×

மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம்

மதுரை: மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் பள்ளி மாணவர் 12 தேர்வு எழுதியதில் முறைகேடு குறித்த வழக்கில் நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. விடைத்தாள் திருத்தும் போது மதுரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் இரு விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்த விசாரணையில் மதுரை பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பள்ளியில் படித்த அடுத்தடுத்த பதிவெண் கொண்ட இரு மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்காக ஒரு மாணவர் எழுதிய தேர்வை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கூறி நோட்டீஸ் தொடுக்கப்பட்டிருந்தது.

தேர்வு முறைகேடு தொடர்பாக அரசு தேர்வுகள் இணை இயக்குநர் நோட்டிஸை ரத்து செய்யக் கோரி தந்தை மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் சமுதாயத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என நீதிபதி கூறினார்.

மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அரசு தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து, 12ம் வகுப்பு தேர்வு முறைகேடு நடந்து 6 மாதம் ஆகியும் இதுவரை வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, 12 தேர்வு முறைகேடு குறித்து உடனே மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறைகேடு வழக்கை சிபிசிஐடி கூடுதல் காவல்துறை இயக்குனர் விசாரணை நடத்தி 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை நீதிபதி காட்டம் appeared first on Dinakaran.

Tags : EC Court Branch ,Judge ,Kattam ,Madurai ,High Court ,ICourt ,Dinakaran ,
× RELATED செல்வாக்கு மிக்க இருவர் தன்னை...