×

பசிப்பிணி போக்கும் ஓதனவனேஸ்வரர்

திருச்சோற்றுத்துறை

சோற்றுத்துறை வயல்களின் சாய்ந்த செந்நெற்கதிர்களின் மீது சூரியன் தன் செங்கிரணங்களை வீச வயலே பொன் வேய்ந்த தகடாக ஜொலித்தது. செங்கதிர்களின் எதிரொலிப்பில் விழித்த மக்கள் வயற்காட்டை நோக்கி நடக்கலாயினர். ஆதவன் உச்சியை நெருங்கும்முன் பெரும் போராக கதிர்கள் அறுத்துக் குவித்தனர். அந்திச் சிவப்பு கீழ்வானத்தில் திரண்டு நகரும் வேளையில் குவித்த கதிர்களை தூற்றினர். நெல்மணிகளை ஒன்றாகக் குவித்தபோது அது மலையாகப் பெருகி ஆதவனையே மறைத்தது. அந்தி சரிந்து இருள் கவிழ மக்கள் குடில்கள் நோக்கித் திரும்பினர்.

அந்த அருளாளத் தம்பதியர் கோபுரமாகக் குவிந்திருந்த நெற்குவியலைப் பார்த்து அகமகிழ்ந்தனர். எண்ணாயிரம் அடியார்கள் வந்தாலும் கரையாது அமுது செய்யலாம் என்று மனதிற்குள் குதூகலித்தனர். சீரடியார்கள் அருளால தம்பதியரின் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே சிவநாமச்சாரலில் ஓயாது நனைந்து, நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை அந்த திவ்ய பக்த தம்பதியர் தம் மனச்சிறைக்குள் முடிந்துவைத்தனர்.

நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். சீரடியார்களின் அடிபரவி தம் சிரசில் அவர்கள் திருவடி சூடி பேரானந்தம் பொங்க வாழ்ந்தனர். ஐயிரண்டு நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர். கயிலைநாதனைத் தவிர கிஞ்சித்தும் வேறெந்த எண்ணமும் இல்லாது இருந்தனர். ஈசன் இன்னும் அவ்விருவரின் மகோன்னதத்தை மூவுலகும் அறியும் வண்ணம் விளையாடத் தொடங்கினார்.

அந்த ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான். அக்னியும் கைகோர்க்க சூரியனும் சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினர். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போனது. பூமிப்பந்து பிளவுற்று நீரில்லா கருவேலக்காடாக மாறியது. அடியார்கள் சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல்வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதிகள் தவித்தனர்.

நெற்கிடங்கு வெறும் சிறு கூடையளவு குறுகியது கண்டு குற்றவுணர்வுற்றனர். தாங்கள் அன்னம் ஏற்காது இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர். காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலியாக மாறின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர்கள் மெய்வருந்தி சோறுண்ணாது துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். சிவனடியார்களும் சூழ்ந்து நின்று அவர்களை ஆற்றுப்படுத்த துக்கம் இன்னும் மடைஉடைந்த வெள்ளமாகப் பெருகியது.

ராப்பகல் அறியாது கண்கள் மூடித் தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட்கண்களை விரித்துப்பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பும் எடுக்க எடுக்க குறையாத அட்சயபாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான். அன்னத்தை அட்சயபாத்திரம் சோவெனப் பொழிந்தது. ஓயாது ஓதனத்தை சுரந்தது. அக்காட்சியைக் கண்ட அருளாள தம்பதியர் ஓதனவனேசா…ஓதனவனேசா…என அவன் நாமத்தை சொல்லி ஆனந்தக் கூத்தாடினர்.

(ஓதனம் என்றால் அன்னம் என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடைமழையால் ஆறுகளும். தாமரைத் தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் இணையிலா ஈசனின் தாள் பணிய அரனின் அருட்கை துணை நிற்கும் என திவ்யதம்பதியை முன்னிறுத்தி விளையாடினார். அன்றிலிருந்து அட்சயப் பாத்திரம் கடலாகப் பொங்கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது. சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது.

எங்கேயோ தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மஹரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதவனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படு வதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை வெகு சீக்கிரம் நெருங்கினார். கயிலைக்கு ஏவிய அருளாள தம்பதி அருவமாய் கௌதமர் வருகையை உணர்ந்து இன்னும் சிலிர்த்தனர். ஊரே திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றது. ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார். அருளாள தம்பதி பற்றி ஊர்மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார்.

அன்னமிடுதலை விட வேறு தர்மம் உண்டோ என அதை வழிமொழிந்தார். அவ்வழியையே எனைத் தொடரச் சொல்லி ஈசன் என்னை இங்கு இயக்கினான் என்று கூற சோற்றுத்துறையே சிலிர்த்துக் குதூகலித்தது. ஈசன் இன்னும் ஒருபடி மேலேபோய் அவ்வூரையே சோற்றுக்கடலில் ஆழ்த்திவிடத் துணிந்தார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை மெல்ல தமது அருட்கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தது. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறியிருப்பது பார்த்த அடியார்களும், பக்தர்களும் நமச்சிவாய…நமசிவாய…என விண்பிளக்க கோஷமிட்டனர்.

பச்சைவயலுக்கு பொன்காப்பிட்ட செந்நெற்கதிர் கதிர்களுக்கு மத்தியில் வெண்முத்துக்கள் கோர்த்த மாலைபோல் அவ்விடம் ஒளிர்ந்தது. ஊரார் வயலில் இறங்கி கூடைக்குள் சூடாக அன்னப்பருப்பை நீவியெடுக்க அழகாக கூடையில் சென்று அமர்ந்தது. அன்னமலர்கள் மலையாகக் குவிந்தது. ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது. அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, தேவாதி தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் மழபாடியில் மையம் கொண்டனர்.

பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது. சோற்றுத்துறை நாதனின் அருள்மணம் அன்னத்தோடு இயைந்து குழைந்தது. அமுதமாக ருசித்தது. உண்டோர் பெரும்பேறுற்றனர். திருச்சோற்றுத்துறை சுடர்விட்டுப் பிரகாசித்தது.

இத்தலத்தின்கண் இன்னும் எத்தனையோ விஷயங்கள் விரவிக்கிடக் கின்றன. நான்கு வேதமோதிய துர்பாக்கியன் என்பான் சூழ்நிலையால் பஞ்சமாபாதகங்கள் செய்தான். தன் வீட்டிலேயே திருடினான். மகனென்று அறியாத தந்தை திருடன் என அடித்துக் கொன்றான். இறந்தவன் பிரம்மராட்சனாக மாறி வருவோர் போவோரின் இரத்தம் குடித்து அடாது செய்தான். சுதர்மன் எனும் சிவனடியார் சோற்றுத்துறைக்கு வரும்போது குறுக்கே தோன்றி வழிமறித்தான்.

சுதர்மன் நீ யார் என்ற கேட்டமாத்திரத்திலேயே வந்தவர் சிவனடியார் என்றறிந்தான். அவரின் தேஜஸிலேயே தம் பிரம்மராட்சஸ சொரூபம் களையப்பெற்றான். அத்தலத்திலே சூட்சும வடிவத்தில் திரிந்து ஓதனவனேஸ்வரரை வணங்கி திவ்யரூபம் பெற்று மேலுலகம் சென்றான். பஞ்சமாபாதகங்கள் புரிந்தவனும் தலத்தில் கால்வைக்க அவன் மனம் மாறும் என்பது உறுதி. கோயிலின் வெளிப்பிரகாரத்தே அம்பாள் தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறாள்.

எழில்கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவளுக்கு அன்னபூரணியெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள் குளிர்பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள் மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரணசொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப்பிணியை அறுப்பவள் இவளே.

இத்தலம் கும்பகோணத்திலிருந்து வருபவர்கள் தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை வந்து, பின் அய்யம்பேட்டை – கண்டியூர் சாலையில் 5 கி.மீ. பயணித்தால் திருச்சோற்றுத்துறையை சென்று அடையலாம். தஞ்சை மற்றும் திருவையாறு வழியாக வருபவர்கள், தஞ்சாவூர் – திருவையாறு சாலையிலுள்ள திருக்கண்டியூரை அடைந்து, பின் கண்டியூர் – அய்யம்பேட்டை சாலையில் 5 கி.மீ. பயணித்தால் திருச்சோற்றுத்துறையைச் சென்று அடையலாம்.

தொகுப்பு: கண்ணன்

The post பசிப்பிணி போக்கும் ஓதனவனேஸ்வரர் appeared first on Dinakaran.

Tags : Trichotutura ,
× RELATED தாயின் உயர் தகுதி