம் முறையிட்டால் விரைவில் காரியம் கைகூடும். தோஷங்கள் நீங்க, குடும்பத்தில் நிலவும் கருத்துவேறுபாடுகள் அகல காளிக்கு அபிஷேகம் செய்து, குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

செல்வது எப்படி?

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிதம்பரத்திற்கு பேருந்து வசதி உள்ளது. இங்குள்ள நடராஜர் கோயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தில்லைக் காளியம்மன் ேகாயில் உள்ளது. ரயில் வசதியும் உண்டு.

The post தீராத நோய்கள் தீர்க்கும் தில்லைக்காளியம்மன் appeared first on Dinakaran.

Tags : Thilaiyamman ,Chidambaram Dilla ,Natarajar ,Temple ,Chidambaram Cuddalore ,Chidambaram ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...