×

பால்கோவா கம்பெனியில் பாய்லர் வெடித்து சிதறியது தொழிலாளி படுகாயம் அணைக்கட்டில் பரபரப்பு

அணைக்கட்டு, நவ.1: அணைக்கட்டில் தனியார் பால்கோவா கம்பெனியில் பாய்லர் வெடித்து தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு கிராமம், பிள்ளையார் கோயில் தெருவில் சுப்பிரமணி(50) என்பவர் பால்கோவா கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் அணைக்கட்டு அருந்ததியர் பகுதியை சேர்ந்த உதயகுமார்(46) உட்பட தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை உதயகுமார் மட்டும் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பால்கோவா தயாரிக்கும் இயந்திரத்தின் கொதிகலனில் அதிக அழுத்தம் ஏற்பட்டு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் உதயகுமார் படுகாயம் அடைந்தார். மேலும், பாய்லர் மெஷின் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சீட் உடைந்து சேதமானது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் படுகாயங்களுடன் இருந்த உதயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வருவாய் துறையினரும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்கோவா கம்பெனியில் பாய்லர் வெடித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அணைக்கட்டு தாலுகாவில் பால்கோவா தயாரிக்கும் தனியார் கம்பெனிகள் பல போதிய பாதுகாப்பின்றி இயங்கி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இயங்குகின்றனவா என ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பால்கோவா கம்பெனியில் பாய்லர் வெடித்து சிதறியது தொழிலாளி படுகாயம் அணைக்கட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Palcoa Company ,Damaktu ,Balcoa Company ,Dinakaran ,
× RELATED தேர்தல் அலுவலரிடம் போதையில் தகராறு எஸ்ஐ சஸ்பெண்ட்